Wednesday, March 4, 2020

சாளுக்கியம் என்னும் வரலாற்று பொக்கிஷம்


      நான் சோழ வரலாற்றின் மீது தீராக் காதல் கொண்டவன் என்பது என் நட்பு வட்டத்தில் உள்ள அனைவரும் அறிந்ததே. அது பொன்னியின் செல்வன் மூலம் தொடங்கிய ஒன்று தான். அதன் மூலம் சோழ வரலாற்றின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் பல பயணங்கள், பல்வேறு புத்தகங்கள் எல்லாம் முடித்தாயிற்று. பின்பு தான் தெரிந்தது அந்த புத்தகங்கள் எல்லாம் வெறும் புதினங்களே( வரலாற்றை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட கதை) என்று. என் சோழ தேடல்களுக்கு பதிலாய் என் கண் முன்னே இரத்தமும் சதையுமாய், சோழ வரலாற்றின் முழு வடிவமாக, நம்முடன் வாழும் சோழனாய் வந்து நின்றார் அண்ணன் விக்ரமகர்ண பழுவேட்டரையர் . அவரை சந்தித்த பின் தான் என்னுடைய சோழ தேடலின் பெரும் திருப்பமும், பல்வேறு குழப்பங்களுக்கு தெளிவும் பிறக்கத் தொடங்கியது. பழுவேட்டரையர் அண்ணன் அவர்களுடனான சந்திப்புக்கள், உரையாடல்கள், பயணங்கள் என நிகழ்ந்த அனைத்தும் என்னுடைய சோழ தேடலுக்கான வேறு ஒரு பரிணாம உலகத்திற்கான மனக் கதவுகளை திறந்தது.

           முதல் சந்திப்பிலேயே அண்ணன்  எழுதிய "சாளுக்கியம்" நூலை எனக்கு  பரிசளித்தார். நம் பள்ளி வரலாற்று பாடத்தில் எங்கேயும் சோழர்களின் சாளுக்கிய பராக்கிரமங்களைப் பற்றி குறிப்புக்கள் இருந்ததில்லை. பொன்னியின் செல்வனில் கூட அவ்வளவாக படித்த ஞாபகம் இல்லை. சாளுக்க்கியம் பற்றி நான் முதன்முதலில் கேள்விப்பட்டது சிவாஜி கணேசன் நடித்த "இராஜராஜ சோழன்" திரைப்படத்தில் தான்.   11- ஆம் வகுப்பு படிக்கும் போது பள்ளி விடுதியில் பார்த்தது. அதில் சாளுக்கிய மன்னன் சத்தியாசியனை வென்று, வேங்கி  நாட்டின் அரசனாக விமலாதித்தனை  முடிசூட்டி, தன் மகள் குந்தவையை அவனுக்கு திருமணம் செய்து கொடுப்பார் இராஜராஜ சோழன். அந்த படம் பார்த்த பின்பும் பல நாட்கள், பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. அண்ணன் இந்த நூலை என்னிடம் கொடுத்ததிலிருந்து அதனை படித்து முடிக்க வேண்டும் என்று பேராவல் தொற்றிக்கொண்டது.  


   சோழர்கள் எதையெல்லாம் செய்ய வல்லவர்கள் என்பதை இந்த உலகிற்கு உணர்த்தும் ஒரு உதாரணமாய் விளங்கியது சாளுக்கிய போர். மன்னன் சத்தியாசிரயனின் பேராசைக்கும், அகந்தைக்கும், மக்கள் நலனில் அக்கறை காட்டாத அலட்சிய போக்குக்கும் முற்றுப் புள்ளி வைக்க நிகழ்த்தப்பட்டதே இந்த போர். அபயகுலசேகரன், அரிதூர்க்களங்கன், நிகரலிச்சோழன் ஸ்ரீ ஸ்ரீ இராஜராஜ சோழ பெருந்தகையனாரைப் பற்றி நாம்  இதுவரை படித்த அனைத்திற்கும் முத்தாரமாய் அவரின் வரலாறு இந்த நூலில் சொல்லப்பட்டு இருக்கிறது. என்னதான் நாம் அருள்மொழிவர்மரை பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் முலுவலகம் காக்கும் இராஜராஜ பெருவுடையாராய் கம்பீரமாய் சோழ கிரீடத்தின் மணி முத்தாய் நம் முன் நிற்கிறார்.  உலகின் எந்த அரச குடும்பத்தின் மூன்று தலைமுறைகளும் ஒருசேர போர்க்களத்தில் களமாடியதாக வரலாறு இல்லை. ஆனால் சாளுக்கியப் போரில் அது நடந்தேறியது.ஸ்ரீ ஸ்ரீ  இராஜராஜ சோழ சக்கரவர்த்திகள் , அவர் மகன் பட்டத்து இளவரசனான மதுராந்தகன் என்னும் இராஜேந்திர சோழன், அவனின் மகன் இராசதிராச சோழன் என சோழ பேரரசின்  மூன்று அதிமுக்கிய பெருந்தலைகள் ஒருசேர களம் கண்டனர்.   இதுவரை எந்த குறிப்பேட்டிலும் இந்த அரிய நிகழ்வைப் பற்றி நான் படித்ததில்லை. அப்படியாக நம்முடைய வரலாற்று தேடலுக்கான பல்வேறு தெளிவுகளைக் கொண்டது "சாளுக்கியம்".

