Monday, February 24, 2020

மகாசிவராத்திரி 2020 தரிசன பயணம்

மகாசிவராத்திரி 2020 தரிசன பயணம் .

முடிஞ்சு மூனு நாள் ஆகுது இப்ப ஏன் டா இத தூக்கிட்டு வரனு நீங்க கேக்குறது என் காதுல விழுது. அயராது இடைவிடாத வெட்டிப் பணிகளில் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. இப்போதும் என்னுடைய மதிய உறக்கத்தை தியாகம் செய்தே இந்த பதிவை இடுகிறேன். மகாசிவராத்திரி அன்று ஆண்டுதோறும் கண் விழிப்பது என்பது மரபு. வீட்டில் உள்ளபடி டிவியில் ஏதேனும் ஆசிரமத்தில் நிகழும் சிவராத்திரி கொண்டாட்டங்களை பார்ப்பது, வீட்டின் அருகே இருக்கும் சிவன் கோயிலில் இரவு முழுவதும் கழிப்பது, சில திரையரங்குகளில் இரவு முழுவதும் 3 திரைப்படம் என அன்றைய இரவை நாம் கழித்து கொண்டிருந்தோம். ஆனால் இப்போது கடந்த 4-5 ஆண்டுகளில் பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப வாகனங்களை எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் முடிந்தவரை சிவாலயங்களை தரிசிக்கச் தொடங்கியுள்ளனர். இது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்த ஆண்டு நான் சென்றது என்னுடைய நான்காம் ஆண்டு தரிசன பயணம். முதல் இரண்டு ஆண்டுகள் இருசக்கர வாகனத்திலும், இந்த ஆண்டும் கடந்த ஆண்டும் தம்பிகளுடன் நான்கு சக்கர வாகனத்திலும் பயணம் தொடர்கிறது.

சைவ சித்தாந்தத்தின் மூத்தோன் அப்பன் ஆவுடையானை பற்றியும், சைவ சமய கோட்பாடுகள் பற்றியும் பேசினால் தற்போதுள்ள இளைஞர்களில் பெரும்பாலானோர் காது கொடுத்து கேட்கத் தொடங்கியுள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை. அப்படியொரு இளைஞர் பட்டாளம் எனக்கும் வாய்த்திருக்கிறது. பௌர்ணமி இரவில் கிரிவலம் செல்வது, கோயில்களுக்கு செல்வது என்று எப்போது அழைத்தாலும் ஆர்வமாக கலந்து கொள்ளும் அவர்களின் ஆர்வம் அலாதியானது. இவர்களுடன் என்னுடைய பயணம் கடந்த ஆண்டு சிவராத்தரியன்று தான் தொடங்கியது. இந்த ஓராண்டில்  நாங்கள் பயணித்த கோயில்களின் எண்ணிக்கை ஒரு கட்டத்திற்கு மேல் கணக்கில் வைக்க முடியாத அளவிற்கு போய்விட்டது. அண்ணன் விக்ரமகர்ண பழுவேட்டரையர் அவர்கள்," போகிற போக்கைப் பார்த்தால் உன்னையும்  உன் தம்பிகளையும் கைலாயத்தில் இருந்து  சிவபெருமானே  இறங்கி வந்து அருள் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை," என்று சமீபத்தில் கூறினார். அப்படியொரு யாத்திரையை மேற்கொண்டாயிற்று. கடந்த ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு சிவராத்திரி அன்று இரவும், அதற்கு முந்தைய வாரமும் என் மொத்தம் 26 கோயில்களை தரிசனம் செய்து இருந்தோம். நாங்கள் மையம் கொண்ட விருத்தாச்சலம் நகரில் இருந்து கும்பகோணம் சென்று அங்கிருந்து மேற்கில் உள்ள தஞ்சை பெருவுடையார் கோயில் வரை சென்ற ஆண்டு முடித்தோம். இந்த ஆண்டு கும்பகோணம் நகருக்கு கிழக்கில் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி பார்த்தால் வங்கக் கடலின் கரையில் உள்ள தரங்கம்பாடி வரை  செல்லவும் தீர்மானிக்கப்பட்டது.  அந்த பயணத்தில் முடிந்த வரை சிவாலயங்களை தரிசனம் செய்துவிட வேண்டும். அதற்கான பயணத் திட்டத்தை நானே வகுத்தேன். இரவு விருதையில் தொடங்கிய பயணம் காலை தரங்கம்பாடியில் திட்டமிட்டபடி கச்சிதமாய் முடிவுற்றது. தரிசனம் செய்த கோயில்கள் விபரம் வருமாறு.

