Friday, December 21, 2018

வெள்ளாற்று கரை நாகரிகம். அத்தியாயம் : 1 ஸப்த துறை அறிமுகம்.


காரியானூர் முதல் பெலாந்துறை வரை
       எந்த ஊருக்கு சென்று வந்தாலும் நம் வீட்டை அடைந்ததும் நமக்கு ஏற்படும் மகிழ்சியைப் போல உள்ளது இந்த பதிவை எழுதும் போதும். எத்தனை ஊர்களின் வரலாற்றினை அறிந்து ஆராய்ந்து எழுதினாலும் நம் சொந்த மன்னைப் பற்றி எழுதும் சுகம் அலாதியானது.  

        நம் முன்னோர்கள் பயணம் செய்வதற்கு தரை வழித் தடங்களை விட நீர் வழித் தடங்களுக்கே முன்னுரிமை வழங்கி உள்ளனர். அந்த வகையில் ஆறுகளின் ஓட்டங்களின் ஊடாகவே பயணங்கள் இருந்திருக்க கூடும். ஆறுகளின் கரைகளில் முக்கிய துறைகளை அமைத்து அதன் வழியாக பயணமும், வாணிபமும் நடத்தியுள்ளனர். ஆறுகளையொட்டியே  நாகரிகங்களும் வளர்ந்திருக்கின்றன. நைல் நதி நாகரிகம், வோல்கா நதிக்கரை நாகரிகம்,  சிந்துநதிக் கரை நாகரிகம், கங்கைக்கரை நாகரிகம், குமரிக்கரை நாகரிகம், தாமிரபரணிக்கரை நாகரிகம், காவிரிக்கரை நாகரிகம், கெடிலக்கரை நாகரிகம் ஆகியவையே இதற்கு சான்று. அந்த வகையில் நம் கடலூர் மாவட்டத்தை கடந்து கடலில் பாயும் வெள்ளாற்றிற்கும் இப்படி ஒரு  நதிக்கரை  நாகரிக வரலாறு இருக்க வேண்டும் என்ற தூண்டுதலே இந்த தேடலின் முதல் புள்ளி. 

     நமது தேடலின் முதல் குறிப்பு வெள்ளாற்றையொட்டி இருக்கும் ஏழு துறைகள் என்று சொல்லப்படும் ஸப்த துறை கோயில்கள். 
ஆதிதுறை(காரியனூர்), திருவாலந்துறை, திருமாந்துறை, சு.ஆடுதுறை, திருவதிட்டத்துறை(திட்டக்குடி), திருவட்டத்துறை, திருக்கரந்துறை(பெலந்தூரை).
வாய்ப்பாட்டு மஹாபாரதத்தில்
வெள்ளாற்று குறிப்பு 
இந்த ஏழு துறைகளுக்கும் இடையில் இருக்கும் தூரம்  3-5 மைல்களுக்குள் இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கின்றன. நாம் இந்த துறை கோயில்களின் சிறப்புகள் பற்றியோ, வழிபாடு முறைகளை பற்றியோ ஆராயப்போவதில்லை. இந்த துறை கோயில்களை சுற்றி உருவாகியிருந்த நாகரிகங்களைப் பற்றி ஆராய முற்படுவோம். 

     இந்த ஏழு துறைகளில் திட்டக்குடி மற்றும் திருவட்டத்துறை கோயில்கள் மட்டும் ஆற்றின் இடப்பக்கம் அஃதாவது ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. மீதமுள்ள 5 கோயில்கள் ஆற்றின் வலப்பக்கம் அஃதாவது ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. அனைத்து துறைகளும் ஆற்றின் தென்கரையிலேயே அமைந்திருந்திருக்கக் கூடிய  சாத்தியங்களே மிகையாக காணப்படுகின்றன. சான்றுகள்படி ஏழு துறைகளும் வெள்ளாற்றின் ஒரு பக்கக்கரையில் அமைக்கப்பட்டதாக அறியப்படுகிறது. நம் முன்னோர்கள் கூற்றுப்படி இன்று திட்டக்குடி நகரின் தெற்கில் ஓடும் வெள்ளாறு ஒரு காலத்தில் நகரின் வடக்கில் ஓடியதாக சொல்லப்படுகிறது. கடந்த நூற்றாண்டில் ஆற்றின் போக்கு நகரின் தெற்கே மாறியதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி இருப்பின் திருவட்டத்துறை வரை ஊரின் வடதிசையில் ஓடிய ஆறு தென்திசையில் பாய்ந்திருக்க கூடும். இதற்கான ஆதாரங்களை சேகரிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். 

