Sunday, September 23, 2018

பொன்னியின் செல்வன் தழுவலா செக்கச் சிவந்த வானம் ?


செக்கச் சிவந்த வானம் மணிரத்தினம் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே செப்டம்பர் 27-இல் வெளியாகயுள்ளது. இப்படத்தின் இரண்டு டிரைலர்கள் ஆகஸ்ட் 24-லும், செப்டம்பர் 21-லும் வெளியானது. ஏ.ஆர். ரகுமான் இசையில் டிரைலர்கள் மிரட்டலாகவே உள்ளன. நிகழ்கால நிகழ்ச்சிகளையும், இதிகாச காப்பியங்களையும் அடித்தளமாக வைத்து திரைக்கதை அமைப்பதில் ஆர்வம் கொண்டவர் மணிரத்தினம்  அவர்கள். மகாபாரதத்தைத் தழுவி  தளபதியும், ராமாயணத்தைத் தழுவி ராவணனும், எம்.ஜி.ஆர்-கலைஞர் கதையை இருவர் திரைப்படமாகவும் எடுத்துத்திருந்தார் மணிரத்தினம். ஸ்ரீ ஸ்ரீ கோவிராஜ ராஜ கேசரி ராஜ ராஜ சோழக் சக்ரவர்தத்திகளை மையமாகக் கொண்டு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் காவியத்தைத் திரைப்படமாக இயக்க வேண்டும் என்பது தன்னுடைய நீண்ட நாள் கனவாக சொல்லியிருக்கிறார் மணிரத்தினம். 

      சபிக்கப்பட்டதாக கூறப்படும் சோழ பேரரசின் வரலாற்றை திரைப்படமாக எடுக்க மிக சிலரே துணிந்துள்ளனர். 1958-ல் எம்.ஜி.ஆர் அவர்கள் இயக்கத்தில் உருவாக இருந்த பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டது. கமலஹாசனும் இம்முயற்சியில் இறங்கி கைவிட்டார். 1972-ல் ஏ.பி.நாகராஜன் அவர்களால் ராஜ ராஜ சோழன் திரைப்படமும், 2010-ல் செல்வராகவனால் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படமும் எடுக்கப்பட்டன. இந்த இரு இயக்குனர்களும் பின்னாளில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகினர். மணிரத்தினமும் 2015-ல் பொன்னியின் செல்வன் திரைக்காவியம் எடுக்கும் முயற்சியில் இருந்ததாகக் கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் முக்கியப் பாத்திரங்களாக கருதப்படுவது சுந்தரச் சோழன்(ராஜ ராஜ சோழனின் தந்தை), ஆதித்யச் சோழன்(ராஜ ராஜ சோழனின் முதல் சகோதரன்), உத்தமச் சோழன்(ராஜ ராஜ சோழனின் சிற்றப்பா), ராஜ ராஜ சோழன்(அருள்மொழி வர்மன்), வந்தியத்தேவன்(ராஜ ராஜ சோழனின் ஆலோசகர்,படைத்  தளபதி,உற்ற நண்பர்). தற்போது வெளியாக இருக்கும் செக்கச் சிவந்த வானமும் பொன்னியின் செல்வன்  பாத்திரங்களைத் தழுவி எடுக்கப்பட்டிருக்குமோ என்று தோன்றுகிறது.

பெரியவர் (எ) சேனாபதியாக பிரகாஷ்ராஜ்:
சோழப் பேரரசைத் தழைத்தோங்கச் செய்ததில் அழகியச் சோழன் (எ) சந்தரச் சோழருக்கு பெரும் பங்குண்டு. சுந்தரச் சோழனுக்கு இரண்டு மகன்கள், ஒரு  மகள்; ஆதித்யச் சோழன், ராஜ ராஜ சோழன், குந்தவை தேவி. சுந்தரச் சோழருக்கு பிறகு அரியணை ஏறுவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இளவசாரக முடிச் சூடப்பட்டார் ஆதித்யச் சோழன்.  இப்படத்திலும் ஒரு மாபெரும் சமூக ஆளுமையாக அறிமுகப்படுத்தப்படுகிறார்  சேனாபதியான பிரகாஷ்ராஜ். அவருக்கு வாரிசாக மூன்று மகன்கள்.  அவருக்குப்பின் பொறுப்புகளை யார் கவினிப்பார் என்ற கேள்வியே படத்தின் கதையாக இருக்கக்கூடும். 

வரதன் (எ) வரதராஜனாக அரவிந்த்சாமி:

தன்னுடைய தந்தையின் அரியணை வாரிசாக அறிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு அரச பொறுப்புகளை சிறப்பாக மேற்கொள்கிறார் ஆதித்யச் சோழன். வீரபாண்டியன் தலைமையிலான பாண்டியப் படைகளை மதுரைவரை துரத்திச் சென்று வீரபாண்டியனின் தலையைக் கொய்து வெற்றி வாகைச் சூடினார் ஆதித்யச் சோழன். தன தந்தைக்குப் பிறகு பொறுப்புகளை கவனிக்கும் மாவீரனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார். பல்வேறு கனவுகளுடன்  வளம் வந்த ஆதித்யச் சோழன், மன்னராக முடிச்சூடப்படும் சில நாட்களுக்கு முன் எதிர்பாராத விதமாக கொல்லப்படுகிறார் .  வீரபாண்டியன் கொலைக்கு பழிவாங்க கொல்லப்பட்டார் என்று சொல்லப்பட்டாலும், தமிழக வரலாற்றின்  இன்றுவரை அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சாகவே ஆதித்யச் சோழனின் மரணம் உள்ளது. இப்படத்தில் சேனாபதியின் வாரிசாக அடுத்த பொறுப்புகளை கவனிக்கும் இடத்தில் உள்ளார் அரவிந்தசாமி. சேனாபதிக்கு பிறகு தன் ஆட்சி தான் அடுத்து என்ற கனவில் வளம் வருகிறார்.

