Saturday, September 16, 2017

பார்ப்பனீய எதிர்ப்பு - திராவிட நாடு - மாநில சுயாட்சி - அண்ணா


பார்ப்பனீயத்திற்கு  எதிரான முழக்கம் பெரியார் காலத்தில் அல்ல அதற்கு பல ஆண்டுகள் முன்னதாகவே எழத் தொடங்கிவிட்டது. 1850 பிரிட்டிஷ் இந்தியாவில் மெட்ராஸ் மாகாணத்தில் பார்ப்பனீயர்களின் ஆண்கள் மக்கள் தொகை 3.2% தான். பார்ப்பனரல்லாத பிறர், இஸ்லாமியர், கிருத்துவர் உட்பட ஆண்களின் மக்கள் தொகை 95%. ஆனால் அரச பதவிகளில், அரசு அலுவலகங்களில் பார்ப்பனர்களின் ஆதிக்கமே ஓங்கி இருந்தது. இணை ஆட்சியர்களாக, நீதிபதிகளாக அவர்களின் கரங்களே ஓங்கி இருந்தன. மற்றவர்களுக்கு வாய்ப்புகள் தரப்பட்டாலும், முன்னுரிமை அவர்களுக்கே என்று பிரித்தாளும் கலையின் வல்லுனர்களான வெள்ளையர்கள் எழுதப்படாத சட்டமாக வைத்திருந்தனர். அரசியல், சமுகம், பொருளாதாரம் என அனைத்திலும் பார்ப்பனவர்களுக்கும், மற்றவர்களுக்கும் வித்தியாசங்கலும், உரிமை பங்கீடுகளும் வெவ்வேறாகவே இருந்தது. அக்காலத்தில் மெட்ராஸ் மாகாண பிராமணர்கள் தங்களை மைலாப்பூர்(சேத்துப்பட்டு ஐயர்கள் மற்றும் வெம்பாக்கம் இயங்கார்களை  உள்ளடக்கியது),  எழும்பூர், ராஜாஜீ தலைமையிலான சேலம் ஐயங்கார்கள்  என மூன்று பிரிவுகளாக செயல்பட்டு வந்தனர். பிரமானவர்களின் பிரதிநிதிகளாக இந்த குழுக்களின் தலைவர்கள் செயல்பட்டனர்.  இவர்களின் அட்டகாசங்களை எதிர்த்து குரல்கள் வலுப்பெற தொடங்கின. பார்ப்பனரல்லாத மக்களின், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நிறுவப்பட்டது. இந்த இயக்கமே அரசியல் அங்கீகாரைத்திற்காக நீதிக்கட்சியாக உருப்பெற்றது.  

பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக நீதிக்கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பார்ப்பனரல்லாதாரின் உரிமை சாசனத்தை 1916-ல் கையெழுத்திட்டார் சர் தியாகராயர்.  அதன்பின் 1920 மாகாணத் தேர்தலை காங்கிரஸ் புறக்கணிக்க நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 1920 முதல் 1937 வரை 13 ஆண்டுகள் ஆளும் கட்சியாகவும், 4 ஆண்டுகள் எதிர் கட்சியாகவும் இருந்தது. 1937-ல் அன்றைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியாரின் சுய மரியாதை இயக்கத்துடன் கைக்கு கோர்த்தது  நீதிக்கட்சி.  1938 முதல் 1944 வரை பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக இருந்தார். 1944-ல் நீதிக்கட்சி, சுய மரியாதை இயக்கம் இருண்டயும் இணைத்து திராவிடர் கழகத்தை நிறுவினார் பெரியார். திராவிட கழகம் ஓட்டு அரசியலில் ஈடுபடாதென்றும், சமூக நீதிகளை மீட்டெடுக்கும் இயக்கமாகவே திகழும் என்று அறிவித்தார் பெரியார். பெரியாரின் மிகப்பெரிய பக்கபலமாக கருதப்பட்ட அண்ணாதுரை, திராவிட கழகம் தேர்தல்களில் பங்கெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.  இதுபோன்று மேலும் ஒரு சில கொள்கை முரண்பாடுகளால் இருவருக்கும் இடையேயான உறவில் விரிசல் விழத் தொடங்கியது. 1947-ல் இந்தியா சுதந்திர நாளை கருப்பு தினமாக பெரியார் அனுசரிக்கச் சொன்னதும், அவரைவிட 40 வயது இளையவரான மணியம்மயை திருமணம் செய்ததும் அண்ணாவின் வெளிநாடாப்புக்கு காரணமாகியது.  பெரியாரின் செயகளால் அதிருப்தியடைந்த பல்வேறு தலைவர்கள் அண்ணாவுடன் கைக்கோர்த்தனர். 1949 செப்டம்பர் 17-ல் திராவிட முன்னேற்றக கழகம் உதயமானது. 