1. விருதை பழமலைநாதர் கோயில்
2. இராஜேந்திரபட்டினம் நீலகண்டீஸ்வரர்
3. ஆண்டிமடம் அகத்தீஸ்வரர்
4. பெரியகிருஷ்னபுரம் நீலகண்டீஸ்வரர்
5. திருக்கலப்பூர் வனத்தீஸ்வரர்
6. மீன்சுருட்டி சொக்கலிங்கீஸ்வரர்
7. கங்கைகொண்ட சோழபுரத்து பெருவுடையார்
8. திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர்
9. திருவாய்பாடி பாலுகந்தனாதர்
10. செங்கனூர் சத்தியகிரீஸ்வர
11. சூரியனார் கோயில் குருபகவான்
12. திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர்
13. ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர்
14. திருவாவடுதுறை மாசிலமனீஸ்வரர்
14. திருவாலங்காடு வடரனேஸ்வரர்
15. குத்தாலம் உத்த வேதீஸ்வரர்
16. மாயவரம் புணுகீஸ்வரர்
17. மாயவரம் மாயுரநாதர்
18. தரங்கம்பாடி  மாசிலாநாதர்

இப்படியாக 18 கோயில்களை ஒரே இரவில் தரிசனம் செய்தாயிற்று. விருத்தாச்சலம் நகரில் இருந்து 150 கிலோமீட்டர் தூரப் பயணம். இரவு உணவு மற்றும் மறுநாள் காலை உணவிற்கு புலி சாதமும், சப்பாத்தியும் நாங்களே தயார் செய்து கொண்டு சென்றோம் .

 அதிகாலை தரங்கம்பாடியை அடைந்ததும் சிறிது நேரம் கடலில் குதுகளித்துவிட்டு, அங்கே இருந்த கிணத்தடியில் குளித்துவிட்டு, போட்டோஷூட் செஷன்லாம் முடித்துவிட்டு அய்யன் மாசிலாநாதரை தரிசனம் செய்துவிட்டு வீட்டை நோக்கி புறப்பட்டோம். நான் மேலே குறிப்பிட்ட கோயில்கள்  சிலவற்றை உங்களில் பலர் தரிசனம் செய்திருக்கலாம், பல கோயில்களை கேள்விப்பட்டிருக்க கூட மாட்டீர்கள். கோயில்களில் இறைவனை மட்டுமல்ல வரலாற்றையும் தேடுகிறோம். நாம் பாடும் தேவார, திருவாசகப் பாடல்களில் இல்லாத வரலாறு வேறு எங்கிலும் இல்லை.  பெரும்பான்மையான மக்கள் செல்லும் கோயில்களுக்கு செல்லமால், புதிதாக தேடிச் செல்லும் சுகமே தனி. அண்ணன் விக்ரமகர்ண பழுவேட்டரையர் அவர்கள் தன் "சாளுக்க்கியம்" பெருநூலில் சொல்லியது போல,"மனதினுள் தீராத் தேடலோடு துவங்கப்படும் பயணங்களுக்கு திசைகளும், திருப்பங்களும் தீர்மானிக்கப் பட்டதாக அமைவதில்லை. தேடு பொருளின் சுகந்தங்களும், அது ஏற்படுத்தும் சிந்தைகளும் திரும்பிட முனைகளைக் காட்டுகின்றன," என்பது எத்துணை உண்மை.
  இதை என்னுடன் பயணிக்கும் தம்பிகளுக்கு நான் புரியவைத்து விட்டேன். இதை படிக்கும் ஒரு சிலருக்கேனும் பயணத்தின் அருமை புரிந்தால் பலன் பெற்றவனானேன்.

