Monday, December 17, 2018

காடவராய மாமன்னர்களின் கோட்டை தலைநகரம் சேந்தமங்கலம்!!!



      ஆபத்சகாயயேஸ்வரர் என்கிற ஸ்ரீ வானிலை கண்டீஸ்வரர் தரிசனம். மாமன்னன் காடவராயன் கோப்பெருஞ்சிங்கனின் இந்த கோட்டைக் கோயில் கெடிலம் ஆற்றுப்படுகையில் சேந்தமங்கலம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 14 கிலோமீட்டரில் உள்ளது சேந்தமங்கலம்.

          கோயிலின் தோற்றம் இன்றும் அறிய இயலாத ஒன்றாகவே  இருந்து வருகிறது. லிங்கம் சுயம்பு. ஆவுடையார் 300 அடிக்கு மேல் இருக்க வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது. லிங்கத்தின் கீழும், கோயிலைச் சுற்றியும்  புதையல் இருப்பதாக பல நூற்றாண்டுகளாக  வருகிறது. இதனை நம்பி பல 
மூலவர் 
வருடங்களுக்கு முன் ஒரு கொள்ளைக் கும்பல் லிங்கத்தின் கீழ் இருக்கும் புதையலை எடுக்கும் எண்ணத்தில் கோயிலினுள் புகுந்து லிங்கத்தை அப்புறப்படுத்த முயற்சித்து தோண்ட ஆரம்பித்தது. ஆனால் இருபது அடி தோண்டியும் மகாவிஷ்ணு ஈசனின் அடியை காண முடியாமல் திகைத்ததுபோல் கொள்ளைக் கும்பலும் ஆவுடையரின் அடியை அடைய முடியாமல் விழி பிதுங்கி நின்றது. புதையலும் இல்லாமல், தோண்டியவரை புதைக்கவும் முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றது அந்த குழு. இன்றும் கோயிலைச் சுற்றி புதையல் இருக்கும் வதந்தி உலாவந்து கொண்டுதான் இருக்கிறது. 

   பல்லவர்கள் காலத்தில் இக்கோயில் விஸ்தரிக்கப்பட்டதாக  கூறப்பட்டாலும் கோயிலின் மேற்கூறை முகப்பில், ஒரு காலத்தில் சோழர்களின் அபிமான சின்னமாக இருந்த மான்  பொறிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம்  நடராசர் கோயிலுக்கும் சேந்தமங்கலம் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. கற்களால் தட்டினால் இசை எழுப்பும் இரண்டு கற்குதிரைகள் கோயில் அருகில் ஏரிக் கரையில் வடிக்கப்பட்டுள்ளன.
சிதைந்த அரசவை மண்டபம் 

 ஏழு சுற்று கருங்கல் மதில்களையும், அகழிகளையும் அரணாக கொண்டிருந்த கோட்டை இன்று பரிதாபமாக நிற்கிறது. தாயார் சன்னதி நிர்கதியாக்கிவிடப்பட்டது போல்  உள்ளது. பகலில் செல்வதற்கே சற்று பயமாக தான் உள்ளது. நமது  கோயில்கள் வழிப்பாட்டுத் தலங்களாக மட்டுமில்லாமல் அரசவை காரியக் கூடங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு ஆதாரமான  100 கால் அரசவை மண்டபம் சிதைந்து பரிதாபமாக காட்சியளிக்கிறது. 
மூலவர் ஆபத்சகாயயேஸ்வரர். நாம் காலை 9.30 மணியளவில் சென்றபோதும் கூட பூஜை செய்வதற்க்கோ, திருநீறு வழங்குவதற்க்கோ கூட ஒருவரும் இல்லை. காலையிலேயே பூஜையை முடித்துவிட்டு சென்றிருந்தார் சிவாச்சாரியார். இப்படி கேட்பாரற்று கிடக்கும் இந்த கோட்டைக்கோயிலின் வரலாறு பிரமிப்பானது. 
உட்பிராகாரம் 
     
  சோழ நாடு கம்பரால் 14- நூற்றாண்டில் தான் "காவிரி நாடு" என்று அழைக்கப்பட்டது. ஆனால் மூவரில் மூத்தவர் திருநாவுக்கரச பெருந்தகையால் 4-ஆம் நூற்றாண்டிலேயே கெடில நதி பாயும் பகுதி தேவாரத்தின்  பன்னிரண்டாம் திருவதிகை  பதிகத்தில்  "கெடில நாடு"  என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. 
           
