தஞ்சை பெருவுடையார் கோயில் நம் சோழ தேசத்து பெருந்தலைவன் மும்முடி சோழன் யுத்தமல்லன் ஸ்ரீ இராஜராஜ சோழ பெருந்தகையால் அய்யனுக்காக எழுப்பப்பட்டது. அதற்கான குடமுழுக்கு தை மாதம் 22- ஆம் நாள் ஏகாதசி சுபமுகூர்த்த நாளில் நல்ல நேரம் பார்த்து நடத்தப்பட்டுள்ளது???. கருடனாக இராஜராஜ சோழன் வந்தார், தூதுவன் வந்தான் மாரி பொழிந்தது, சோழ வம்சத்தினர் கோபுரத்தை சுற்றி நின்று வாழ்த்தினார்கள் என்றெல்லாம் டீகோடிங் செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த சாமானியனின் சில கேள்விகள்.
1. 2010 ஆம் ஆண்டு கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த போது பெருவுடையார் கோயில் 1000 வது ஆண்டு சதய விழா கொண்டாடப்பட்டது. 7 நாட்கள் நடந்த நிகழ்வின் போது கூட கோயிலின் கட்டுமானத்தில் இவ்வளவு சேதமும், மாற்றங்களும் செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இப்போது குடமுழுக்கு செய்வதற்கு கோபுரம் மேல் ஏறுவதற்கு சாரம் கட்டியதன் மூலம் எவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்துகூட பார்க்க முடியவில்லை. நகரை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், 200 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள். இந்த கேமராக்கள் பொருத்துவதற்கும், இயக்குனர் வேல்ராஜ் அவர்கள் மின்விளக்கு அமைத்து கோபுரத்திற்கு ஒளி கொடுத்தார் என்று நீங்கள் பெருமைபீத்தி கொள்வதற்கும் பின்னால் கோயிலின் கட்டிட அமைப்பில் எவ்வளவு சேதம் ஏற்படும் என்று எவரும் யோசிக்கவில்லையா?
2. ஒரு கோயிலின் குடமுழுக்கு என்பது அந்த கோயிலில் குறைந்தபட்சம் ஒரு வருடம் திருப்பணிகள் செய்து, குறிப்பிட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு நடத்தப்பட வேண்டும். அப்படி என்ன திருப்பணிகள் பெருவுடையார் கோயில் செய்யப்பட்டது? கோயிலின் மொத்த பரப்பில் கோயிலை மையப்படுத்தி இரண்டு பக்கமும் புல் தரை அமைக்க இடம் விடப்பட்டிருக்கும். ஆனால் இன்று அந்த பரப்பளவு குறைக்கப்பட்டு கான்கிரீட் போட்டு மொழிகிவிட்டார்கள். இது தான் நீங்கள் செய்த திருப்பணியின் லட்சணமா ? தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும், ஆகமங்களை தூக்கி எறிய வேண்டும் என்று கடைசி நேரத்தில் வந்து கம்பு சுத்தியவர்கள் திருப்பணிகள் பற்றி ஏன் சிறிதளவு கூட கவலைப்படவில்லை.
3. நாங்கள் சோழ மண்ணின் மைந்தர்கள் என்று செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் போட்ட அனைவருக்கும் என்னுடைய ஒரு தார்மீக கேள்வி. 6 ஆண்டுகள், 6 மாதங்கள், 6 நாட்கள் என்று இலக்கு வைத்து எங்கள் பெரியவர் கட்டிய கோயிலின் அதே கட்டிட அமைப்பு முறைதான் இன்றும் இருக்கிறதா? கோயில் வளாகத்தில் இடைச்செருகளான முருகன் சன்னதி, அம்மன் சன்னதி எப்போது கட்டப்பட்டது என்று எத்தனை பேருக்கு தெரியும் ? எந்த காலத்திலும், எந்த இயற்கை பேரிடரையும் தாக்குப்பிடிக்கும் அளவிற்கும் பெரியவர் கட்டிய இந்த கட்டமைப்பில், காலத்திற்கு ஏற்ற நீங்கள் செய்த மாற்றங்களின் விளைவுகள் என்ன என்று எத்தனை பேருக்கு தெரியும்?
4. குடமுழுக்கு அனைத்து ஊடகங்களிலும் நேரடியாக காடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் எத்தனை பேர் கேரளாந்தகன் பிரதான வாயில் வழியாக உள்ளே வந்தார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? வீம்புகென்று அந்த வழியாக வந்தவர்களின் கணக்கு வேறு. வெளியூர் நண்பர்களுக்கு விஐபி பாஸ் வாங்கி கொடுத்துவிட்டு அன்று கோயில் பக்கமே செல்லாத பல தஞ்சை முக்கிய புள்ளிகளை எனக்கு தெரியும். தஞ்சை பகுதியில் ஒரு முக்கு பிள்ளையார் கோயில் குடமுழுக்கு என்றாலும் முன் நிற்கும் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உணவு பாதுகாப்பு துறை அமைச்சருமான காமராஜ் அவர்கள் ஏன் பெரிய கோயில் பக்கம் வரவில்லை. மத்திய தொல்லியல் துறை, தமிழக தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்கள் ஏன் பங்கேற்கவில்லை?
5. 1010 ஆண்டு நடைபெற்றது போல 2020 ஆண்டும் சிறப்பாக குடமுழுக்கு நடத்திவிட்டதாக மார்தட்டிக் கொள்கிறார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற உங்கள் கணக்குக்கே வருவோம். 1996 ஆம் ஆண்டு பெருவுடையார் கோயில் குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கிறது. அதிலிருந்து 12 ஆண்டுகள் கழித்து 2009 இல் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தார். அப்போது ஏன் குடமுழுக்கு நடைபெறவில்லை?
யோசிப்போம். தமிழர் மரபை நேசிப்போம். உண்மையான வரலாற்றை வாசிப்போம்.
- சத்தியராஜ் சத்தியமூர்த்தி.
13.02.2020.
No comments:
Post a Comment