         ஸப்த ரிஷிகளால் பிரதிஷட்டை செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த ஏழு துறைகளையும் செப்பனிட்டு பராமரிக்க பல்வேறு  காலக்கட்டங்களில் பாண்டிய, சோழ அரசுகள் முயற்சி எடுத்து வந்துள்ளன. இந்த கோயில்களை சுற்றி ஊர்களை உருவாக்கி அங்கே நதிக்கரை நாகரிகம் தழைக்க வழி வகுத்துள்ளனர். அந்த ஊர்களில் கோயில்களை நிர்வகிக்க தனாதிகாரிகளையும், படைவீர்களாயும்; கட்டுமானகங்களை கவனிக்க சிற்பிகளையும், கொல்லர்களையும்; நான்கு கால பூஜைகள் நடைபெற சிவாச்சாரியார்களையும் குடியமர்த்தியுள்ளனர்.
காவியக் கம்பன்
நூலில் வெள்ளாற்றுக் குறிப்பு 
   
    அந்த ஊர்களுக்கு பொருட்களை கொண்டு சேர்க்கவும், வெளியே கொண்டு செல்லவும் இந்த துறைகளை ஆற்றுத் துறைமுகங்களாக பயன்படுத்திருக்க வேண்டும். வெள்ளாற்றின் மணல் ஒரு காலத்தில் அரியவகை தாதுக்களை கொண்டதாக இருந்துள்ளது. ஏழு துறைகளில் ஒரு துறையில் தூர்ந்த நிலையில் இருக்கும் சுரங்கத்தில் இந்த அதிசயத்தைக் கண்டதாக சமீபத்தில் ஒருவர் கூறக் கேட்டோம். பாண்டிய, சோழ அரசுகளின் எல்லை அரணாக வெள்ளாறு இருந்துள்ளதால் இங்கே படை வீரர்களுக்கு தேவையான போர்க்கருவிகள்  செய்வதற்கான கொல்லன் பட்டறைகளும் இருந்திருக்க வேண்டும். கி.பி 710-களில் நந்திபுரத்து முற்றுகைக்கு பிறகு  அரிகேசரி பராங்குச மாறவர்ம பாண்டியனிற்கும், பல்லவ மன்னனான இரண்டாம் நரசிம்மவர்மனிற்கும் இடையே மிகப்பெரிய போர்கள் வெள்ளாற்று கரையில் நிகழ்ந்தேறியது.

       வெள்ளாற்றின் நாகரிக சிறப்பையும் இந்த ஏழு துறைகளின் வரலாற்றையும்  அறிய முயற்சிகள்  தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  எதிர்வரும் நமது சந்ததியினர்க்கு நாம் எதைக் கற்றுத்தர போகிறோம்? வெள்ளாற்று கரை நாகரிகத்தின் முன்னோடிகளான நமது முன்னோர்கள் இந்நாகரிகத்தை முன்னெடுத்துச் செல்லவும், பாதுகாக்கவும் இரத்தமும் சதையுமாக, சிந்தனையுடனும் உணர்வுகளுடனும் உலா வந்த கரையின் மீது நாம் இன்று நாம் அமர்நதிருக்கிறொம். அந்த வரலாற்றை அவர்களுக்கு கற்பிப்போம். தேடல் தொடர்கிறது.  பின்வரும் பதிவுகளுக்காக காத்திருங்கள். 

Monday, December 17, 2018

காடவராய மாமன்னர்களின் கோட்டை தலைநகரம் சேந்தமங்கலம்!!!



      ஆபத்சகாயயேஸ்வரர் என்கிற ஸ்ரீ வானிலை கண்டீஸ்வரர் தரிசனம். மாமன்னன் காடவராயன் கோப்பெருஞ்சிங்கனின் இந்த கோட்டைக் கோயில் கெடிலம் ஆற்றுப்படுகையில் சேந்தமங்கலம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 14 கிலோமீட்டரில் உள்ளது சேந்தமங்கலம்.