- சத்தியராஜ் சத்தியமூர்த்தி.
  24.02.2020

Wednesday, February 12, 2020

ஆயிரத்தில் ஒருவன் என்னும் அபத்தம்



ஆயிரத்தில் ஒருவன் செல்வராகவன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த படம். படத்தின் கரு "தஞ்சையை விட்டு தப்பி சென்ற சோழர்களிடம் இருந்து பாண்டியர்கள் தங்களின் குல தெய்வத்தை மீட்பது, தஞ்சைக்கு தங்களை அழைத்த்து செல்ல தூதுவன் வருவான் என்று சோழர்கள் காத்திருப்பது" போன்று அமைக்கப்பட்டிருக்கும். 

1. படத்தின் துருப்பு சீட்டிலேயே சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இந்த கதைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறப்பட்டிருக்கும். அப்படியிருக்க அவர்களின் பெயர்களை பயன்படுத்தி கதைக்களம் அமைத்தது ஏனோ? 

2. இராஜராஜ சோழன் அரியணை ஏறுவதற்கு முன்னமே தஞ்சாவூர் தலைநகராக மாற்றப்பட்டு விட்டது. இராஜராஜனின் தந்தையான சுந்தர சோழன், தன் சகோதரன் மகன் உத்தம சோழனுக்கு தஞ்சையில் முடி சூட்டிய பிறகு காஞ்சிபுரம் சென்று பாலாற்று கரையில் நிறுவப்பட்ட பொண்மாளிகையில் தன்னுடைய இறுதி நாட்களை கழிக்கிறார். தன் மகன் இராஜராஜ சோழன் அரியணை ஏறுவதை கூட காண பாக்கியம் இல்லாமல் 973 இல் உயிர் நீத்தார். பொண்மாளிகையில் உயிர் நீத்ததால் "பொண்மாளிகை துஞ்சின தேவர்" என்று அறியப்பட்டார். உத்தம சோழனின் மறைவுக்கு பிறகு 985 இல் இராஜராஜன் சோழ பேரரசின் பெரும் சக்கரவர்த்தியாக பொறுப்பேற்கிறார். பிறகு தனது மகனான இராஜேந்திர சோழனின் முடிசூட்டு 1014 இல் நடக்கிறது. 

இராஜேந்திர சோழன் 1025 வரை தஞ்சையை தலைநகராகக் கொண்டு தான் கொடை புரிகிறான். இராஜேந்திரன் தன்னுடைய 11 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் வங்காள மஹிபாள மன்னனை தோற்கடித்து கங்கை வரை புலிக்கொடியை பறக்கவிட்டு "கங்கைகொண்ட சோழன்" என்ற பட்டம் பெறுகிறான். அதன் பிறகே கங்கைகொண்ட சோழீஸ்வரத்தை நிறுவி தலைநகராக பிரகடனப்படுத்துகிறான். 1025 முதல் சோழர்களின் கடைசி நேரடி வாரிசான அதிராஜேந்திரன்(1070) வரையிலும், அதன் பிறகு குலோத்துங்க சோழன் வழி வந்த தெலுங்கு சோழர்களின் கடைசி மன்னனான மூன்றாம் இராஜராஜன்(1279) வரை கங்கைகொண்ட சோழபுரமே தலைநகராக விளங்கியது.