திராவிட நாடு : 
பூர்வகுடிகளான திராவிடர்களுக்கு திராவிட நாடு அவசியம் என்பதை ஆரம்பம் முதலே பெரியார் வலியுறுத்தி வந்தார். இந்த கோரிக்கையை ஆங்கிலேய ஆட்சியர்களின் கவனத்திற்கும் கொண்டு சேர்த்திருந்தார் பெரியார். "இந்தியாவிலிருந்து யாரேனும் பிரிந்து செல்ல விரும்பினால் 'வேண்டாம்' என்று அவர்களை காங்கிரஸ் அவர்களை வேண்டிக்கொள்ளும். அதையும் மீறி பிரிந்து செல்ல விரும்பினால் அதை கண்ணியத்துடன் அனுமதிக்கும்," என்று நேரு 2.8.1945-ல் ஸ்ரீநகரில் பேசி இருந்தார். பெரியாரின் தம்பியான அண்ணாவும் திராவிட நாடு கொள்கையை இருகப்பற்றிக் கொண்டார். முதலில் தமிழ் பேசும் மக்களை உள்ளடக்கியாத கருதப்பட்ட திராவிட நாடு பின்னர் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக உருப்பெற்றது. ச ஆனால் 1956 மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்படி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. திராவிட நாடு கோரிக்கைக்கு இது இது பெரும் பின்னடைவுவாக கருதப்பட்டது. திராவிட நாடு கோரிக்கைகள் வலுப்பெற்று விடக்கூடாது என்பதற்காக மத்திய காங்கிரஸ் அரசு 'பிரிவினை தடைச்ச சட்டம் 1963' கொண்டு வந்தது.  


"திராவிட பெருங்குடி மக்களின் உரிமைகள் அழிக்கப்படுகின்றன; வளங்கள் சுரண்டப்படுகின்றன; தனித்தன்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன; வாழ்வு அடிமைப்படுத்தப்படுகின்றது. இந்தக் காரணங்களிலிருந்து மெல்லத்தான், நாந்திகள் தனி நாடு கேட்கின்றோம். வேறு வழி எதுவம் இல்லாததால்தான், தனி நாடு வேண்டும் என்கின்றோம். நாங்கள் ஏற்றுக்கொள்ளுகிற அளவிற்கு வேறு வழி காட்டுங்கள். அதைப் பற்றி சிந்திக்கின்றோம்", என்று பிரிவினைவாத தடைச் சட்டம் (1963) மீதான விவாதத்தின் போது  அண்ணா பேசினார். பிரிவினைவாத தடைச் சட்டம்படி இந்தியில் இருந்து பிரிவினை கேட்கும் கேட்கும் இயக்கம்/கட்சி தடை செய்யப்படும் என்றும், பிரிவினை பேசும் தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்றும்  கூறியது.  இதனைத் தொடர்ந்து அண்ணா திராவிட நாடு கொள்கையை கைவிட்டார். 

மாநில சுயாட்சி : 
இந்திய இறையாண்மைக்கு எதிரானதாக அறிவிக்கப்பட்டதிற்கு மாற்றாக மாநில சுயாட்சி கோரிக்கை முன் வைக்கப்பட்டது. தனி நாடு என்பதற்கும் மாநில சுயாட்சி என்பதற்கும் எட்டாத தூரம் தான் என்றாலும் சுயாட்சி மூலம் ஒரு சில உரிமைகளையாவது காத்துக்கொள்ள முடியும் என்று நம்பினார் அண்ணா. அதற்கு முதல் படியாக  ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக வேண்டும் என்று தீர்மானித்தார். மாநிலத்தின் நலன் சார்ந்து முடிவெடுக்கவும் உரிமைகள் மாநில கட்சியிடமே  இருக்க வேண்டும். அதுவரை தமிழகத்தை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியை வீட்டிற்கு அனுப்பின்னால் மட்டுமே இது சாத்தியமாகும். பக்கத்தில் இருக்கும் குடிசை வீட்டில் தீப்பிடித்து விட்டால் அருகில் இருக்கும் நாம்தான் அதில் தலையிட முடியும். பக்கத்துக்கு ஊருக்கு சென்று ஆட்களை கூட்டி வந்து தீர்க்க சொல்வது உசிதம் அல்ல. இதேபோல தான்  மாநில மக்களின் சுக துக்கங்களோடு பின்னிபிணைத்திருப்பது மாநில அரசுகளே தவிர, மத்திய அரசு அல்ல.