          கோயிலின் தோற்றம் இன்றும் அறிய இயலாத ஒன்றாகவே  இருந்து வருகிறது. லிங்கம் சுயம்பு. ஆவுடையார் 300 அடிக்கு மேல் இருக்க வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது. லிங்கத்தின் கீழும், கோயிலைச் சுற்றியும்  புதையல் இருப்பதாக பல நூற்றாண்டுகளாக  வருகிறது. இதனை நம்பி பல 
மூலவர் 
வருடங்களுக்கு முன் ஒரு கொள்ளைக் கும்பல் லிங்கத்தின் கீழ் இருக்கும் புதையலை எடுக்கும் எண்ணத்தில் கோயிலினுள் புகுந்து லிங்கத்தை அப்புறப்படுத்த முயற்சித்து தோண்ட ஆரம்பித்தது. ஆனால் இருபது அடி தோண்டியும் மகாவிஷ்ணு ஈசனின் அடியை காண முடியாமல் திகைத்ததுபோல் கொள்ளைக் கும்பலும் ஆவுடையரின் அடியை அடைய முடியாமல் விழி பிதுங்கி நின்றது. புதையலும் இல்லாமல், தோண்டியவரை புதைக்கவும் முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றது அந்த குழு. இன்றும் கோயிலைச் சுற்றி புதையல் இருக்கும் வதந்தி உலாவந்து கொண்டுதான் இருக்கிறது. 

   பல்லவர்கள் காலத்தில் இக்கோயில் விஸ்தரிக்கப்பட்டதாக  கூறப்பட்டாலும் கோயிலின் மேற்கூறை முகப்பில், ஒரு காலத்தில் சோழர்களின் அபிமான சின்னமாக இருந்த மான்  பொறிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம்  நடராசர் கோயிலுக்கும் சேந்தமங்கலம் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. கற்களால் தட்டினால் இசை எழுப்பும் இரண்டு கற்குதிரைகள் கோயில் அருகில் ஏரிக் கரையில் வடிக்கப்பட்டுள்ளன.
சிதைந்த அரசவை மண்டபம் 

 ஏழு சுற்று கருங்கல் மதில்களையும், அகழிகளையும் அரணாக கொண்டிருந்த கோட்டை இன்று பரிதாபமாக நிற்கிறது. தாயார் சன்னதி நிர்கதியாக்கிவிடப்பட்டது போல்  உள்ளது. பகலில் செல்வதற்கே சற்று பயமாக தான் உள்ளது. நமது  கோயில்கள் வழிப்பாட்டுத் தலங்களாக மட்டுமில்லாமல் அரசவை காரியக் கூடங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு ஆதாரமான  100 கால் அரசவை மண்டபம் சிதைந்து பரிதாபமாக காட்சியளிக்கிறது. 
மூலவர் ஆபத்சகாயயேஸ்வரர். நாம் காலை 9.30 மணியளவில் சென்றபோதும் கூட பூஜை செய்வதற்க்கோ, திருநீறு வழங்குவதற்க்கோ கூட ஒருவரும் இல்லை. காலையிலேயே பூஜையை முடித்துவிட்டு சென்றிருந்தார் சிவாச்சாரியார். இப்படி கேட்பாரற்று கிடக்கும் இந்த கோட்டைக்கோயிலின் வரலாறு பிரமிப்பானது. 
உட்பிராகாரம் 
     
  சோழ நாடு கம்பரால் 14- நூற்றாண்டில் தான் "காவிரி நாடு" என்று அழைக்கப்பட்டது. ஆனால் மூவரில் மூத்தவர் திருநாவுக்கரச பெருந்தகையால் 4-ஆம் நூற்றாண்டிலேயே கெடில நதி பாயும் பகுதி தேவாரத்தின்  பன்னிரண்டாம் திருவதிகை  பதிகத்தில்  "கெடில நாடு"  என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. 
           