    சோழர்களின் தஞ்சை-திருச்சி-பழையாறை, பல்லவர்களின் காஞ்சி ஆகிய தலைநகரங்களைப் போல  சேந்தமங்கலம் நகரைத்  தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர் காடவராயர்கள். இன்றைய உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கெடிலம்  நதியின்  கரையில் இந்த நகரை நிர்மாணித்து "கெடிலக்கரை நாகரிகத்தின்" புனர்நிர்மானத்திற்கு வித்திட்டவர்கள் கடவராயர்கள். பல்லவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பிற்கால சோழ ஆட்சியில் சோழ மன்னர்களின் கீழ் சிற்றரசர்களாகவும், படைத் தளபதிகளாகவும் ஆட்சியாளர்களாகவும்  இருந்தவர்கள் காடவராயர்கள். விக்ரம சோழன்(1120-1135) காலத்தில் காடவராயர்கள் மிக்க செல்வாக்குமிக்கவர்களாக இருந்துள்ளனர்.  கடலூர் துறைமுகம் தோற்றுவிக்க அச்ச்சாரமிட்டவர்கள் இவர்கள் தான்.

  
சிதைந்த மதில் சுவர்கள் 
 12-ஆம் நூற்றாண்டின்  தொடக்கத்தில் கெடிலக் கரையில் திருமாணிக்குழி வட்டாரத்தில்  வளந்தனார் என்ற காடவர் தொடங்கி அவரது மரபு வழி வந்த ஆட்கொல்லி, அரச நாராயணன், கச்சிராயன், வீரசேகரன், சீயன் எனப் பல்வேறு  காடவராயர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். சீயனின் மகன் தான் "சீயன் கோப்பெருஞ்சிங்கன்" என்னும் முதலாம் கோப்பெருஞ்சிங்கன். இவரின் காலத்திலேயே காடவராயர்கள் என்னும் காடவர்களின் புகழ் தழைத்தோங்கத் தொடங்கியது. 


          முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் ஆட்சி தொடங்கிய காலத்தில் தான் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கரம் ஓங்கி சோழ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சித் தொடங்கியிருந்தது. சோழ சாம்ராஜ்யம் மூன்றாம் ராஜராஜ சோழரின் ஆட்சியின் கீழ் இருந்தது. மூன்றாம் ராஜராஜ சோழர் நாம் அறிந்த சோழ மகாசக்ரவர்திகள்  ராஜராஜ  சோழர் எனப்படும் முதலாம் ராஜராஜ சோழரில் இருந்து 13-வது தலைமுறை. பாண்டியர்களின் சூழ்ச்சியால் நாட்டை இழந்த மூன்றாம் ராஜராஜ சோழர் இன்றைய திண்டிவனம் அருகே தெள்ளாறு என்னும் ஊரில் தனது படைகளுடன் முகாமிட்டு இருந்தார். சிலகாலமாக சோழர்களுடன் பகை பாராட்டி வந்த கோப்பெருஞ்சிங்கன் படை திரட்டிச் சென்று மூன்றாம் ராஜராஜ சோழரை வென்று, சேந்தமங்கலம் கோட்டைக் கோயிலில்  அவரை  சிறைப்படுத்தினான்.

       இதையறிந்த போசள மன்னன் வீர நரசிம்மன் சேந்தமங்கலம் மீது படையெடுத்து மூன்றாம் ராஜராஜரை மீட்டு சோழ அரியணையில் மீண்டும் ஏற்றினார். இதன் பின்னர் மீண்டெயெழுந்த கோப்பெருஞ்சிங்கன் அடுத்த சில மாதங்களில் பெரம்பலூரில் வீர நரசிம்மனை வீழ்த்தி நாடு கடத்தினான்.

       தன் தந்தைக்கு பிறந்து இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் 1243- ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தான். இரண்டாம் கப்பெருஞ்சிங்கன் தன தந்தையைப் போல் அல்லாமல் சோழர்களுடன் நட்பு பாராட்டினான். மூன்றாம் ராஜேந்திர சோழரை ஆட்சியில் அமர வைத்ததில் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் பங்கு அலாதியானது.    கும்பகோணம் முதல் காஞ்சிபுரம் வரைலிருந்த அணைத்து மன்னர்களையும் வென்று தனது சாம்ராஜ்யத்தை நிறுவி இருந்தான்  இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன். இவனின் போர் முறைகள் மிகவும் கொடூரமாக இருந்தது. போரில் சரணாகதி  அடைந்தர்வர்களை கூட கொலை செய்ய ஆணையிட்டான். சோழர்களின் நட்பை பெற்றதாலும், மிகுந்த வலிமை மிக்க படையை கொண்டதாலும் பல சிற்றரசுகள் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனிடம் சரணடைந்தன.