பொது வாழ்வில் மக்களோடு மக்களாக, மக்களில் ஒருவராக மாநில அரசுதான் இருக்க முடியும். இதை கருத்தில் கொண்டே தி.மு.க வை வலுப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என அண்ணா முயற்சித்தார். 1965-ல் நடைப்பெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தி.மு.க மாபெரும் பங்காற்றியது; மக்களின் செல்வாக்கையும் பெற்றது. அதன் காரணமாக 1967 சட்டசபை தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பெற்றது தி.மு.க. அண்ணா முதல்வர் ஆனார்.  அண்ணா அவர்களின் தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாகவே வரலாறு சொல்கிறது. சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார் அண்ணா. அண்ணாவின் ஆட்சிக்கு காலத்தில் தான் மெட்ராஸ் மாகாணம் "தமிழ் நாடு" என்ற பெயர் மாற்றம் பெற்றது. ஒரு மாநில கட்சியாக மத்திய அரசின் மக்கள் நல நடவடிக்கைகளை ஆதரித்தும், மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும் குரல் எழுப்பி அரசியல் செய்தது தி.மு.க. 

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சியை ஆட்சியில் கொண்ட  ஒரு  சில மாநிலங்களின் நிலை பரிதாபம் தான்.  ஒரு தேசியக் கட்சியின் மாநில முதல்வர், மத்திய அரசு என்ன சட்டங்கள் கொண்டு வந்தாலும், அது மாநில மக்களின் நன்மையை பாதிக்கும் என்றாலும், மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் என்றாலும் வேறு வழி இன்றி அதை நிறைவேற்றியாக வேண்டும். மக்களுக்கு ஆதரவாக மத்திய அரசை, தன் சொந்தக் கட்சியை எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியம் எவர்க்கும் வந்துவிட போவதில்லை. மணிப்பூர், மேகாலயா, கோவா போன்ற மாநிலக் காட்சிகள் வலுப்பெறாத மாநிலங்களே  இதற்க்கு சான்று.


அக்காலத்தில் மாபெரும்  தேசியக் கட்சியை ஆட்சியிலிருந்து இறக்கி இன்றுவரை தமிழகத்தில் ஆட்சி அமைப்பதை அவர்களுக்கு ஒரு எட்டாக கனியாக  வைத்திருப்பதே திராவிட கட்சிகளின் பெரும் வெற்றி.  அதிகாரங்கள் அணைத்ததும் மத்திய அரசிடமே குவித்தட்டுக் கொண்டால் மாநில அரசுகள் எதற்கு. இந்தியாவைப் போன்ற பல்வேறு கலாச்சாரம், மொழி, பொருளாதாரத்தில் பல்வேறுபட்ட மக்களை கொண்டுள்ள நாட்டில் கல்வி, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம், சமூக நலன், உணவு, தொழில் வளம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மத்திய அரசுகள் தலையிடாமல் இருந்தாலே மாநில அரசுகள் சிறப்பாக செயலாற்ற முடியும். மாநில அரசுகளுக்கே பிரச்சனைகளின் உள்ளீடுகள் தெரியும். அவர்களால் மட்டுமே அதற்கான தேர்வை யோசிக்க முடியும் என நம்பியவர் அண்ணா.

ஆனால் அண்ணாவால் நிறுவப்பட்ட கட்சியும் சரி, அண்ணாவின் பெயரால் நிறுவப்பட்ட்ட கட்சியும் சரி ஒரு கட்டத்திற்குமேல் தன்மானத்தை  இழந்து  மத்திய அரசுகளிடம் சரணடைந்தே கிடந்திருக்கின்றன.  ஹிந்தி திணிப்பு, நீட், மத்திய உணவு பாதுகாப்பு மசோதா, நவோதயாத் பள்ளிகள், மீத்தேன், ஹைட்ராகார்பன்  என எல்லாவற்றிற்கும் வாசளைத் திறந்து வைத்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கினர். இறந்தவர்களின் ஆன்மாவின் விருப்பப்படி ஆட்சி நடந்துவதாக சொல்லி மாநில மக்களை அடகு வைக்கும் இவர்களின் துரோகச் செயல்களை     அண்ணாவின் ஆன்மாக்கூட மன்னிக்காது. 




