ஆயிரத்தில் ஒருவன் செல்வராகவன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த படம். படத்தின் கரு "தஞ்சையை விட்டு தப்பி சென்ற சோழர்களிடம் இருந்து பாண்டியர்கள் தங்களின் குல தெய்வத்தை மீட்பது, தஞ்சைக்கு தங்களை அழைத்த்து செல்ல தூதுவன் வருவான் என்று சோழர்கள் காத்திருப்பது" போன்று அமைக்கப்பட்டிருக்கும்.
1. படத்தின் துருப்பு சீட்டிலேயே சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இந்த கதைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறப்பட்டிருக்கும். அப்படியிருக்க அவர்களின் பெயர்களை பயன்படுத்தி கதைக்களம் அமைத்தது ஏனோ?
2. இராஜராஜ சோழன் அரியணை ஏறுவதற்கு முன்னமே தஞ்சாவூர் தலைநகராக மாற்றப்பட்டு விட்டது. இராஜராஜனின் தந்தையான சுந்தர சோழன், தன் சகோதரன் மகன் உத்தம சோழனுக்கு தஞ்சையில் முடி சூட்டிய பிறகு காஞ்சிபுரம் சென்று பாலாற்று கரையில் நிறுவப்பட்ட பொண்மாளிகையில் தன்னுடைய இறுதி நாட்களை கழிக்கிறார். தன் மகன் இராஜராஜ சோழன் அரியணை ஏறுவதை கூட காண பாக்கியம் இல்லாமல் 973 இல் உயிர் நீத்தார். பொண்மாளிகையில் உயிர் நீத்ததால் "பொண்மாளிகை துஞ்சின தேவர்" என்று அறியப்பட்டார். உத்தம சோழனின் மறைவுக்கு பிறகு 985 இல் இராஜராஜன் சோழ பேரரசின் பெரும் சக்கரவர்த்தியாக பொறுப்பேற்கிறார். பிறகு தனது மகனான இராஜேந்திர சோழனின் முடிசூட்டு 1014 இல் நடக்கிறது.
இராஜேந்திர சோழன் 1025 வரை தஞ்சையை தலைநகராகக் கொண்டு தான் கொடை புரிகிறான். இராஜேந்திரன் தன்னுடைய 11 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் வங்காள மஹிபாள மன்னனை தோற்கடித்து கங்கை வரை புலிக்கொடியை பறக்கவிட்டு "கங்கைகொண்ட சோழன்" என்ற பட்டம் பெறுகிறான். அதன் பிறகே கங்கைகொண்ட சோழீஸ்வரத்தை நிறுவி தலைநகராக பிரகடனப்படுத்துகிறான். 1025 முதல் சோழர்களின் கடைசி நேரடி வாரிசான அதிராஜேந்திரன்(1070) வரையிலும், அதன் பிறகு குலோத்துங்க சோழன் வழி வந்த தெலுங்கு சோழர்களின் கடைசி மன்னனான மூன்றாம் இராஜராஜன்(1279) வரை கங்கைகொண்ட சோழபுரமே தலைநகராக விளங்கியது.
1133 முதல் 1150 வரை ஆட்சி செய்த இரண்டாம் குலோத்துங்கன் மட்டுமே தனது வசிப்பிடத்தை சிதம்பரத்திற்கு மாற்றியதாக தெரிகிறது. மற்றபடி சோழர்களின் 400 ஆண்டுகால ஆட்சி பறிபோகும் வரை ஏறத்தாழ 250 ஆண்டுகள் கங்கைகொண்ட சோழபுரமே தலைநகராக இருந்துள்ளது. அப்படி இருக்க ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இறுதி சோழ மன்னன் தஞ்சையில் இருந்து தப்பி சென்றதாக காட்டப்பட்டுள்ளது. இத்தனை நூற்றாண்டுகள் கழித்தும் தலைநகரமாக இல்லாத ஒரு ஊருக்கு போய் சேர வேண்டும் என்று சோழ வாரிசுகளுக்கு சொல்லபட்டுள்ளதாக கதை நகர்கிறது. 250 ஆண்டு கங்கைகொண்ட சோழபுரம் தலைநகராக இருந்ததால் சோழ தேச மக்களுக்கே தஞ்சை தலைநகராக இருந்ததே நினைவு இருக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் தஞ்சை நோக்கி அழைத்து செல்ல தூதன் வருவான் என்று கதை கட்டிவிட்டு இருப்பார் செல்வராகவன். இதைக் கண்டு புல்லரித்து, புளாங்கிதம் அடைந்து சில்லரையெல்லாம் சிதறவிட்டு இருக்கிறோம் நாம். தமிழக சினிமாவின் அறிவுஜீவிகளில் ஒருவராக கருதப்படும் இரா. பார்த்திபன் கூட இந்த சிறு ஆராய்ச்சியை கூட செய்யாமல் படத்தில் முக்கிய பாத்திரமாக நடித்தது தான் இன்னும் அபத்தம். என்ன செய்வது அப்போலாம் இந்த அளவுக்கு நமக்கு வரலாற்று அறிவு இல்லை. அதனால தான் வந்தவன் போனவனெல்லாம் அந்த கலாச்சாரம், இந்த கலாச்சரம்னு நம்ம மேல மாடு மேஞ்சிட்டு போயிட்டனுங்க.
- சத்தியராஜ் சத்தியமூர்த்தி.08-02-2020.
Super Anna
ReplyDelete