     விக்ரமகர்ன பழுவேட்டரையர் அவர்களின் எழுத்தில் சாளுக்கியம் மூலம் நாம் சோழ வரலாற்றின் 1000 ஆண்டுகளை கடந்து பின்னோக்கி செல்கின்றோம். என்னுடைய "சோழப் பேரினம்" என்னும் பதிவில் சோழப் பேரரசு எப்படி ஒரு மாபெரும் நிலமாளும் அரசாக விளங்கியதற்கான முக்கிய அம்சங்களை குறித்து கூறி  இருந்தேன். இந்த நூலின் மூலம் அந்த சிறப்பம்சங்கள் அனைத்தும் உண்மையே என்பதை பக்கத்திற்கு பக்கம் நம்மால் உணர முடியும். பழுவேட்டரையர்களின் இராஜ விசுவாசம், சோழர்களை கண்ணென காக்க அவர்கள் ஏற்ற விரதம், அதனை நித்தமும் கடைபிடிக்க அவர்கள் செய்யும் தியாக வேள்வி ஆகியவை கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. தனது பேரனாகவே இருந்தாலும், அத்துனை உரிமைகளையும் இராஜராஜ சோழனின் மீது கொண்டிருந்தாலும் ஒரு சக்கவர்த்திக்கு அளிக்க வேண்டிய மரியாதையை  ஒரு போதும் அய்யன் பெரிய பழுவேட்டரையர் அளிக்க தவறியதில்லை. தனது மகளாகவே இருந்தாலும்  மும்முடி சோழனின் பத்தினி சக்கரவர்த்தினி  பஞ்சவன்மாதேவிக்கு, சோழ பேரரசின் கோட்டை தளபதியாய் தனது மரியாதையை  அவர் செலுத்த தவறியதில்லை. இதைதான்  இன்றைய கார்ப்பரேட் தொழில் உலகில் படிநிலை நெறிமுறைகள்(Hierarchical Protocols) என்று சொல்கிறோம். இவற்றைப் பார்த்தே பழுவேட்டரையர்களால் பயிற்றுவிக்கப்பட்ட தளபதிகளும் இந்த மாண்பை பின்பற்றினர். 

       சோழர்களின் வீரம், அறம், நீதி வழுவாது போர் செய்யும் முறை, பகைவனுக்கருளும் மனம், இராஜராஜ சோழரின் அப்பழுக்கற்ற அரசாட்சி, மாதர்கள் மீது அவர்கள் கொண்ட மரியாதை, சோழ வேல்களைவிட கூர்மையாக தீட்டபட்ட ஒற்றர்களின் மதி நுட்பம், விற்படை, குதிரைப்படை, யானை படை, அடிவரிசைப் படை, செம்படை, பழுவேட்டரையர்களின் இரணியபடை, ஆதூர்சாலை படை என இன்றைய  வல்லரசுகளின் படைகளுக்கே சவால்விடும் படைகள், தானியங்கி துப்பாக்கிகள் போன்று தானியங்கி வில் அம்புகள் என சோழ பெருமைகளை விவரிக்கிறது சாளுக்கியம். சோழர்கள் தங்களின் பண்புகளை, குணங்களை , குலத்தின் மாண்புகளை வெறும் செப்பேட்டில் மட்டும் செதுக்கி வைத்துவிட்டு செல்லவில்லை. அவர்களின் வாழ்க்கை முறையே  அடுத்த தலைமுறையினருக்கு பெரும் பாடமாக, சான்றாக விளங்கி, ஓங்கி நின்றது. 

  வாசகர்களாகிய நமக்கு தான் இது புத்தகம். ஆனால் ஆசிரியர் அவர்களுக்கு  குடும்ப வரலாறு. அப்படி இருப்பினும்  சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை பற்றி குறிப்பிடுகையில் எந்த வகையிலும் அவரை சிறுமைப்படுத்தாமல் ஒரு தேசத்தின் மன்னன் என்ற மரியாதையுடன் எழுதியிருப்பது சிறப்பு. விஜயாலாய சோழன் தொடங்கி ஆதித்த கரிகாலன், இராஜராஜ சோழரின் பொற்கால ஆட்சி, தஞ்சை பெருவுடையார் கோயிலின் கட்டுமான சிறப்பு, இராசேந்திரச்சோழ சக்கரவர்த்திக்கு பட்டாபிஷேகம் வரை பல வரலாற்று சம்பவங்களை நூலில் சொல்லி இருப்பது, நாம் இதற்கு முன் படித்த விஷயங்களை இலகுவாக பொருத்தி பார்க்க முடிகிறது. சாளுக்கியப் போர் நடைபெற்ற இடங்களை நம் கண்முன் கொண்டு வந்து, இன்றைய பூகோள அமைப்பில் நமக்கு புரியும் படி சொல்லப்பட்டிருக்கிறது. 
என்ன தான் பொன்னியின் செல்வன், உடையார், கங்கைகொண்டான் போன்ற புதினங்களை நாம் படித்தாலும் அவை ஒரு மூன்றாம் நபரால் புனையப்பட்ட ஒன்றாக தான் கருத முடியும். சோழ வரலாற்றை சோழர்களின் கதைக்களத்தில் அறிந்து கொள்வதென்பது பெரும் பேரு தான். சாளுக்கியம் முற்றுற்றது. அண்ணனின் அடுத்த படைப்பான சோழர்களின் மாபெரும் வரலாற்றை நமக்கு அளிக்கப்போகும் "உய்யக்கொண்டான்" பெரு நூலுக்காக காத்திருக்கிறேன்.