Wednesday, August 16, 2017

உனக்குள் தொலைந்து போன வேதா ...



விமர்சனம்: 

              விக்ரம் - வேதா. சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம்.  நல்ல படம். அற்புதமான கதை அமைப்பு. 
புஷ்கர்-காயத்ரியின் இயக்கம் செம.  ஷாமின்  இசையில் பாடங்கள், பின்னணி இசை கோர்ப்பு பிரமாதம். விக்ரமாக மாதவன்; ஒரு நல்ல comeback. வேதவாக விஜய் சேதுபதி; வழக்கம் போல் அலட்டிக்கொள்ளாமல் நடித்து இருக்கிறார். வசனங்கள் சூப்பர். ஒரு சில இடங்களில் வசனங்கள் தெறி ரகம். இது தான் படத்தின் சுருக்கிய வடிவிலான விமர்சனம். 

நம்ம கதை: 
                 நாம் சிறு வயதில் இருக்கும் போது பல்வேறு திரைப்படங்கள் பார்த்தோ  அல்லது நமது தந்தை, அவர்களின் நண்பர்கள் என்று யாரையாவது பார்த்தோ இவரைப்போல் நாம் ஆக வேண்டும் என்று ஒரு சிறு எண்ணம் எழுந்து இருக்கும். அந்த எண்ணம் தான் வாழ்வின் குறிக்கோள் என்று நாம் அப்போது முடிவு செய்து இருக்கமாட்டோம். அதுபோல் ஆக வேண்டும் என்று ஆசையாக இருந்து இருக்கும்; அவ்வளவுதான். வயதாக வயதாக ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும் போதும்  நாம் இதுவாகவும் ஆகலாம் என்று நமது எண்ணத்தில் மாற்றங்கள் நிகழும். ஆனால் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்குள் நாம் செல்லும் அந்தத் தருணம் தான் நமது வாழ்வின் முக்கிய முடிவினை எடுக்கும் தருணமாக இருக்கின்றது. அப்போது தான் எதிர்காலத்தைப்பற்றிய  ஒரு தெளிவு பிறக்கும். எதிகாலத்தில் நாம் என்ன செய்ய போகிறோமோ அதைச் சார்ந்து கல்லூரியில் ஏதேனும் பிரிவு எடுத்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். 

    ஒரு சிலர் பள்ளியில் இருக்கும்போதே தங்களின் எதிர்கால குறிக்கோள்களை நிர்ணயித்து கொள்ளும் அளவிற்கு தெளிவாக உள்ளனர். ஒரு சிலர் மருத்துவர் ஆக வேண்டும் என்றும், ஒரு சிலர் வழக்கறிஞராக வேண்டும் என்றும், ஒரு சிலர் I.A.S, I.P.S -க்கு செல்ல வேண்டும் என்றும், ஒரு சிலர் கட்டுமானப்  பொறியாளராக வேண்டும் என்றும் குறிக்கோள்களை நிர்ணயம் செய்துகொள்கின்றனர். இவர்கள் முதல் ரகம். இப்படி எந்த எண்ணமும் இல்லாமல் இருப்பவர்கள், ஏதேனும் ஒரு degree -யை வாங்கிவிட்டு கிடைக்கும் வேலைக்கு செல்லலாம் என்று இருப்பார்கள். இவர்கள் இரண்டாம் ரகம். 

