Friday, December 21, 2018

வெள்ளாற்று கரை நாகரிகம். அத்தியாயம் : 1 ஸப்த துறை அறிமுகம்.


காரியானூர் முதல் பெலாந்துறை வரை
       எந்த ஊருக்கு சென்று வந்தாலும் நம் வீட்டை அடைந்ததும் நமக்கு ஏற்படும் மகிழ்சியைப் போல உள்ளது இந்த பதிவை எழுதும் போதும். எத்தனை ஊர்களின் வரலாற்றினை அறிந்து ஆராய்ந்து எழுதினாலும் நம் சொந்த மன்னைப் பற்றி எழுதும் சுகம் அலாதியானது.  

        நம் முன்னோர்கள் பயணம் செய்வதற்கு தரை வழித் தடங்களை விட நீர் வழித் தடங்களுக்கே முன்னுரிமை வழங்கி உள்ளனர். அந்த வகையில் ஆறுகளின் ஓட்டங்களின் ஊடாகவே பயணங்கள் இருந்திருக்க கூடும். ஆறுகளின் கரைகளில் முக்கிய துறைகளை அமைத்து அதன் வழியாக பயணமும், வாணிபமும் நடத்தியுள்ளனர். ஆறுகளையொட்டியே  நாகரிகங்களும் வளர்ந்திருக்கின்றன. நைல் நதி நாகரிகம், வோல்கா நதிக்கரை நாகரிகம்,  சிந்துநதிக் கரை நாகரிகம், கங்கைக்கரை நாகரிகம், குமரிக்கரை நாகரிகம், தாமிரபரணிக்கரை நாகரிகம், காவிரிக்கரை நாகரிகம், கெடிலக்கரை நாகரிகம் ஆகியவையே இதற்கு சான்று. அந்த வகையில் நம் கடலூர் மாவட்டத்தை கடந்து கடலில் பாயும் வெள்ளாற்றிற்கும் இப்படி ஒரு  நதிக்கரை  நாகரிக வரலாறு இருக்க வேண்டும் என்ற தூண்டுதலே இந்த தேடலின் முதல் புள்ளி. 

     நமது தேடலின் முதல் குறிப்பு வெள்ளாற்றையொட்டி இருக்கும் ஏழு துறைகள் என்று சொல்லப்படும் ஸப்த துறை கோயில்கள். 
ஆதிதுறை(காரியனூர்), திருவாலந்துறை, திருமாந்துறை, சு.ஆடுதுறை, திருவதிட்டத்துறை(திட்டக்குடி), திருவட்டத்துறை, திருக்கரந்துறை(பெலந்தூரை).
வாய்ப்பாட்டு மஹாபாரதத்தில்
வெள்ளாற்று குறிப்பு 
இந்த ஏழு துறைகளுக்கும் இடையில் இருக்கும் தூரம்  3-5 மைல்களுக்குள் இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கின்றன. நாம் இந்த துறை கோயில்களின் சிறப்புகள் பற்றியோ, வழிபாடு முறைகளை பற்றியோ ஆராயப்போவதில்லை. இந்த துறை கோயில்களை சுற்றி உருவாகியிருந்த நாகரிகங்களைப் பற்றி ஆராய முற்படுவோம். 

     இந்த ஏழு துறைகளில் திட்டக்குடி மற்றும் திருவட்டத்துறை கோயில்கள் மட்டும் ஆற்றின் இடப்பக்கம் அஃதாவது ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. மீதமுள்ள 5 கோயில்கள் ஆற்றின் வலப்பக்கம் அஃதாவது ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. அனைத்து துறைகளும் ஆற்றின் தென்கரையிலேயே அமைந்திருந்திருக்கக் கூடிய  சாத்தியங்களே மிகையாக காணப்படுகின்றன. சான்றுகள்படி ஏழு துறைகளும் வெள்ளாற்றின் ஒரு பக்கக்கரையில் அமைக்கப்பட்டதாக அறியப்படுகிறது. நம் முன்னோர்கள் கூற்றுப்படி இன்று திட்டக்குடி நகரின் தெற்கில் ஓடும் வெள்ளாறு ஒரு காலத்தில் நகரின் வடக்கில் ஓடியதாக சொல்லப்படுகிறது. கடந்த நூற்றாண்டில் ஆற்றின் போக்கு நகரின் தெற்கே மாறியதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி இருப்பின் திருவட்டத்துறை வரை ஊரின் வடதிசையில் ஓடிய ஆறு தென்திசையில் பாய்ந்திருக்க கூடும். இதற்கான ஆதாரங்களை சேகரிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். 