Monday, February 24, 2020

மகாசிவராத்திரி 2020 தரிசன பயணம்

மகாசிவராத்திரி 2020 தரிசன பயணம் .

முடிஞ்சு மூனு நாள் ஆகுது இப்ப ஏன் டா இத தூக்கிட்டு வரனு நீங்க கேக்குறது என் காதுல விழுது. அயராது இடைவிடாத வெட்டிப் பணிகளில் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. இப்போதும் என்னுடைய மதிய உறக்கத்தை தியாகம் செய்தே இந்த பதிவை இடுகிறேன். மகாசிவராத்திரி அன்று ஆண்டுதோறும் கண் விழிப்பது என்பது மரபு. வீட்டில் உள்ளபடி டிவியில் ஏதேனும் ஆசிரமத்தில் நிகழும் சிவராத்திரி கொண்டாட்டங்களை பார்ப்பது, வீட்டின் அருகே இருக்கும் சிவன் கோயிலில் இரவு முழுவதும் கழிப்பது, சில திரையரங்குகளில் இரவு முழுவதும் 3 திரைப்படம் என அன்றைய இரவை நாம் கழித்து கொண்டிருந்தோம். ஆனால் இப்போது கடந்த 4-5 ஆண்டுகளில் பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப வாகனங்களை எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் முடிந்தவரை சிவாலயங்களை தரிசிக்கச் தொடங்கியுள்ளனர். இது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்த ஆண்டு நான் சென்றது என்னுடைய நான்காம் ஆண்டு தரிசன பயணம். முதல் இரண்டு ஆண்டுகள் இருசக்கர வாகனத்திலும், இந்த ஆண்டும் கடந்த ஆண்டும் தம்பிகளுடன் நான்கு சக்கர வாகனத்திலும் பயணம் தொடர்கிறது.

சைவ சித்தாந்தத்தின் மூத்தோன் அப்பன் ஆவுடையானை பற்றியும், சைவ சமய கோட்பாடுகள் பற்றியும் பேசினால் தற்போதுள்ள இளைஞர்களில் பெரும்பாலானோர் காது கொடுத்து கேட்கத் தொடங்கியுள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை. அப்படியொரு இளைஞர் பட்டாளம் எனக்கும் வாய்த்திருக்கிறது. பௌர்ணமி இரவில் கிரிவலம் செல்வது, கோயில்களுக்கு செல்வது என்று எப்போது அழைத்தாலும் ஆர்வமாக கலந்து கொள்ளும் அவர்களின் ஆர்வம் அலாதியானது. இவர்களுடன் என்னுடைய பயணம் கடந்த ஆண்டு சிவராத்தரியன்று தான் தொடங்கியது. இந்த ஓராண்டில்  நாங்கள் பயணித்த கோயில்களின் எண்ணிக்கை ஒரு கட்டத்திற்கு மேல் கணக்கில் வைக்க முடியாத அளவிற்கு போய்விட்டது. அண்ணன் விக்ரமகர்ண பழுவேட்டரையர் அவர்கள்," போகிற போக்கைப் பார்த்தால் உன்னையும்  உன் தம்பிகளையும் கைலாயத்தில் இருந்து  சிவபெருமானே  இறங்கி வந்து அருள் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை," என்று சமீபத்தில் கூறினார். அப்படியொரு யாத்திரையை மேற்கொண்டாயிற்று. கடந்த ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு சிவராத்திரி அன்று இரவும், அதற்கு முந்தைய வாரமும் என் மொத்தம் 26 கோயில்களை தரிசனம் செய்து இருந்தோம். நாங்கள் மையம் கொண்ட விருத்தாச்சலம் நகரில் இருந்து கும்பகோணம் சென்று அங்கிருந்து மேற்கில் உள்ள தஞ்சை பெருவுடையார் கோயில் வரை சென்ற ஆண்டு முடித்தோம். இந்த ஆண்டு கும்பகோணம் நகருக்கு கிழக்கில் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி பார்த்தால் வங்கக் கடலின் கரையில் உள்ள தரங்கம்பாடி வரை  செல்லவும் தீர்மானிக்கப்பட்டது.  அந்த பயணத்தில் முடிந்த வரை சிவாலயங்களை தரிசனம் செய்துவிட வேண்டும். அதற்கான பயணத் திட்டத்தை நானே வகுத்தேன். இரவு விருதையில் தொடங்கிய பயணம் காலை தரங்கம்பாடியில் திட்டமிட்டபடி கச்சிதமாய் முடிவுற்றது. தரிசனம் செய்த கோயில்கள் விபரம் வருமாறு.