                 இந்த இரண்டாம் ரகத்தினருக்கு எந்தக் கவலையும் இல்லை. இவர்கள் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில்தான் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க தொடங்குவார்கள். ஆனால் இந்த முதல் ரகத்தினர் இருக்கிறார்களே அவர்களுக்கு ஆரம்பமே சிக்கலாக இருக்கலாம். அவர்கள் தங்கள் குறிக்கோளை கனவு காண தொடங்கியிருப்பார்கள். அந்த கனவை எண்ணங்களாய் தங்களுள் விதைக்கத்  தொடங்கியிருப்பார்கள். அந்த விதை விருக்ஷமாக வளர்ந்து கணிகளைத் தரும் என்று நம்பிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களின் இந்த எண்ண ஓட்டத்துக்கு பெற்றோர்கள் ஒத்து வரவேண்டுமல்லவா. இங்குதான் முதல் சிக்கல் தொடக்கம். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கென்று ஒரு கனவு வைத்திருப்பார்கள், அதன்படி திட்டங்களை வகுத்திருப்பார்கள். பெற்றோர்களின் கனவுகளுக்கும் பிள்ளைகளின் கனவுகளுக்கும் நிகழும் அந்த மனப்போராட்டமே அந்த பிள்ளைகளின் எதிர் காலத்தை தீர்மானிக்கிறது. பெற்றோர்களின் சம்மதத்தோடு பலர் தங்களின் கனவுகளை நோக்கி நடைபோட தொடங்கிவிடுகின்றனர். பலர் தங்களின் பெற்றோர்களின் வற்புறுத்தல்களுக்கு இணங்கி கனவுகளை சிதைத்து, அவர்களின் ஆசையா நிறைவேற்ற  கல்லூரி படிப்பை தொடங்க செல்கின்றனர்.   
                  நான் மேலே சொன்ன இரண்டு ரக இளைஞர்களுக்கு எதிர்மறையான இன்னொரு ரகம் உண்டு.    எதற்காகவும், யாருக்காகவும் தங்களின் கனவுகளையும், குறிக்கோளையும் விட்டுக்கொடுக்காதவர்கள். பெற்றோர்களிடம் சண்டையிட்டு தங்களுக்கு தேவையானதை செய்து கொள்ள முற்ப்படுபவர்கள். ஒரு விஷயத்தில் வெற்றி பெற்றாலும், ஏதேனும் ரூபத்தில் சவால்களை சந்திக்க விருப்பமுள்ளவர்கள். இவர்கள் வாழ்க்கையில் எடுக்கும் முக்கிய முடிவுகள் விமர்சனத்திருக்குள்ளாகும்; ஏளனம் செய்யப்படும். இவர்கள் எந்த ஒரு முடிவையும் தீர்க்கமாக சிந்தித்து, பல கோணங்களில் யோசித்து, தொலைநோக்கு பார்வையுடன் எடுப்பவர்கள். தங்களின் கனவுகை அடைய எத்தனைக் கஷ்டங்களையும் தாங்கிக்கொள்ள தயாராக உள்ளவர்கள்.  குடும்பம், பெற்றோர்கள், மனைவி, காதலி, நண்பர்கள் என யாருக்காகவும் தங்களை மாற்றிக்கொள்ளாமல், தங்களின் உண்மை இயல்புடன் இருப்பவர்கள். விக்ரம் - வேதா திரைப்படத்த்தில் விஜய் சேதுபதி ஏற்றிருக்கும் கதாப்பாத்திரமும் அப்படிதான். இந்த  படத்தில் வில்லன் என்றோ ஹீரோ என்றோ சொல்லிவிட முடியாத அளவுக்கு ஒரு கதாப்பாத்திரம் வேதா. வேதாவின் லட்சியம் என்று பெரிதாக ஒன்றும் இல்லை. அந்த பகுதியில் அவன் ஒரு பிரபலமாக, சொல்லப்போனால் ஒரு Godfather-ஆக இருக்க வேண்டும். அதற்கான வழிகளை ஏற்படுத்தி, யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமல் அதில் பயணம் செய்பவன். தன்னை நம்பி இருப்பவர்களுக்கு எதையும் செய்யும் இயல்பு என்று நிற்கிறது வேதாவின் கதாப்பாத்திரம். விக்ரமாக மாதவன். நேர்மையான போலீஸ் அதிகாரி. விக்ரமாக யார் வேண்டுமானாலும் இருந்து விடலாம். ஆனால் வேதவாக இருப்பது அனைவருக்கும் அமைந்துவிடாது.
           