1133 முதல் 1150 வரை ஆட்சி செய்த இரண்டாம் குலோத்துங்கன் மட்டுமே தனது வசிப்பிடத்தை சிதம்பரத்திற்கு மாற்றியதாக தெரிகிறது. மற்றபடி சோழர்களின் 400 ஆண்டுகால  ஆட்சி பறிபோகும் வரை ஏறத்தாழ 250 ஆண்டுகள் கங்கைகொண்ட சோழபுரமே தலைநகராக இருந்துள்ளது. அப்படி இருக்க ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இறுதி சோழ மன்னன் தஞ்சையில் இருந்து தப்பி சென்றதாக காட்டப்பட்டுள்ளது. இத்தனை நூற்றாண்டுகள் கழித்தும் தலைநகரமாக இல்லாத ஒரு ஊருக்கு போய் சேர வேண்டும் என்று சோழ வாரிசுகளுக்கு சொல்லபட்டுள்ளதாக கதை நகர்கிறது. 250 ஆண்டு கங்கைகொண்ட சோழபுரம் தலைநகராக இருந்ததால் சோழ தேச மக்களுக்கே தஞ்சை தலைநகராக இருந்ததே நினைவு இருக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் தஞ்சை நோக்கி அழைத்து செல்ல தூதன் வருவான் என்று கதை கட்டிவிட்டு இருப்பார் செல்வராகவன். இதைக் கண்டு புல்லரித்து, புளாங்கிதம் அடைந்து சில்லரையெல்லாம் சிதறவிட்டு இருக்கிறோம் நாம். தமிழக சினிமாவின் அறிவுஜீவிகளில் ஒருவராக கருதப்படும் இரா. பார்த்திபன் கூட இந்த சிறு ஆராய்ச்சியை கூட செய்யாமல் படத்தில் முக்கிய பாத்திரமாக நடித்தது தான் இன்னும் அபத்தம். என்ன செய்வது அப்போலாம் இந்த அளவுக்கு நமக்கு வரலாற்று அறிவு இல்லை. அதனால தான்  வந்தவன் போனவனெல்லாம் அந்த கலாச்சாரம், இந்த கலாச்சரம்னு நம்ம மேல மாடு மேஞ்சிட்டு போயிட்டனுங்க. 
- சத்தியராஜ் சத்தியமூர்த்தி.
 08-02-2020. 

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு மூலம் என்ன சாதித்தீர்கள்?


தஞ்சை பெருவுடையார் கோயில் நம் சோழ தேசத்து பெருந்தலைவன் மும்முடி சோழன்  யுத்தமல்லன் ஸ்ரீ இராஜராஜ சோழ பெருந்தகையால் அய்யனுக்காக எழுப்பப்பட்டது. அதற்கான குடமுழுக்கு  தை மாதம் 22- ஆம் நாள் ஏகாதசி சுபமுகூர்த்த நாளில் நல்ல நேரம் பார்த்து நடத்தப்பட்டுள்ளது???. கருடனாக இராஜராஜ சோழன் வந்தார்,  தூதுவன் வந்தான் மாரி பொழிந்தது, சோழ வம்சத்தினர் கோபுரத்தை சுற்றி நின்று வாழ்த்தினார்கள் என்றெல்லாம் டீகோடிங் செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த சாமானியனின் சில கேள்விகள். 
1. 2010 ஆம் ஆண்டு கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த போது பெருவுடையார் கோயில்  1000 வது ஆண்டு சதய விழா கொண்டாடப்பட்டது. 7 நாட்கள் நடந்த நிகழ்வின் போது கூட கோயிலின் கட்டுமானத்தில்  இவ்வளவு சேதமும், மாற்றங்களும் செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இப்போது குடமுழுக்கு செய்வதற்கு கோபுரம் மேல் ஏறுவதற்கு சாரம் கட்டியதன் மூலம் எவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்துகூட பார்க்க முடியவில்லை. நகரை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், 200 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள். இந்த கேமராக்கள் பொருத்துவதற்கும், இயக்குனர் வேல்ராஜ் அவர்கள் மின்விளக்கு அமைத்து கோபுரத்திற்கு ஒளி கொடுத்தார் என்று நீங்கள் பெருமைபீத்தி கொள்வதற்கும் பின்னால் கோயிலின் கட்டிட அமைப்பில் எவ்வளவு சேதம் ஏற்படும் என்று எவரும் யோசிக்கவில்லையா? 