1. விருதை பழமலைநாதர் கோயில்
2. இராஜேந்திரபட்டினம் நீலகண்டீஸ்வரர்
3. ஆண்டிமடம் அகத்தீஸ்வரர்
4. பெரியகிருஷ்னபுரம் நீலகண்டீஸ்வரர்
5. திருக்கலப்பூர் வனத்தீஸ்வரர்
6. மீன்சுருட்டி சொக்கலிங்கீஸ்வரர்
7. கங்கைகொண்ட சோழபுரத்து பெருவுடையார்
8. திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர்
9. திருவாய்பாடி பாலுகந்தனாதர்
10. செங்கனூர் சத்தியகிரீஸ்வர
11. சூரியனார் கோயில் குருபகவான்
12. திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர்
13. ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர்
14. திருவாவடுதுறை மாசிலமனீஸ்வரர்
14. திருவாலங்காடு வடரனேஸ்வரர்
15. குத்தாலம் உத்த வேதீஸ்வரர்
16. மாயவரம் புணுகீஸ்வரர்
17. மாயவரம் மாயுரநாதர்
18. தரங்கம்பாடி  மாசிலாநாதர்

இப்படியாக 18 கோயில்களை ஒரே இரவில் தரிசனம் செய்தாயிற்று. விருத்தாச்சலம் நகரில் இருந்து 150 கிலோமீட்டர் தூரப் பயணம். இரவு உணவு மற்றும் மறுநாள் காலை உணவிற்கு புலி சாதமும், சப்பாத்தியும் நாங்களே தயார் செய்து கொண்டு சென்றோம் .

 அதிகாலை தரங்கம்பாடியை அடைந்ததும் சிறிது நேரம் கடலில் குதுகளித்துவிட்டு, அங்கே இருந்த கிணத்தடியில் குளித்துவிட்டு, போட்டோஷூட் செஷன்லாம் முடித்துவிட்டு அய்யன் மாசிலாநாதரை தரிசனம் செய்துவிட்டு வீட்டை நோக்கி புறப்பட்டோம். நான் மேலே குறிப்பிட்ட கோயில்கள்  சிலவற்றை உங்களில் பலர் தரிசனம் செய்திருக்கலாம், பல கோயில்களை கேள்விப்பட்டிருக்க கூட மாட்டீர்கள். கோயில்களில் இறைவனை மட்டுமல்ல வரலாற்றையும் தேடுகிறோம். நாம் பாடும் தேவார, திருவாசகப் பாடல்களில் இல்லாத வரலாறு வேறு எங்கிலும் இல்லை.  பெரும்பான்மையான மக்கள் செல்லும் கோயில்களுக்கு செல்லமால், புதிதாக தேடிச் செல்லும் சுகமே தனி. அண்ணன் விக்ரமகர்ண பழுவேட்டரையர் அவர்கள் தன் "சாளுக்க்கியம்" பெருநூலில் சொல்லியது போல,"மனதினுள் தீராத் தேடலோடு துவங்கப்படும் பயணங்களுக்கு திசைகளும், திருப்பங்களும் தீர்மானிக்கப் பட்டதாக அமைவதில்லை. தேடு பொருளின் சுகந்தங்களும், அது ஏற்படுத்தும் சிந்தைகளும் திரும்பிட முனைகளைக் காட்டுகின்றன," என்பது எத்துணை உண்மை.
  இதை என்னுடன் பயணிக்கும் தம்பிகளுக்கு நான் புரியவைத்து விட்டேன். இதை படிக்கும் ஒரு சிலருக்கேனும் பயணத்தின் அருமை புரிந்தால் பலன் பெற்றவனானேன்.

- சத்தியராஜ் சத்தியமூர்த்தி.
  24.02.2020

Wednesday, February 12, 2020

ஆயிரத்தில் ஒருவன் என்னும் அபத்தம்



ஆயிரத்தில் ஒருவன் செல்வராகவன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த படம். படத்தின் கரு "தஞ்சையை விட்டு தப்பி சென்ற சோழர்களிடம் இருந்து பாண்டியர்கள் தங்களின் குல தெய்வத்தை மீட்பது, தஞ்சைக்கு தங்களை அழைத்த்து செல்ல தூதுவன் வருவான் என்று சோழர்கள் காத்திருப்பது" போன்று அமைக்கப்பட்டிருக்கும். 

1. படத்தின் துருப்பு சீட்டிலேயே சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இந்த கதைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறப்பட்டிருக்கும். அப்படியிருக்க அவர்களின் பெயர்களை பயன்படுத்தி கதைக்களம் அமைத்தது ஏனோ? 

