Saturday, September 16, 2017

பார்ப்பனீய எதிர்ப்பு - திராவிட நாடு - மாநில சுயாட்சி - அண்ணா


பார்ப்பனீயத்திற்கு  எதிரான முழக்கம் பெரியார் காலத்தில் அல்ல அதற்கு பல ஆண்டுகள் முன்னதாகவே எழத் தொடங்கிவிட்டது. 1850 பிரிட்டிஷ் இந்தியாவில் மெட்ராஸ் மாகாணத்தில் பார்ப்பனீயர்களின் ஆண்கள் மக்கள் தொகை 3.2% தான். பார்ப்பனரல்லாத பிறர், இஸ்லாமியர், கிருத்துவர் உட்பட ஆண்களின் மக்கள் தொகை 95%. ஆனால் அரச பதவிகளில், அரசு அலுவலகங்களில் பார்ப்பனர்களின் ஆதிக்கமே ஓங்கி இருந்தது. இணை ஆட்சியர்களாக, நீதிபதிகளாக அவர்களின் கரங்களே ஓங்கி இருந்தன. மற்றவர்களுக்கு வாய்ப்புகள் தரப்பட்டாலும், முன்னுரிமை அவர்களுக்கே என்று பிரித்தாளும் கலையின் வல்லுனர்களான வெள்ளையர்கள் எழுதப்படாத சட்டமாக வைத்திருந்தனர். அரசியல், சமுகம், பொருளாதாரம் என அனைத்திலும் பார்ப்பனவர்களுக்கும், மற்றவர்களுக்கும் வித்தியாசங்கலும், உரிமை பங்கீடுகளும் வெவ்வேறாகவே இருந்தது. அக்காலத்தில் மெட்ராஸ் மாகாண பிராமணர்கள் தங்களை மைலாப்பூர்(சேத்துப்பட்டு ஐயர்கள் மற்றும் வெம்பாக்கம் இயங்கார்களை  உள்ளடக்கியது),  எழும்பூர், ராஜாஜீ தலைமையிலான சேலம் ஐயங்கார்கள்  என மூன்று பிரிவுகளாக செயல்பட்டு வந்தனர். பிரமானவர்களின் பிரதிநிதிகளாக இந்த குழுக்களின் தலைவர்கள் செயல்பட்டனர்.  இவர்களின் அட்டகாசங்களை எதிர்த்து குரல்கள் வலுப்பெற தொடங்கின. பார்ப்பனரல்லாத மக்களின், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நிறுவப்பட்டது. இந்த இயக்கமே அரசியல் அங்கீகாரைத்திற்காக நீதிக்கட்சியாக உருப்பெற்றது.  

பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக நீதிக்கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பார்ப்பனரல்லாதாரின் உரிமை சாசனத்தை 1916-ல் கையெழுத்திட்டார் சர் தியாகராயர்.  அதன்பின் 1920 மாகாணத் தேர்தலை காங்கிரஸ் புறக்கணிக்க நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 1920 முதல் 1937 வரை 13 ஆண்டுகள் ஆளும் கட்சியாகவும், 4 ஆண்டுகள் எதிர் கட்சியாகவும் இருந்தது. 1937-ல் அன்றைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியாரின் சுய மரியாதை இயக்கத்துடன் கைக்கு கோர்த்தது  நீதிக்கட்சி.  1938 முதல் 1944 வரை பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக இருந்தார். 1944-ல் நீதிக்கட்சி, சுய மரியாதை இயக்கம் இருண்டயும் இணைத்து திராவிடர் கழகத்தை நிறுவினார் பெரியார். திராவிட கழகம் ஓட்டு அரசியலில் ஈடுபடாதென்றும், சமூக நீதிகளை மீட்டெடுக்கும் இயக்கமாகவே திகழும் என்று அறிவித்தார் பெரியார். பெரியாரின் மிகப்பெரிய பக்கபலமாக கருதப்பட்ட அண்ணாதுரை, திராவிட கழகம் தேர்தல்களில் பங்கெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.  இதுபோன்று மேலும் ஒரு சில கொள்கை முரண்பாடுகளால் இருவருக்கும் இடையேயான உறவில் விரிசல் விழத் தொடங்கியது. 1947-ல் இந்தியா சுதந்திர நாளை கருப்பு தினமாக பெரியார் அனுசரிக்கச் சொன்னதும், அவரைவிட 40 வயது இளையவரான மணியம்மயை திருமணம் செய்ததும் அண்ணாவின் வெளிநாடாப்புக்கு காரணமாகியது.  பெரியாரின் செயகளால் அதிருப்தியடைந்த பல்வேறு தலைவர்கள் அண்ணாவுடன் கைக்கோர்த்தனர். 1949 செப்டம்பர் 17-ல் திராவிட முன்னேற்றக கழகம் உதயமானது. 

திராவிட நாடு : 
பூர்வகுடிகளான திராவிடர்களுக்கு திராவிட நாடு அவசியம் என்பதை ஆரம்பம் முதலே பெரியார் வலியுறுத்தி வந்தார். இந்த கோரிக்கையை ஆங்கிலேய ஆட்சியர்களின் கவனத்திற்கும் கொண்டு சேர்த்திருந்தார் பெரியார். "இந்தியாவிலிருந்து யாரேனும் பிரிந்து செல்ல விரும்பினால் 'வேண்டாம்' என்று அவர்களை காங்கிரஸ் அவர்களை வேண்டிக்கொள்ளும். அதையும் மீறி பிரிந்து செல்ல விரும்பினால் அதை கண்ணியத்துடன் அனுமதிக்கும்," என்று நேரு 2.8.1945-ல் ஸ்ரீநகரில் பேசி இருந்தார். பெரியாரின் தம்பியான அண்ணாவும் திராவிட நாடு கொள்கையை இருகப்பற்றிக் கொண்டார். முதலில் தமிழ் பேசும் மக்களை உள்ளடக்கியாத கருதப்பட்ட திராவிட நாடு பின்னர் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக உருப்பெற்றது. ச ஆனால் 1956 மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்படி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. திராவிட நாடு கோரிக்கைக்கு இது இது பெரும் பின்னடைவுவாக கருதப்பட்டது. திராவிட நாடு கோரிக்கைகள் வலுப்பெற்று விடக்கூடாது என்பதற்காக மத்திய காங்கிரஸ் அரசு 'பிரிவினை தடைச்ச சட்டம் 1963' கொண்டு வந்தது.  


"திராவிட பெருங்குடி மக்களின் உரிமைகள் அழிக்கப்படுகின்றன; வளங்கள் சுரண்டப்படுகின்றன; தனித்தன்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன; வாழ்வு அடிமைப்படுத்தப்படுகின்றது. இந்தக் காரணங்களிலிருந்து மெல்லத்தான், நாந்திகள் தனி நாடு கேட்கின்றோம். வேறு வழி எதுவம் இல்லாததால்தான், தனி நாடு வேண்டும் என்கின்றோம். நாங்கள் ஏற்றுக்கொள்ளுகிற அளவிற்கு வேறு வழி காட்டுங்கள். அதைப் பற்றி சிந்திக்கின்றோம்", என்று பிரிவினைவாத தடைச் சட்டம் (1963) மீதான விவாதத்தின் போது  அண்ணா பேசினார். பிரிவினைவாத தடைச் சட்டம்படி இந்தியில் இருந்து பிரிவினை கேட்கும் கேட்கும் இயக்கம்/கட்சி தடை செய்யப்படும் என்றும், பிரிவினை பேசும் தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்றும்  கூறியது.  இதனைத் தொடர்ந்து அண்ணா திராவிட நாடு கொள்கையை கைவிட்டார். 

மாநில சுயாட்சி : 
இந்திய இறையாண்மைக்கு எதிரானதாக அறிவிக்கப்பட்டதிற்கு மாற்றாக மாநில சுயாட்சி கோரிக்கை முன் வைக்கப்பட்டது. தனி நாடு என்பதற்கும் மாநில சுயாட்சி என்பதற்கும் எட்டாத தூரம் தான் என்றாலும் சுயாட்சி மூலம் ஒரு சில உரிமைகளையாவது காத்துக்கொள்ள முடியும் என்று நம்பினார் அண்ணா. அதற்கு முதல் படியாக  ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக வேண்டும் என்று தீர்மானித்தார். மாநிலத்தின் நலன் சார்ந்து முடிவெடுக்கவும் உரிமைகள் மாநில கட்சியிடமே  இருக்க வேண்டும். அதுவரை தமிழகத்தை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியை வீட்டிற்கு அனுப்பின்னால் மட்டுமே இது சாத்தியமாகும். பக்கத்தில் இருக்கும் குடிசை வீட்டில் தீப்பிடித்து விட்டால் அருகில் இருக்கும் நாம்தான் அதில் தலையிட முடியும். பக்கத்துக்கு ஊருக்கு சென்று ஆட்களை கூட்டி வந்து தீர்க்க சொல்வது உசிதம் அல்ல. இதேபோல தான்  மாநில மக்களின் சுக துக்கங்களோடு பின்னிபிணைத்திருப்பது மாநில அரசுகளே தவிர, மத்திய அரசு அல்ல.

பொது வாழ்வில் மக்களோடு மக்களாக, மக்களில் ஒருவராக மாநில அரசுதான் இருக்க முடியும். இதை கருத்தில் கொண்டே தி.மு.க வை வலுப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என அண்ணா முயற்சித்தார். 1965-ல் நடைப்பெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தி.மு.க மாபெரும் பங்காற்றியது; மக்களின் செல்வாக்கையும் பெற்றது. அதன் காரணமாக 1967 சட்டசபை தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பெற்றது தி.மு.க. அண்ணா முதல்வர் ஆனார்.  அண்ணா அவர்களின் தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாகவே வரலாறு சொல்கிறது. சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார் அண்ணா. அண்ணாவின் ஆட்சிக்கு காலத்தில் தான் மெட்ராஸ் மாகாணம் "தமிழ் நாடு" என்ற பெயர் மாற்றம் பெற்றது. ஒரு மாநில கட்சியாக மத்திய அரசின் மக்கள் நல நடவடிக்கைகளை ஆதரித்தும், மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும் குரல் எழுப்பி அரசியல் செய்தது தி.மு.க. 

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சியை ஆட்சியில் கொண்ட  ஒரு  சில மாநிலங்களின் நிலை பரிதாபம் தான்.  ஒரு தேசியக் கட்சியின் மாநில முதல்வர், மத்திய அரசு என்ன சட்டங்கள் கொண்டு வந்தாலும், அது மாநில மக்களின் நன்மையை பாதிக்கும் என்றாலும், மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் என்றாலும் வேறு வழி இன்றி அதை நிறைவேற்றியாக வேண்டும். மக்களுக்கு ஆதரவாக மத்திய அரசை, தன் சொந்தக் கட்சியை எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியம் எவர்க்கும் வந்துவிட போவதில்லை. மணிப்பூர், மேகாலயா, கோவா போன்ற மாநிலக் காட்சிகள் வலுப்பெறாத மாநிலங்களே  இதற்க்கு சான்று.


அக்காலத்தில் மாபெரும்  தேசியக் கட்சியை ஆட்சியிலிருந்து இறக்கி இன்றுவரை தமிழகத்தில் ஆட்சி அமைப்பதை அவர்களுக்கு ஒரு எட்டாக கனியாக  வைத்திருப்பதே திராவிட கட்சிகளின் பெரும் வெற்றி.  அதிகாரங்கள் அணைத்ததும் மத்திய அரசிடமே குவித்தட்டுக் கொண்டால் மாநில அரசுகள் எதற்கு. இந்தியாவைப் போன்ற பல்வேறு கலாச்சாரம், மொழி, பொருளாதாரத்தில் பல்வேறுபட்ட மக்களை கொண்டுள்ள நாட்டில் கல்வி, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம், சமூக நலன், உணவு, தொழில் வளம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மத்திய அரசுகள் தலையிடாமல் இருந்தாலே மாநில அரசுகள் சிறப்பாக செயலாற்ற முடியும். மாநில அரசுகளுக்கே பிரச்சனைகளின் உள்ளீடுகள் தெரியும். அவர்களால் மட்டுமே அதற்கான தேர்வை யோசிக்க முடியும் என நம்பியவர் அண்ணா.

ஆனால் அண்ணாவால் நிறுவப்பட்ட கட்சியும் சரி, அண்ணாவின் பெயரால் நிறுவப்பட்ட்ட கட்சியும் சரி ஒரு கட்டத்திற்குமேல் தன்மானத்தை  இழந்து  மத்திய அரசுகளிடம் சரணடைந்தே கிடந்திருக்கின்றன.  ஹிந்தி திணிப்பு, நீட், மத்திய உணவு பாதுகாப்பு மசோதா, நவோதயாத் பள்ளிகள், மீத்தேன், ஹைட்ராகார்பன்  என எல்லாவற்றிற்கும் வாசளைத் திறந்து வைத்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கினர். இறந்தவர்களின் ஆன்மாவின் விருப்பப்படி ஆட்சி நடந்துவதாக சொல்லி மாநில மக்களை அடகு வைக்கும் இவர்களின் துரோகச் செயல்களை     அண்ணாவின் ஆன்மாக்கூட மன்னிக்காது. 




No comments:

Post a Comment