                கனவுகளைத் துறத்துவதாக நாம் நினைத்து செய்துகொண்டிருக்கும் பயணத்தின் ஒரு கட்டத்தில்தான் அதற்கான முதல் அடியைக்கூட நாம் இன்னும் எடுத்துவைக்கவில்லை என்பதை உணர்கிறோம். அந்த விழிப்பை அடையும் போது நாம் எங்கே சென்று நிற்போம் என்று பார்த்தால், ஒரு சாதாரணனாக அன்றாடம் தேவைகளைப் பூர்த்தி செய்ய  அலைந்துக் கொண்டிருக்கும் கூட்டத்தில் ஒருவனாக நின்றுகொண்டிருப்போம். இதனை  நாம் உணரும் போது, நமது கனவு பயணத்திலிருந்து நாம் வெகு தூரம் விலகி சென்றிருப்போம். குடும்பம், மனைவி, குழந்தைகள் என வாழ்க்கை திசை மாறி இருக்கும். அனைத்தையும் ஒருங்கிணைத்து தமது கனவுகள் நோக்கி செல்பவர்கள் வெகு சிலரே. நம் கதையின் நாயகன் "வேதவாக" வாழ்வதற்கு ஒரு சிலருக்கே நேரம், காலம், சூழல் என அனைத்தும் வாய்ப்பளிக்கிறது. இப்படியாக நம்மில் பலர், பல காரணங்களுக்காகவும்  நம்மேல் சுமத்தப்படும் பொறுப்புகளுக்காகவும்  நமக்குள் இருக்கும் வேதாவை தொலைத்துவிட்டு அலைந்து கொண்டிருக்கிறோம்.

Thursday, August 3, 2017

கிராமங்கள்.....

   
               "என்ன மாப்ள எப்படி இருக்கீங்க ", "பங்காளி சௌக்கியமா" இது தான் சென்னையில் இருந்து ஊருக்குக்கு சென்றால் நம் காதில் விழும் வார்த்தைகள். இந்த நல விசாரணையில் அன்பும் அக்கறையும் வெளிப்படும்... எந்த எதிர்ப்பார்ப்பும் இருக்காது. அது தான் கிராமம். மாசில்லாத சுத்தமான காற்று, ஆடு, மாடு, கோழி, மரங்கள், வயல்வெளிகள்,  குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், மெத்தை வீடுகள்  என்று இயற்க்கை எழில் பூங்காக்கள் நமது கிராமங்கள். இரவு நேரங்களில் தெருக்களில் கட்டில் போட்டு உறக்கம், காலையில் வயலுக்கு நடைப் பயணம், மாலையில் குடும்பத்துடன் சில மணிகள் என்று தான்  இன்றும் இயங்கிக்கொண்டிருக்கிறது நமது கிராமங்கள். 
   
         இத்தகைய வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு இன்று நாம் சென்னையின் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கிறோம்.  சொந்த ஊரில் வேலை கிடைத்து, காலையில் வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பி அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் என்று மகிழ்ச்சியாய் வாழ்பவர்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கும். அது போன்று வாழ்க்கை அமைய கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.  விடுமுறை நாட்கள்களில் ஊருக்கு செல்லும் போது எனது உறவினர்களை பார்க்கும் போதெல்லாம் இந்த உணர்வை அவர்களிடம் வெளிப்படுத்தியதுண்டு. 
                     தமிழக மக்கள் தொகையான 8.75 கோடி மக்களில் 1 கோடி மக்கள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாழ்கிறார்கள். புறநகர் மக்கள் தொகையை சேர்த்தால் கிட்டத்தட்ட 2 கோடி  வாழ்வதாக கருதப்படுகிறது. வெளி ஊர்களிலிருந்து சென்னைக்கு குடி ஏறியவர்கள் சென்னையின் மக்களை தொகையில் 36%.  2011-ல் சென்னையின் மக்கள் தொகையாக இருந்த 70 லட்சத்தை விட இது பன்மடங்கு உயர்வு.  இந்த அளவில் இருக்கிறது மக்களின் இடம்பெயர்வு. எனது சொந்த மாவட்டமான கடலூரில் ஒரு சதுர கிலோமீட்டரில் 702 பேர் வாழ்கின்றனர். ஆனால் சென்னையில் ஒரு சதுர கிலோமீட்டரில் 26,553 மக்கள் வாழ்கின்றனர்.இது  கடலூர் மாவட்டத்தை விட 3670% அதிகம். அதாவது கடலூர் மாவட்டத்தில் ஒரு நபர் வாழக் கூடிய பரப்பளவில் சென்னையில் 37 பேர் வாழ்கின்றனர். பண்டிகை நாட்களில் சென்னையில் இருந்து ஊருக்கு செல்வது எவ்வளவு கடினம் என்பது நமக்கு தெரியும். அணைத்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் திக்குமுக்காடிபோகும். 

ஏன் இந்த இடம் பெயர்வு?