2. இராஜராஜ சோழன் அரியணை ஏறுவதற்கு முன்னமே தஞ்சாவூர் தலைநகராக மாற்றப்பட்டு விட்டது. இராஜராஜனின் தந்தையான சுந்தர சோழன், தன் சகோதரன் மகன் உத்தம சோழனுக்கு தஞ்சையில் முடி சூட்டிய பிறகு காஞ்சிபுரம் சென்று பாலாற்று கரையில் நிறுவப்பட்ட பொண்மாளிகையில் தன்னுடைய இறுதி நாட்களை கழிக்கிறார். தன் மகன் இராஜராஜ சோழன் அரியணை ஏறுவதை கூட காண பாக்கியம் இல்லாமல் 973 இல் உயிர் நீத்தார். பொண்மாளிகையில் உயிர் நீத்ததால் "பொண்மாளிகை துஞ்சின தேவர்" என்று அறியப்பட்டார். உத்தம சோழனின் மறைவுக்கு பிறகு 985 இல் இராஜராஜன் சோழ பேரரசின் பெரும் சக்கரவர்த்தியாக பொறுப்பேற்கிறார். பிறகு தனது மகனான இராஜேந்திர சோழனின் முடிசூட்டு 1014 இல் நடக்கிறது. 

இராஜேந்திர சோழன் 1025 வரை தஞ்சையை தலைநகராகக் கொண்டு தான் கொடை புரிகிறான். இராஜேந்திரன் தன்னுடைய 11 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் வங்காள மஹிபாள மன்னனை தோற்கடித்து கங்கை வரை புலிக்கொடியை பறக்கவிட்டு "கங்கைகொண்ட சோழன்" என்ற பட்டம் பெறுகிறான். அதன் பிறகே கங்கைகொண்ட சோழீஸ்வரத்தை நிறுவி தலைநகராக பிரகடனப்படுத்துகிறான். 1025 முதல் சோழர்களின் கடைசி நேரடி வாரிசான அதிராஜேந்திரன்(1070) வரையிலும், அதன் பிறகு குலோத்துங்க சோழன் வழி வந்த தெலுங்கு சோழர்களின் கடைசி மன்னனான மூன்றாம் இராஜராஜன்(1279) வரை கங்கைகொண்ட சோழபுரமே தலைநகராக விளங்கியது.

1133 முதல் 1150 வரை ஆட்சி செய்த இரண்டாம் குலோத்துங்கன் மட்டுமே தனது வசிப்பிடத்தை சிதம்பரத்திற்கு மாற்றியதாக தெரிகிறது. மற்றபடி சோழர்களின் 400 ஆண்டுகால  ஆட்சி பறிபோகும் வரை ஏறத்தாழ 250 ஆண்டுகள் கங்கைகொண்ட சோழபுரமே தலைநகராக இருந்துள்ளது. அப்படி இருக்க ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இறுதி சோழ மன்னன் தஞ்சையில் இருந்து தப்பி சென்றதாக காட்டப்பட்டுள்ளது. இத்தனை நூற்றாண்டுகள் கழித்தும் தலைநகரமாக இல்லாத ஒரு ஊருக்கு போய் சேர வேண்டும் என்று சோழ வாரிசுகளுக்கு சொல்லபட்டுள்ளதாக கதை நகர்கிறது. 250 ஆண்டு கங்கைகொண்ட சோழபுரம் தலைநகராக இருந்ததால் சோழ தேச மக்களுக்கே தஞ்சை தலைநகராக இருந்ததே நினைவு இருக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் தஞ்சை நோக்கி அழைத்து செல்ல தூதன் வருவான் என்று கதை கட்டிவிட்டு இருப்பார் செல்வராகவன். இதைக் கண்டு புல்லரித்து, புளாங்கிதம் அடைந்து சில்லரையெல்லாம் சிதறவிட்டு இருக்கிறோம் நாம். தமிழக சினிமாவின் அறிவுஜீவிகளில் ஒருவராக கருதப்படும் இரா. பார்த்திபன் கூட இந்த சிறு ஆராய்ச்சியை கூட செய்யாமல் படத்தில் முக்கிய பாத்திரமாக நடித்தது தான் இன்னும் அபத்தம். என்ன செய்வது அப்போலாம் இந்த அளவுக்கு நமக்கு வரலாற்று அறிவு இல்லை. அதனால தான்  வந்தவன் போனவனெல்லாம் அந்த கலாச்சாரம், இந்த கலாச்சரம்னு நம்ம மேல மாடு மேஞ்சிட்டு போயிட்டனுங்க. 
- சத்தியராஜ் சத்தியமூர்த்தி.
 08-02-2020. 

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு மூலம் என்ன சாதித்தீர்கள்?