தியாகு (எ) தியாகராஜனாக அருண் விஜய்: 

ஆதித்யச் சோழனின் மறைவிற்குப் பின்னர் தன் அண்ணன் மகனான உத்தமச் சோழனுக்கு முடிச்சூட்டுகிறார் சுந்தரச் சோழர். மன்னராக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே பல்வேறு அரசு பொறுப்புகளை வகித்துள்ளார் உத்தமச் சோழன். தனாதிகாரியாகவும், சிறு நில மன்னனாகவும், சுந்தரச் சோழரின் வெளியுறவு விவகாரங்களை கவினிப்பவராகவும் இருந்துள்ளார். மேலும் சோழ நாட்டில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களுக்கு காரணியாகவும், ஆதித்யச் சோழனின் கொலையில் தொடர்புடையவராகவும் கருதப்படுகிறார். 12 ஆண்டுகள் சோழ தேசத்தை ஆட்சி செய்த உத்தமச் சோழன் மர்மனான முறையில் கொல்லப்படுகிறார்.   இப்படத்தில் இரண்டாம் வாரிசாக அருண் விஜய். அயல்நாட்டில் தன தந்தையின் தொழில்களை கவனித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தந்தையின் இடத்திற்கு வரத் துடிப்பவராகவும், குடும்பத்தில் குழப்பம் விளைவிப்பவராகவும்  காட்டப்படுகிறார். இவரை குடும்பத்ததுடன் கொலை செய்ய முயற்சி நடப்பதும் காட்டப்படுகிறது.

ஏத்தி (எ) எத்திராஜாக  சிலம்பரசன்:

உத்தமச் சோழனுக்கு பிறகு சோழப் பேரரசராகிறார் கடைக்குட்டியான மாவீரன் ராஜ ராஜ சோழன்  (எ) அருள்மொழிவர்மன். வரலாற்று ஆய்வாளர்கள் இவரைப் பற்றி குறிப்பிடுகையில் "self made, free styled personality" என்றே குறிப்பிடுகின்றனர். தன் சகோதரன் ஆதித்யச் சோழனின் மறைவிற்குப் பிறகு தனக்கு நாடாளும் ஆசை இருந்தாலும் தன்  சிற்றப்பாவான உத்தமச் சோழனிடம் அரியணையை விட்டுக்  கொடுத்தார். அதுமட்டுமின்றி அரியணை ஏறும்வரை பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பல அரச வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். சோழப் பேரரசின் பெருங்காவலனாகவும், சிறந்த ஒற்றர் படையையும் நிர்மாணித்து வந்துள்ளார். இப்படத்தில் குடும்பத்தின் கடைக்குட்டி சிலம்பரசன். வெளிநாட்டில் வசிப்பவராகவும், பின்னாளில் தன் குடும்பத்திற்கு நேரும் பல்வேறு ஆபத்துக்களில் இருந்து அவர்களை காப்பவராகவும், "வந்தா ராஜாவாகத் தான் வருவேன்" என்ற வசனத்தில்மூலம் தன தந்தையின் இடத்திற்கு ஆசைப்படுபவராகவும் காட்டப்படுகிறார். 

ரசூல் (எ)  ரசூல் இப்ராஹிமாக  விஜய் சேதுபதி:

வல்லவராயன் வந்தியத்தேவன். ராஜ ராஜ சோழனின் நம்பிக்கைக்குரிய மாபெரும் மாவீரன். ராஜ ராஜ சோழனின் முதல் வெற்றியான காந்தளூர் சாலை போர் தொடங்கி பல்வேறு நிலைகளில் அவருடன் நின்றுள்ளார் வந்தியத்தேவன். இவர்களின் நட்பின் உச்சமாக தன்னுடைய சகோதரி குந்தவை தேவியை வந்தியத்தேவனுக்கு மணம் முடிக்க சம்மதம் தெரிவித்தார் ராஜ ராஜ சோழன். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக, சேனாபதி குடும்பத்திற்கு நெருக்கமானவராக காட்டப்படுகிறார் விஜய் சேதுபதி. இராண்டாம் டிரைலரின் இறுதியில் சிலம்பரசனுடன் சேர்ந்து யாருடனோ சண்டியிடுவது போலவும், அவருடன் சேர்ந்து வெற்றிக்களிப்பில் நடந்து வருவது போலவும் காட்டப்படுகிறது. 

இப்பாத்திரங்களை நினைவில் வைத்தது தான் மணிரத்தினம் இப்படத்தை இயக்கினாரா இல்லலையா என்பதைப் பற்றி திரைப்படம் வெளியான பின்பு தான் முடிவுக்கு வர இயலும். அப்படி இருப்பின் இன்னும் பல சுவாரிஸ்யமான பாத்திரங்களையும் மணிரத்தினம் உள்ள புகுத்தி இருக்கக்கூடும்.  ஏதோ என் சிறுமூளைக்கு எட்டியவற்றை எழுதியுள்ளேன். செக்கச் சிவந்த வானம் படம் பார்த்த பின்பு நான் எழுதியதில் அர்த்தம் இருப்பதாக நீங்கள் கருதினால் என்னையும் ஒரு அறிவாளியாக ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில் ஏதோ மூடன் உளறிவிட்டான் என்று உங்கள் வீட்டுப் பிள்ளையாக கருதி மன்னித்துவிடுங்கள். 

6 comments: