Monday, February 28, 2022

சுந்தர சோழரின் மாடம்பாக்கம் கோயில்

சிற்றேரி ஆளுடைய நாயனார் என்கிற தேனுபுரீஸ்வரர் கோயில். சென்னையின் புறநகர்ப் பகுதியான தாம்பரம் - சேலையூர்க்கு மிக அருகில் மாடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. உலகுய்ய வந்த சதுர்வேதிமங்கலம் என்றும் பெயர். "பொன் மாளிகை துஞ்சின தேவர்" ஸ்ரீ ஸ்ரீ சுந்தர சோழ சக்ரவர்த்தி அவர்களின் உத்தரவால் அவரின் முதன்மை அமைச்சர் அணிருத்த பிரம்மராஜன் என்கிற அனிருத்த பிரம்மராயனால் எழுப்பபட்ட தலம். கபில மகரிஷி மோக்ஷம் பெற்ற தலம் என்று கூறப்படுகின்றது. நம்மில் பலருக்கு சுந்தர சோழர் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லை. அரிதுர்க்கலங்கன், அபயகுலசேகரன் மகா கனம் பொருந்திய ஸ்ரீ ஸ்ரீ ராஜராஜ சோழ சாக்ரவர்த்தியின் தந்தை தான் சுந்தர சோழர். இரண்டாம் பராந்தகன் என்றும் போற்றப்பட்டார். 


சோழப் பேரரசின் முன்னோடிகளில் ஒருவரான சுந்தர சோழரால் எழுப்பப்பட்ட 31 கோயில்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். முதலாம் குலோத்துங்க சோழன்(தமிழகத்தில் தெலுங்கு சோழர்களின் குலத்தை தோற்றுவித்தவர்) காலத்தில் இந்த கோயில் கற்றலியாக மாற்றப்பட்டுள்ளது. கோயிலின் அய்யன் சுயம்பு. சோழ சாம்ராஜ்யத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவர்களின் உள்ளாட்சி முறை. அப்படியாக பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பகுதிகளில் இந்த மாடம்பாக்கம் கிராமம், "நெடுங்குன்ற நாடு" என்ற பகுதிக்குள் அடங்கும். நெடுங்குன்றம் என்பது தற்போதைய வண்டலூர் விலங்கியல் பூங்காவிற்கு பின்பக்கம் இருக்கும் ஒரு சிற்றூர். நெடுங்குன்ற நாடு புலியூர்க் கோட்டத்தின் கீழ் இருந்த 8 நாடுகளில் ஒன்று. சுந்தர சோழர் தன் இறுதி நாட்களை காஞ்சிபுரத்தில் தன் மகன் ஆதித்த கரிகாலன்(இராஜராஜ சோழனின் அண்ணண்) எழுப்பிய பொன் மாளிகையில் கழித்தார். அப்போது இந்த கோயிலைக் நிர்மாணிக்க உத்தேசித்திருக்க கூடும். பின்னால் வந்த விஜயநகர பேரரசர்களின் பங்கும் கோயிலின் புனர்நிர்மாணத்தில் அறியப்படுகிறது. கோயில் கருவறை கஜபிருஷ்ட்ட(தூங்கானை மாடம்) வடிவத்தில் உள்ளது. கோயிலில் உள்ள முருகப் பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார். 


சென்னை மாநகரின் பரபரப்புக்கு சற்றும் குறைவில்லாத இந்த புறநகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கம்பீரமாய் நிற்கிறது நம் இன மூத்தோனின் இந்த வரலாற்று பொக்கிஷம். சென்னையில் இருக்கும் நண்பர்கள் ஒருமுறை அய்யனை தரிசிப்பது நல்லது. 


*வாச கம்பிற வாதோர் ஞானசு

  கோத யம்புகல் வாசா தேசிக

 மாடை யம்பதி வாழ்வே தேவர்கள்...பெருமாளே.*

- அருணகிரிநாதர்.

தேடல் தொடரும்.

Source : Unanimous

3 comments:

Chat Box