தஞ்சை பெருவுடையார் கோயில் நம் சோழ தேசத்து பெருந்தலைவன் மும்முடி சோழன்  யுத்தமல்லன் ஸ்ரீ இராஜராஜ சோழ பெருந்தகையால் அய்யனுக்காக எழுப்பப்பட்டது. அதற்கான குடமுழுக்கு  தை மாதம் 22- ஆம் நாள் ஏகாதசி சுபமுகூர்த்த நாளில் நல்ல நேரம் பார்த்து நடத்தப்பட்டுள்ளது???. கருடனாக இராஜராஜ சோழன் வந்தார்,  தூதுவன் வந்தான் மாரி பொழிந்தது, சோழ வம்சத்தினர் கோபுரத்தை சுற்றி நின்று வாழ்த்தினார்கள் என்றெல்லாம் டீகோடிங் செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த சாமானியனின் சில கேள்விகள். 
1. 2010 ஆம் ஆண்டு கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த போது பெருவுடையார் கோயில்  1000 வது ஆண்டு சதய விழா கொண்டாடப்பட்டது. 7 நாட்கள் நடந்த நிகழ்வின் போது கூட கோயிலின் கட்டுமானத்தில்  இவ்வளவு சேதமும், மாற்றங்களும் செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இப்போது குடமுழுக்கு செய்வதற்கு கோபுரம் மேல் ஏறுவதற்கு சாரம் கட்டியதன் மூலம் எவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்துகூட பார்க்க முடியவில்லை. நகரை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், 200 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள். இந்த கேமராக்கள் பொருத்துவதற்கும், இயக்குனர் வேல்ராஜ் அவர்கள் மின்விளக்கு அமைத்து கோபுரத்திற்கு ஒளி கொடுத்தார் என்று நீங்கள் பெருமைபீத்தி கொள்வதற்கும் பின்னால் கோயிலின் கட்டிட அமைப்பில் எவ்வளவு சேதம் ஏற்படும் என்று எவரும் யோசிக்கவில்லையா? 

2. ஒரு கோயிலின் குடமுழுக்கு என்பது அந்த கோயிலில் குறைந்தபட்சம் ஒரு வருடம்  திருப்பணிகள் செய்து, குறிப்பிட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு நடத்தப்பட வேண்டும்.  அப்படி என்ன திருப்பணிகள் பெருவுடையார் கோயில் செய்யப்பட்டது? கோயிலின் மொத்த பரப்பில் கோயிலை மையப்படுத்தி இரண்டு பக்கமும் புல் தரை அமைக்க இடம் விடப்பட்டிருக்கும். ஆனால் இன்று அந்த பரப்பளவு குறைக்கப்பட்டு கான்கிரீட் போட்டு மொழிகிவிட்டார்கள். இது தான் நீங்கள் செய்த திருப்பணியின் லட்சணமா ? தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும், ஆகமங்களை தூக்கி எறிய வேண்டும் என்று கடைசி நேரத்தில் வந்து கம்பு சுத்தியவர்கள் திருப்பணிகள் பற்றி ஏன் சிறிதளவு கூட கவலைப்படவில்லை.

3.  நாங்கள் சோழ மண்ணின் மைந்தர்கள் என்று செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் போட்ட அனைவருக்கும் என்னுடைய ஒரு தார்மீக கேள்வி. 6 ஆண்டுகள், 6 மாதங்கள், 6 நாட்கள் என்று இலக்கு வைத்து எங்கள் பெரியவர் கட்டிய கோயிலின் அதே கட்டிட  அமைப்பு முறைதான் இன்றும் இருக்கிறதா? கோயில் வளாகத்தில் இடைச்செருகளான முருகன் சன்னதி, அம்மன் சன்னதி எப்போது கட்டப்பட்டது என்று எத்தனை பேருக்கு தெரியும் ? எந்த காலத்திலும், எந்த இயற்கை பேரிடரையும் தாக்குப்பிடிக்கும் அளவிற்கும் பெரியவர் கட்டிய இந்த கட்டமைப்பில், காலத்திற்கு ஏற்ற நீங்கள் செய்த மாற்றங்களின் விளைவுகள் என்ன என்று எத்தனை பேருக்கு தெரியும்?

4. குடமுழுக்கு அனைத்து ஊடகங்களிலும் நேரடியாக காடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் எத்தனை பேர் கேரளாந்தகன் பிரதான வாயில் வழியாக உள்ளே வந்தார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? வீம்புகென்று அந்த வழியாக வந்தவர்களின் கணக்கு வேறு. வெளியூர் நண்பர்களுக்கு விஐபி பாஸ் வாங்கி கொடுத்துவிட்டு அன்று கோயில் பக்கமே செல்லாத பல தஞ்சை முக்கிய புள்ளிகளை எனக்கு தெரியும். தஞ்சை பகுதியில் ஒரு முக்கு பிள்ளையார் கோயில் குடமுழுக்கு என்றாலும் முன் நிற்கும்  நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உணவு பாதுகாப்பு துறை அமைச்சருமான காமராஜ் அவர்கள் ஏன் பெரிய கோயில் பக்கம் வரவில்லை. மத்திய  தொல்லியல் துறை, தமிழக தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்கள் ஏன் பங்கேற்கவில்லை?

5. 1010 ஆண்டு நடைபெற்றது போல 2020 ஆண்டும் சிறப்பாக குடமுழுக்கு நடத்திவிட்டதாக மார்தட்டிக் கொள்கிறார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற உங்கள் கணக்குக்கே வருவோம். 1996 ஆம் ஆண்டு பெருவுடையார் கோயில் குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கிறது. அதிலிருந்து 12 ஆண்டுகள் கழித்து  2009 இல் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தார். அப்போது ஏன் குடமுழுக்கு நடைபெறவில்லை? 
யோசிப்போம். தமிழர் மரபை நேசிப்போம். உண்மையான வரலாற்றை வாசிப்போம். 
- சத்தியராஜ் சத்தியமூர்த்தி.
   13.02.2020.