    சோழர்களின் தஞ்சை-திருச்சி-பழையாறை, பல்லவர்களின் காஞ்சி ஆகிய தலைநகரங்களைப் போல  சேந்தமங்கலம் நகரைத்  தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர் காடவராயர்கள். இன்றைய உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கெடிலம்  நதியின்  கரையில் இந்த நகரை நிர்மாணித்து "கெடிலக்கரை நாகரிகத்தின்" புனர்நிர்மானத்திற்கு வித்திட்டவர்கள் கடவராயர்கள். பல்லவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பிற்கால சோழ ஆட்சியில் சோழ மன்னர்களின் கீழ் சிற்றரசர்களாகவும், படைத் தளபதிகளாகவும் ஆட்சியாளர்களாகவும்  இருந்தவர்கள் காடவராயர்கள். விக்ரம சோழன்(1120-1135) காலத்தில் காடவராயர்கள் மிக்க செல்வாக்குமிக்கவர்களாக இருந்துள்ளனர்.  கடலூர் துறைமுகம் தோற்றுவிக்க அச்ச்சாரமிட்டவர்கள் இவர்கள் தான்.

  
சிதைந்த மதில் சுவர்கள் 
 12-ஆம் நூற்றாண்டின்  தொடக்கத்தில் கெடிலக் கரையில் திருமாணிக்குழி வட்டாரத்தில்  வளந்தனார் என்ற காடவர் தொடங்கி அவரது மரபு வழி வந்த ஆட்கொல்லி, அரச நாராயணன், கச்சிராயன், வீரசேகரன், சீயன் எனப் பல்வேறு  காடவராயர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். சீயனின் மகன் தான் "சீயன் கோப்பெருஞ்சிங்கன்" என்னும் முதலாம் கோப்பெருஞ்சிங்கன். இவரின் காலத்திலேயே காடவராயர்கள் என்னும் காடவர்களின் புகழ் தழைத்தோங்கத் தொடங்கியது. 


          முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் ஆட்சி தொடங்கிய காலத்தில் தான் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கரம் ஓங்கி சோழ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சித் தொடங்கியிருந்தது. சோழ சாம்ராஜ்யம் மூன்றாம் ராஜராஜ சோழரின் ஆட்சியின் கீழ் இருந்தது. மூன்றாம் ராஜராஜ சோழர் நாம் அறிந்த சோழ மகாசக்ரவர்திகள்  ராஜராஜ  சோழர் எனப்படும் முதலாம் ராஜராஜ சோழரில் இருந்து 13-வது தலைமுறை. பாண்டியர்களின் சூழ்ச்சியால் நாட்டை இழந்த மூன்றாம் ராஜராஜ சோழர் இன்றைய திண்டிவனம் அருகே தெள்ளாறு என்னும் ஊரில் தனது படைகளுடன் முகாமிட்டு இருந்தார். சிலகாலமாக சோழர்களுடன் பகை பாராட்டி வந்த கோப்பெருஞ்சிங்கன் படை திரட்டிச் சென்று மூன்றாம் ராஜராஜ சோழரை வென்று, சேந்தமங்கலம் கோட்டைக் கோயிலில்  அவரை  சிறைப்படுத்தினான்.

       இதையறிந்த போசள மன்னன் வீர நரசிம்மன் சேந்தமங்கலம் மீது படையெடுத்து மூன்றாம் ராஜராஜரை மீட்டு சோழ அரியணையில் மீண்டும் ஏற்றினார். இதன் பின்னர் மீண்டெயெழுந்த கோப்பெருஞ்சிங்கன் அடுத்த சில மாதங்களில் பெரம்பலூரில் வீர நரசிம்மனை வீழ்த்தி நாடு கடத்தினான்.

       தன் தந்தைக்கு பிறந்து இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் 1243- ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தான். இரண்டாம் கப்பெருஞ்சிங்கன் தன தந்தையைப் போல் அல்லாமல் சோழர்களுடன் நட்பு பாராட்டினான். மூன்றாம் ராஜேந்திர சோழரை ஆட்சியில் அமர வைத்ததில் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் பங்கு அலாதியானது.    கும்பகோணம் முதல் காஞ்சிபுரம் வரைலிருந்த அணைத்து மன்னர்களையும் வென்று தனது சாம்ராஜ்யத்தை நிறுவி இருந்தான்  இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன். இவனின் போர் முறைகள் மிகவும் கொடூரமாக இருந்தது. போரில் சரணாகதி  அடைந்தர்வர்களை கூட கொலை செய்ய ஆணையிட்டான். சோழர்களின் நட்பை பெற்றதாலும், மிகுந்த வலிமை மிக்க படையை கொண்டதாலும் பல சிற்றரசுகள் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனிடம் சரணடைந்தன.