 
     சேந்தமங்கலம் என்னும் சிறு நகரில் தலைமை அமைத்து ஏறக்குறைய தமிழகத்தின் பாதியை ஆட்சி செய்து வந்தான் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன். மாவீரனாக மட்டுமில்லாமல் மக்களின் அபிமானத்தை பெற்ற மன்னனாகவும் விளங்கினான். சிவபெருமான் மீது கொண்ட பற்றினால்  தஞ்சையிலிருந்து ஆந்திர மாநிலம் திராட்சராமம்  வரை சோழர்களால்  நிர்மாணிக்கப்பட்ட பல்வேறு சிவாலயங்களுக்கு கொடைகளை வழங்கினான். சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலின் கீழை கோபுரத்தை கட்டியவன் இவனே.  சேந்தமங்கலத்திற்கு தென் திசையில் வீற்றிருக்கும் தில்லை கூத்தனை வழிப்பட்ட பிறகே தன்னுடைய அன்றாட அலுவல்களை தொடங்குவானாம் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன். ஆபத்சகாயயேஸ்வரர் கோயிலுக்கு சேந்தமங்கலத்திலிருந்து பலகாத தூரம் வரை நிலங்களை உடைமையாக்கிருந்தான். ஆனால் அரசியல் சக்கரம் எப்போதும் போல சுழல்வதல்ல. ஒரு காலத்தில் பாண்டியர்களின் நட்பை பெற்றிருந்த காடவராயர்கள் இன்று எதிரிகளாகி இருந்தனர். 1279-ல் பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் சோழ நாடு,திருமுனைப்பாடி, சேந்தமங்கலம் ஆகிய அரசுகளை வென்று பாண்டிய நாட்டுடன் இணைத்துக் கொண்டான். இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் வீழ்த்தப்பட்டான். காடவ குல ஆட்சியும் முடிவுக்கு வந்தது.
சிதைந்து கிடக்கும் மதில் சுவர் 
       இப்படியாக பல சிற்றரசுகளையும், பேரரசுகளையும் ஆட்டம் காண வைத்த கோப்பெருஞ்சிங்கர்களின் பெரும் கோட்டையாக விளங்கியது சேந்தமங்கலம். அதன் பிறகு செல்வங்களுக்காகவும், சொத்திற்காகவும் பல்வேறு காலகட்டங்களில் பலதரப்பட்ட எதிரிகளின் சூழ்ச்சியால் இந்நகரம் சூறையாடப்பட்டது. . இப்பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு விசுவாமாக இருந்த பலரால் இக்கோயில் சொத்துக்கள், நிலங்கள் அபகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  கெடிலக்கரை நாகரிகத்தின் முன்னோடிகளாக காடவராயர்கள் இருந்துள்ளனர். இவ்விடத்தின் முக்கியத்துவம் தெரியாமல் பராமரிக்காமல் விட்டது போல் இல்லை, திட்டமிட்டே கண்டுகொள்ளாமல் விட்டது போல் உள்ளது. 


9 comments:

  1. Very nice information.. keep rocking brother

    ReplyDelete
  2. May pl add the source to make it more authentic bro..

    ReplyDelete
    Replies
    1. Unknown place and information to people. Good to hear it and those monuments should be preserved. Good job.

      Delete
    2. அருமையான சிற்பக் கோயில், ஆர்க்யாலஜிஸ்ட் டிப்பார்ட்மெண்ட் முனைந்தால் நன்றாக இருக்கும்.

      Delete
    3. அருமையான சிற்பக் கோயில், ஆர்க்யாலஜிஸ்ட் டிப்பார்ட்மெண்ட் முனைந்தால் நன்றாக இருக்கும்.

      Delete
  3. Very Well Written .Awesome and clear photographs

    ReplyDelete
  4. Semma Bro .....again you proved that you are a journalist ......

    ReplyDelete
  5. சூப்பர் அண்ணா நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

    ReplyDelete

Chat Box