Sunday, January 5, 2020

பொன்னியின் செல்வன் - மணிரத்னம் என்ன செய்யப் போகிறார்?

தமிழ் இலக்கியங்களில்  வரும் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மிக மிக குறைவு. மேல் 1970 களுக்கு பிறகு அரச காலத்து கதைகளுக்கு முன்பு இருந்து வரவேற்பு  பொது மக்களிடம் இல்லாமல் போகவே அரச படங்களின் வரவும் சரியத் தொடங்கின. காதல் கதைகள் மீது  மக்களுக்கு ஈர்ப்பு ஏற்ப்பட்டதாலும், வரலாற்று திரைப்படங்களை தயாரிப்பதில் பெரும் செலவு ஏற்படுவதாலும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தங்களின் படம் எடுக்கும் பாணியை மாற்றினார்கள். இருப்பினும் தமிழ் மக்கள் ஆயிரத்தில் ஒருவனில் எம்.ஜி.ஆர் அவர்களை மணிமாறனாகவும், சிவாஜியை கர்ணனாகவும் உருவகப்படுத்தி ரசித்து வந்தார்கள். வரலாற்றுத் திரைப்படங்களின் வரவு குறைந்து வந்தாலும் அவ்வபோது சில தயாரிப்பாளர்களின் துணிச்சலான முயற்சியால் சில படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த படங்கள் வெற்றியடைய காரணம் திரைக்கதையும், அழுத்தமான கதையும் தான். என்னுடைய முந்தைய பதிவில் சொல்லி இருந்தது போல கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர் அவர்களின் காலத்தில் இருந்தே முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. துறைக்கு இன்று வந்த இயக்குநர்களே வரலாற்று படங்களை எடுக்கும் முயற்சியில் எடுபடும் போது, பல்வேறு விருதுகளை பெற்ற மணிரத்னம் அவர்களுக்கும் இந்த ஆசை வந்ததில் எந்த ஆச்சர்யமோ, தவறோ கிடையாது. இருப்பினும் இவருடைய இந்த  திரைக்கதை எந்த மாதிரியான  ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சமும் என்னைப் போன்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. 
ஏனென்றால் இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கும் பொன்னியின் செல்வன் ஒரு வரலாற்று  புத்தகம் என்பது மட்டுமே தெரியுமே தவிர அது ஒரு புனையப்பட்ட புதினம் என்பது தெரியாது. கல்கியின் எழுத்தாடலில் இந்த கதையில் எவை நிஜ பாத்திரங்கள்(பழுவேடடரையர்கள், கொடும்பாளூர் அரசர்கள், திருக்கோயிலூர் மழவராயர்கள்)  என்பதும், எவை கற்பனை பாத்திரங்கள் என்பதும் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  மேலும் இந்த புதினம் இராஜராஜ சோழனின் கதை என்பது மட்டுமே தெரியும். உண்மை என்னவெனில் இந்த கதைப்படி அவரின் பெயர் அருள்மொழிவர்மன்.  பொன்னியின் செல்வன் கதை நடக்கும் காலத்தில், சோழ பேரரசு இரண்டாம் பராந்தகர் எனப்படும் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் கொடையின் கீழ் உள்ளது. இவர்தான் ஆதித்ய கரிகால சோழன் மற்றும் இராஜராஜ சோழனின் தந்தை. மேலும் இக்கதையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிஜ கதாபாத்திரங்களும், அதற்கும் மேற்பட்ட கற்பனை பாத்திரங்கள் உள்ளன. ஐந்து பாகங்கள் கொண்ட இந்த புதினத்தின் எந்த கதைப் பகுதியை இப்போது திரைப்படமாக எடுக்க முனைகிறார்கள் என்று தெரியவில்லை. மேஜிக் லேன்டர்ன் குழு நடத்தும் நாடகத்திலேயே பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நீக்கியே மெடையேற்ற நேரிட்டது. அப்படிப்பட்ட இந்த கதையை எப்படி திரையில் கொண்டுவரப் போகிறீர்கள். பாகுபலியின் வெற்றி தந்த தைரியத்தில் இந்த திரைப்படத்தை எடுக்க நீங்கள் எத்தனித்திருந்தால், ஒரு திரைப்படத்திற்கு மூன்று மணி நேரம் விகிதம், மூன்று படங்களாக எடுத்தால் தான் கதையை ஓரளவிற்காவது நிறைவாய் சொல்ல முடியும். அப்படி மூன்று மணி நேரக் கதையை மூன்று படங்களாக எடுத்து, மூன்று படங்களையும் மக்கள் பார்த்து வெற்றியடைய செய்யும் அளவிற்கு திரைக்கதையை அமைத்திட முடியுமா?