 
     சேந்தமங்கலம் என்னும் சிறு நகரில் தலைமை அமைத்து ஏறக்குறைய தமிழகத்தின் பாதியை ஆட்சி செய்து வந்தான் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன். மாவீரனாக மட்டுமில்லாமல் மக்களின் அபிமானத்தை பெற்ற மன்னனாகவும் விளங்கினான். சிவபெருமான் மீது கொண்ட பற்றினால்  தஞ்சையிலிருந்து ஆந்திர மாநிலம் திராட்சராமம்  வரை சோழர்களால்  நிர்மாணிக்கப்பட்ட பல்வேறு சிவாலயங்களுக்கு கொடைகளை வழங்கினான். சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலின் கீழை கோபுரத்தை கட்டியவன் இவனே.  சேந்தமங்கலத்திற்கு தென் திசையில் வீற்றிருக்கும் தில்லை கூத்தனை வழிப்பட்ட பிறகே தன்னுடைய அன்றாட அலுவல்களை தொடங்குவானாம் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன். ஆபத்சகாயயேஸ்வரர் கோயிலுக்கு சேந்தமங்கலத்திலிருந்து பலகாத தூரம் வரை நிலங்களை உடைமையாக்கிருந்தான். ஆனால் அரசியல் சக்கரம் எப்போதும் போல சுழல்வதல்ல. ஒரு காலத்தில் பாண்டியர்களின் நட்பை பெற்றிருந்த காடவராயர்கள் இன்று எதிரிகளாகி இருந்தனர். 1279-ல் பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் சோழ நாடு,திருமுனைப்பாடி, சேந்தமங்கலம் ஆகிய அரசுகளை வென்று பாண்டிய நாட்டுடன் இணைத்துக் கொண்டான். இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் வீழ்த்தப்பட்டான். காடவ குல ஆட்சியும் முடிவுக்கு வந்தது.
சிதைந்து கிடக்கும் மதில் சுவர் 
       இப்படியாக பல சிற்றரசுகளையும், பேரரசுகளையும் ஆட்டம் காண வைத்த கோப்பெருஞ்சிங்கர்களின் பெரும் கோட்டையாக விளங்கியது சேந்தமங்கலம். அதன் பிறகு செல்வங்களுக்காகவும், சொத்திற்காகவும் பல்வேறு காலகட்டங்களில் பலதரப்பட்ட எதிரிகளின் சூழ்ச்சியால் இந்நகரம் சூறையாடப்பட்டது. . இப்பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு விசுவாமாக இருந்த பலரால் இக்கோயில் சொத்துக்கள், நிலங்கள் அபகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  கெடிலக்கரை நாகரிகத்தின் முன்னோடிகளாக காடவராயர்கள் இருந்துள்ளனர். இவ்விடத்தின் முக்கியத்துவம் தெரியாமல் பராமரிக்காமல் விட்டது போல் இல்லை, திட்டமிட்டே கண்டுகொள்ளாமல் விட்டது போல் உள்ளது. 


Friday, December 7, 2018

மர்மங்களின் தேசம் தஞ்சை பெருவுடையார் கோயில்!!!

               

தஞ்சை பெருவுடையார் கோயில் எங்கள் மாமன்னன் ராஜகேசரி ஸ்ரீ ஸ்ரீ ராஜராஜசோழன் என்ற மும்முடி சோழ சக்ரவர்த்தி அவர்களால் 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பெருவுடையாரின் அருளால் ராஜராஜசோழ சக்ரவர்ததிகளும் ராஜேந்திர சோழ சக்ரவர்ததிகளும் பல்வேறு தேசங்களை  சாளுக்கிய வரலாற்றின் சான்றாக பதாமி உள்ளிட்ட நகரங்களும், விஜயநகர பேரரசின் ஹம்பியும், பல்லவர்களின் புகழ் கூறும் மாமல்லபுரமும்  இருப்பது போல் தங்கள் காலடியில் பணிய வைத்தனர் எம் சோழ குலத்தின் வரலாற்றின் ஆக சிறந்த ஒரு சொத்து பெருவுடையார் கோயில். என்னுடைய முந்தைய பதிவுகளில் நாள் பல்வேறு முறை குறிப்பிட்டதுள்ள போல் பல்வேறு  மர்மங்களையும், அமானுஷ்யங்களையும் உள்ளடக்கியது சோழ குலம். தெளிவுபடுத்தப்படாத பல்வேறு சூழ்ச்சிகளும், அவிழ்க்கப்படாத பல்வேறு முடிச்சுகளும் நிறைந்தது சோழ வரலாறு.