         ஸப்த ரிஷிகளால் பிரதிஷட்டை செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த ஏழு துறைகளையும் செப்பனிட்டு பராமரிக்க பல்வேறு  காலக்கட்டங்களில் பாண்டிய, சோழ அரசுகள் முயற்சி எடுத்து வந்துள்ளன. இந்த கோயில்களை சுற்றி ஊர்களை உருவாக்கி அங்கே நதிக்கரை நாகரிகம் தழைக்க வழி வகுத்துள்ளனர். அந்த ஊர்களில் கோயில்களை நிர்வகிக்க தனாதிகாரிகளையும், படைவீர்களாயும்; கட்டுமானகங்களை கவனிக்க சிற்பிகளையும், கொல்லர்களையும்; நான்கு கால பூஜைகள் நடைபெற சிவாச்சாரியார்களையும் குடியமர்த்தியுள்ளனர்.
காவியக் கம்பன்
நூலில் வெள்ளாற்றுக் குறிப்பு 
   
    அந்த ஊர்களுக்கு பொருட்களை கொண்டு சேர்க்கவும், வெளியே கொண்டு செல்லவும் இந்த துறைகளை ஆற்றுத் துறைமுகங்களாக பயன்படுத்திருக்க வேண்டும். வெள்ளாற்றின் மணல் ஒரு காலத்தில் அரியவகை தாதுக்களை கொண்டதாக இருந்துள்ளது. ஏழு துறைகளில் ஒரு துறையில் தூர்ந்த நிலையில் இருக்கும் சுரங்கத்தில் இந்த அதிசயத்தைக் கண்டதாக சமீபத்தில் ஒருவர் கூறக் கேட்டோம். பாண்டிய, சோழ அரசுகளின் எல்லை அரணாக வெள்ளாறு இருந்துள்ளதால் இங்கே படை வீரர்களுக்கு தேவையான போர்க்கருவிகள்  செய்வதற்கான கொல்லன் பட்டறைகளும் இருந்திருக்க வேண்டும். கி.பி 710-களில் நந்திபுரத்து முற்றுகைக்கு பிறகு  அரிகேசரி பராங்குச மாறவர்ம பாண்டியனிற்கும், பல்லவ மன்னனான இரண்டாம் நரசிம்மவர்மனிற்கும் இடையே மிகப்பெரிய போர்கள் வெள்ளாற்று கரையில் நிகழ்ந்தேறியது.

       வெள்ளாற்றின் நாகரிக சிறப்பையும் இந்த ஏழு துறைகளின் வரலாற்றையும்  அறிய முயற்சிகள்  தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  எதிர்வரும் நமது சந்ததியினர்க்கு நாம் எதைக் கற்றுத்தர போகிறோம்? வெள்ளாற்று கரை நாகரிகத்தின் முன்னோடிகளான நமது முன்னோர்கள் இந்நாகரிகத்தை முன்னெடுத்துச் செல்லவும், பாதுகாக்கவும் இரத்தமும் சதையுமாக, சிந்தனையுடனும் உணர்வுகளுடனும் உலா வந்த கரையின் மீது நாம் இன்று நாம் அமர்நதிருக்கிறொம். அந்த வரலாற்றை அவர்களுக்கு கற்பிப்போம். தேடல் தொடர்கிறது.  பின்வரும் பதிவுகளுக்காக காத்திருங்கள். 

10 comments:

  1. அருமை.. வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  2. நல்ல தகவல். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாழ்த்துகள். தேடல் தொடரட்டும் ஐயா.

    ReplyDelete
  4. நல்ல முயற்சி எனது....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. Ayya thanks for this valuable information..

    ReplyDelete
  6. அருமை.இன்னும் ஆதாரங்களுடன் விரிவாக தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. அருமை!! வாழ்த்துகள் !!!

    ReplyDelete

Chat Box