ஒரு படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் ஒருவனே அந்த படத்தின் நாயகன் ஆவான். பொன்னியின் செல்வன் கதையை ஆழ்ந்து படித்தவர்களுக்கு மட்டுமே இந்த கதை ஆழ்வார்க்கடியான் என்ற கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை  சுற்றியே நகர்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். அப்படியிருக்க மணிரத்னம் அவர்கள் எடுக்கப் போகும் படமும் இந்த பாத்திரத்தை சுற்றியே நகரப் போகிறதா இல்லை வந்தியத்தேவனையும், அருள்மொழிவர்மரயும் மையப்படுத்தி நகரப் போகிறதா ??
தமிழகத்தில் உள்ள 79 சாதிகளும், அதன் நூற்றுக்கும் மேற்பட்ட உட்பிரிவுகளும் இராஜராஜ சோழனை தங்கள் சாதியை சேர்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். இது அரச கால திரைப்படம் என்பதால் பல்வேறு அரச நிகழ்ச்சிகளை காட்சியாக்க நேரிடும். அப்படி காட்சிப்படுத்தப்படும் போது அந்த நிகழ்வுகளின் சடங்கு முறைகள் எவ்வாறு காட்சிப்படுத்த போகிறார்கள்? ஒவ்வொரு சாதிக்கும் குறிப்பிட்ட முறைகள் இருப்பதால், இந்த காட்சிகள் மூலம் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருக்குமல்லவா ?
ஒரு திரைப்படம் என்றால் கதையின் நாயகன் என்று ஒருவன் இருக்க வேண்டும், வில்லன் ஒருவன் இருக்க வேண்டும். அதுவும் ஒரு வரலாற்றுத் திரைப்படம் என்று வரும்போது இந்த ஹீரோ, வில்லன் பாத்திரங்கள் எந்த குழப்பமின்றி சரியான முறையில்  நிலைப்படுத்திருக்க வேண்டும். இந்த பாத்திரங்கள் இல்லையென்றால் அந்த படம் ஒரு வரலாற்று ஆவணப்படமாக மட்டுமே இருக்க முடியுமே தவிர, அதை ஒரு திரைப்படமாக கருத முடியாது. அப்படியாயின் இந்த திரைபடத்தின் நாயகனாகவும், வில்லனாகவும் யாரை சித்தரிக்கப் போகிறார்கள்? 
சோழர்களின் உற்ற நண்பர்களாகவும், தளபதிகளாகவும், மெய்க்காப்பாளர்களாகவும், ஆலோசகர்களாகவும், சம்பந்திகளாகவும் 400- க்கும் மேற்பட்ட ஆண்டுகள் சோழ வம்சத்தினரோடு பயணித்து வந்த பழுவேட்டரையர்களை கொடும் பாதகங்கள் புரிபவர்களாகவும், சதி திட்டம் தீட்டி சோழ சிமாசனத்தை கைப்பற்ற சூழ்ச்சி செய்பவர்களாகவும் சித்தரித்துள்ள  கல்கியின் பொன்னியின் செல்வனை அப்படியே கதைக்களமாக்கப் போகிறார்களா ? இப்படி கண்ணியமிக்க இந்த மாவீரர்களை தவறாக திரையில் காட்டினால் வரலாற்று ஆர்வலர்களின் பழிபாவதிற்கும், அவர்களின் தெய்வங்களாக விளங்கும் சோழ பேரரசர்களின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும். பழுவேட்டரையர்களின் விசுவாசத்தை பற்றியும், அவர்களின் மீது சோழ மன்னர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைப் பற்றியும் அறிந்து கொள்ள சோழ- சாளுக்கிய போர்களை மையப்படுத்தி எழுதப்பட  "சாளுக்கியம்" என்ற வரலாற்று ஆய்வு நூலை படிப்பதே சாலச் சிறந்தது. மணிரத்னம் அவர்களின் திரைக்குழு சாளுக்கியம் நூலை படித்த பின்பு படத்தில் பழுவேட்டரையர்களின் கதாபாத்திரங்களை வடிவமைப்பது எப்படி என்ற முடிவுக்கு வருவது உசிதம்.
சோழர்களின் வாழ்வும், வரலாறும் சபிக்கப்பட்ட ஆசிர்வாதம் என்று ஏற்கனவே பலமுறை எழுதி இருக்கிறேன். தஞ்சை பெருவுடையார் கோயில் பற்றிய என்னுடைய முந்தைய பதவில்கூட இதை குற்பிட்டு இருக்கிறேன்.
பாகுபலி திரைப்படம் ஒரு கற்பனைக் கதை. அதன் கதாபாத்திரங்களை செறிவூட்டப்பட்ட  கோழியை போல எப்படி வேண்டுமென்றாலும் உருவகபடுத்திக் கொள்ளலாம். ஆனால், நிஜத்தில்  உலகின் மாபெரும் நிலப்பரப்பை கட்டியாண்ட ஒரு பேரரசை பற்றி புத்தகம் எழுதவோ அல்லது திரைப்படமாக எடுக்கவோ முற்படும் போது பல்வேறு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது . 

Chat Box