அதுபோலவே பெருவுடையார் கோயிலும் பல்வேறு மர்மங்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

"நானும், என் அக்கன் கொடுத்தனவும், என் பெண்டு பிள்ளைகள் கொடுத்தனவும், அடியேன் வலது கால் மண்டியிட்டு, இடது கால் பெருவிரல் மடித்து அய்யன் பெருவுடையார் முன் எந்த பிரதிபலனும் எதிர்பாராம்ல வணங்குகிறேன்" - ஸ்ரீ ஸ்ரீ ராஜராஜ சோழ சக்ரவர்த்தி. 

"எவன் ஒருவன் அகந்தையில் தன் செருக்கு மிகுதியால் தான் தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்தில் பெருவுடையார் சன்னதியில் உள்நுழைகிறானோ, அவன் செருக்கு அழிக்கப்படும; அவன் நிர்மூலமாக்கப்பட்டு சாகக்கடவது."

நிகழ்வு 1: இந்திரா காந்தி
          முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் 1984 - ஆம் ஆண்டு ராஜராஜசோழ சக்ரவர்ததிகளின் சதைய விழாவில் பங்கேற்க தஞ்சை மண்ணில் முதல்முதலாக கால் பதித்தார். அப்போது  பெருவுடையாரை தரிசனம் செய்தார். அடுத்த சில வாரங்களிலேயே அக்டோபர்  31- ஆம் நாள் தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


நிகழ்வு 2 : எம்.ஜி.ஆர்
        இந்திரா காந்தி பங்கேற்ற அதே நிகழ்வில் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களும் கலந்து கொண்டார். அடுத்த சில நாட்களிலேயே இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட அதே அக்டோபர் மாதம் எம்.ஜி.ஆர் அவர்களும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறுநீரக சிகச்சைக்காக நியூயார்க் அழைத்து செல்லப்பட்டார். அப்போது தேர்தல் நேரம். படுத்துக்கொண்டே தமிழக சட்டசபையில் 195 அதிமுகவிற்கு வென்று கொடுத்தார். சிகிச்சை முடிந்து 1985 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் நாள் தமிழகம் திரும்பி 10-ஆம் நாள் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதற்கு பிறகு முன்பை போல் அவரால் இயல்பாய் செயல்பட முடியவில்லை. அவர் உயிருடன் இருந்த அடுத்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு முறை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்தார். இறுதியாக பூரண குணமடையாமலே 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம நாள் இறந்தார்.

நிகழ்வு 3 : கருணாநிதி
    2010-ஆம் ஆண்டு பெருவுடையார் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாடப்பட்டது. இதனை பெரிய விழாவாக தமிழக அரசே ஏற்று நடத்தும் என்று அன்றைய முதல்வர கருணாநிதி அறிவித்தார். ஒரு வாரம் நடைபெற்ற நிகழ்வின் கடைசி இரண்டு நாட்கள் நிகழ்வில் கருணாநிதி கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. நாடகம், இசைக் கச்சேரி, நாட்டிய நிகழ்ச்சிகள் என அல்லோலப்பட்டது தஞ்சை. இதற்கான மேடை, பந்தல், அரங்கம் என சகலமும் பெருவுடையார் கோயிலின் உள்ளேயே ஏற்பாடாகியிருந்தது. கருணாநிதி அவர்கள் பங்கேற்ற செப். 25-ஆம் நாள்1000 நடனக் கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்வு கோயிலுக்குள்ளேயே நிகழ்ந்தேறியது.

       இவை நடந்தது 2010 செப்டம்பர்  மாதம். 2011 மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க பெரும் தோல்வியடைந்தது. கருணாநிதியின் உடல்நிலையும் குன்றத் தொடங்கியது. அடுத்து வந்த 2016 தேர்தலிலும் தி.மு.க வெற்றிபெறவில்லை. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி மீண்டும் தமிழக முதல்வர் ஆக முடியாமலேயே 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் நாள் இறந்தார்.
    
   இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்திரா காந்தி அவர்களும், எம்.ஜி.ஆர் அவர்களும் பெருவுடையார் கோயிலின் பிரதான வாயிலான கேரளாந்தகன் கோபுர வாயிலின் வழியாகவே கோயிலின் உள்ளே பிரவேசித்து உள்ளனர். இந்த கோபுர வாயிலும், பெரிய நந்தியும்  கோயில் கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் கட்டியதல்ல. பிற்காலத்தில் சேர நாட்டு படையெடுப்பின் போது ஆரல்வாய்மொழி போரில் சிறைபடுத்தப்பட்ட 11,031 நம்பூதிரிகளைக் கொண்டு கட்டப்பட்டது. இக்கோபரத்தை கட்டிய போது நம்பூதிரிகள் துர்மந்திரங்களை ஓதிக் கொண்டே பணியாற்றியதாக அறியப்படுகிறது. 

   இதனால் சோழ குலமும், கோயிலும் சபிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கட்டுமானத்தை முன்னின்று நடத்தியவர்  சோழத் தளபதி மாவீரர் பெரியபழுவேட்டரைையர் மறவன் கந்தனார் அவர்களின்   சிஷ்யையான வீர மங்கை அநுக்கமா என்னும் திருநங்கை ஆவார். ஆனால் மூடப்பழக்கங்களின் நம்பிக்கையற்றவர் என்று கூறப்பட்ட கருணாநிதி சேரலாதன் வாயிலை தவிர்த்து வடக்கு வாயில் வழியாக உள்நுழைந்தார்.

       பெருவுடையார் கோயிலினை கட்டி முடித்த அடுத்த நான்கு ஆண்டுகளில், அதாவது கி.பி.1014 ஆம் ஆண்டு ராஜராஜசோழ சக்ரவர்ததிகள் இறையடி சேர்ந்தார்.  இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோர்க்கு நேர்ந்தவை விதியோ அல்லது எதேச்சையாக நேர்ந்தது என்றோ கூறினாலும் பல்வேறு அரசியல் மற்றும் தொழில் பிரபலங்கள் இந்த மர்மங்களின் காரணத்தால் பெருவுடையார் கோயில் படி ஏறாமல் தவிர்த்து  உள்ளனர். என்னதான் சபிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் இராஜேந்திர சோழ  சக்ரவர்ததிகளின் ஆட்சியின் கீழ் சோழியம் தழைத்தோங்கி இருந்தது. 

      பெருவுடையார் கோயிலின் சாபங்களை போக்குவதாக கூறி கோயிலின் உள்ளே இரண்டு  நாட்கள் தியான வகுப்புகள் நடத்த திட்டமிட்டிருந்தார் வாழும் கலை அமைப்பின் ரவிசங்கர்ஜி.
 மனிதர்கள் சாபம் விமோச்சனம்  கொடுக்குமளவிற்கு எங்கள் பெருவுடையார் தர தாழ்ந்துவிட்டாரா என்ன. அப்படி ஏதும் நிகழ்ச்சி நடந்திருந்தால் சோழ குலத்தின் சாபத்திறக்கு ரவிசங்கர்ஜி ஆளாக நேர்ந்திருக்கும். நடக்காமல் தடுத்தது உயர்நீதிமன்றம்.
சிவபாதநேசன்  ஸ்ரீ ஸ்ரீ  ராஜராஜ சோழ சக்ரவர்த்தி அவர்களால்  ஸ்தாபிக்கப்பட்ட ராஜ லிங்கம் எங்கள்
பெருவுடையார். புயலால், பூகம்பத்தால் எவ்வித பஜஞ்சபூத நிகழ்வாலும் அசைக்க முடியாத மர்மம் பெருவுடையார் கோயில். சோழ குலமும்,  பெருவுடையார் கோயிலும் மர்மங்கள் சூழ்ந்தவையாக இருப்பின் அவை மர்மங்களாகவே  இருக்கட்டும்.                                                       திருச்சிற்றம்பலம்.
சோழம் வாழியவே! சோழர் புகழ் ஓங்குகவே!

Chat Box