2. ஒரு கோயிலின் குடமுழுக்கு என்பது அந்த கோயிலில் குறைந்தபட்சம் ஒரு வருடம்  திருப்பணிகள் செய்து, குறிப்பிட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு நடத்தப்பட வேண்டும்.  அப்படி என்ன திருப்பணிகள் பெருவுடையார் கோயில் செய்யப்பட்டது? கோயிலின் மொத்த பரப்பில் கோயிலை மையப்படுத்தி இரண்டு பக்கமும் புல் தரை அமைக்க இடம் விடப்பட்டிருக்கும். ஆனால் இன்று அந்த பரப்பளவு குறைக்கப்பட்டு கான்கிரீட் போட்டு மொழிகிவிட்டார்கள். இது தான் நீங்கள் செய்த திருப்பணியின் லட்சணமா ? தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும், ஆகமங்களை தூக்கி எறிய வேண்டும் என்று கடைசி நேரத்தில் வந்து கம்பு சுத்தியவர்கள் திருப்பணிகள் பற்றி ஏன் சிறிதளவு கூட கவலைப்படவில்லை.

3.  நாங்கள் சோழ மண்ணின் மைந்தர்கள் என்று செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் போட்ட அனைவருக்கும் என்னுடைய ஒரு தார்மீக கேள்வி. 6 ஆண்டுகள், 6 மாதங்கள், 6 நாட்கள் என்று இலக்கு வைத்து எங்கள் பெரியவர் கட்டிய கோயிலின் அதே கட்டிட  அமைப்பு முறைதான் இன்றும் இருக்கிறதா? கோயில் வளாகத்தில் இடைச்செருகளான முருகன் சன்னதி, அம்மன் சன்னதி எப்போது கட்டப்பட்டது என்று எத்தனை பேருக்கு தெரியும் ? எந்த காலத்திலும், எந்த இயற்கை பேரிடரையும் தாக்குப்பிடிக்கும் அளவிற்கும் பெரியவர் கட்டிய இந்த கட்டமைப்பில், காலத்திற்கு ஏற்ற நீங்கள் செய்த மாற்றங்களின் விளைவுகள் என்ன என்று எத்தனை பேருக்கு தெரியும்?

4. குடமுழுக்கு அனைத்து ஊடகங்களிலும் நேரடியாக காடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் எத்தனை பேர் கேரளாந்தகன் பிரதான வாயில் வழியாக உள்ளே வந்தார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? வீம்புகென்று அந்த வழியாக வந்தவர்களின் கணக்கு வேறு. வெளியூர் நண்பர்களுக்கு விஐபி பாஸ் வாங்கி கொடுத்துவிட்டு அன்று கோயில் பக்கமே செல்லாத பல தஞ்சை முக்கிய புள்ளிகளை எனக்கு தெரியும். தஞ்சை பகுதியில் ஒரு முக்கு பிள்ளையார் கோயில் குடமுழுக்கு என்றாலும் முன் நிற்கும்  நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உணவு பாதுகாப்பு துறை அமைச்சருமான காமராஜ் அவர்கள் ஏன் பெரிய கோயில் பக்கம் வரவில்லை. மத்திய  தொல்லியல் துறை, தமிழக தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்கள் ஏன் பங்கேற்கவில்லை?

5. 1010 ஆண்டு நடைபெற்றது போல 2020 ஆண்டும் சிறப்பாக குடமுழுக்கு நடத்திவிட்டதாக மார்தட்டிக் கொள்கிறார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற உங்கள் கணக்குக்கே வருவோம். 1996 ஆம் ஆண்டு பெருவுடையார் கோயில் குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கிறது. அதிலிருந்து 12 ஆண்டுகள் கழித்து  2009 இல் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தார். அப்போது ஏன் குடமுழுக்கு நடைபெறவில்லை? 
யோசிப்போம். தமிழர் மரபை நேசிப்போம். உண்மையான வரலாற்றை வாசிப்போம். 
- சத்தியராஜ் சத்தியமூர்த்தி.
   13.02.2020.

Chat Box