                      தினமும் ஊர்களில் இருந்து சென்னைக்கு பலர் வந்த வண்ணம் தான் உள்ளனர். காரணம். நமது மாவட்டங்களில் தரமான கல்வி கிடைக்க வழியின்மை, வேலை வாய்ப்பின்மை, நிலையான வருமானம் ஈட்ட முடியாமை.நமது  கிராமங்களின் வாழ்வாதாரம் விவசாயம். நம் முன்னோர்கள் அரசு அலுவலகங்களிலோ, சாப்ட்வேர் கம்பனியிலோ சம்பாதித்து நம்மை படிக்க வைக்கவில்லை. விவசாயம் செய்தார்கள். அது தான் நம் குடும்பங்களுக்கு படி அளந்தது. விவசாயம் பெரும் லாபம் தரும் ஒன்றாக இருந்தது. அதன் காரணமாக நமது முன்னோர்கள் இடப்பெறவு பற்றி சிந்தித்துகூட இருக்கமாட்டார்கள். இன்று மழை பொய்த்து, நிலத்தடி நீர் வற்றி விவசாயம் செல்லும் திசை சரி இல்லைதான் என்றாலும் அது வேறு கதை. இப்படியாக கல்லூரி படிப்பு, வேலை நிமித்தம் என்று சென்னை வந்த நாம் இங்கேயே தங்கிவிடுகிறோம்.

                     என் எதிர் வீட்டு மாமா ஒரு விவசாயி. அவர் வயலில் வேலை இல்லாச் சமயங்களில் பிறர் வயல்களில் கூலி வேலைக்கும் செல்வார். ஒரு பையன், இரண்டு பெண் குழந்தைகள். தான் என்னதான் கஷ்ட்டப்பட்டாலும் தன் பையனை பொறியியல் படிக்க வைத்தார். அவன் இன்று படிப்பு முடித்து கோவையில் வேளையில் இருக்கிறான். நமது  கிராமத்து பெரியோர்கள் அடிக்கடி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் "நான்தான் படிக்காம கஷ்டப்பட்டது இருக்கேன். நீயாவது படிச்சு நல்ல வேலைக்கு போய்ட்டு ராசா", என்றுதான். இப்படி நம் பெரியோர்கள் சொல்லும் போது கஷ்டமாக இருந்தாலும் அதுவும் உன்மையாக தான் பட்டது. இன்று வேலைக்கு கோவையில் இருக்கும் அந்த பையனால் அவ்வளவு எளிதாக ஊருக்கு இடம்பெயர முடியாது. நம்மை எல்லாம் படித்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று நமது முன்னோர்கள் எண்ணினார்களே தவிர விவசாயம் செய்ய ஊக்குவிக்கவில்லை. இப்படி கிராமத்திலிருந்து நகரங்களுக்கு படை எடுக்கும் நாம் இங்கே இருக்கும் சோக போகங்களில் திளைத்து சொந்த மண்ணை மறந்துவிடுகிறோம். இப்படியாக கிராமங்கள் வார இறுதியில் நாம் சென்று வரும் farm house போல ஆகிவிட்டது.

கிராமத்து உறவுகள்...

                  கிராமத்தில் விசாலமான வீடுகளில் வசித்த நாம் இன்று நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கின்றோம். சென்னையில் நான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பக்கத்துக்கு வீட்டில் ஒரு குஜராத்தி இருந்தார். இன்போசிஸில் வேலை. ரொம்பா நாள் கழித்து ஒரு நாள் லிப்ட்டில் சந்திக்கும் போது குஜராத்தில் வேலை கிடைத்து விட்டதாகவும், மீண்டும் ஊருக்கு செல்வதாகவும் சொன்னார். நானும் வாழ்த்து சொல்லிவிட்டு சென்றுவிட்டேன். ஆனால் அதற்கப்பறம் அவரை பார்க்கவே இல்லை. ஊருக்கு சென்றிருப்பார் என்று எண்ணி நானும் விட்டுவிட்டேன். ஆனால் ஒரு Facebook -ல் இன்போசிஸில் பிரிவுஉபச்சார  நிகழ்வின் படங்களை பதிவேற்றி, "leaving chennai soon", என்று போட்டிருந்தார். அப்போது தான் தெரிந்தது அவர் இன்னும் சென்னையை விட்டு கிளம்பவில்லை என்று. இப்படி பக்கத்து வீட்டில் வசிப்பவர் இருக்கிறாரா இல்லையா என்பதையே நாம் facebook பார்த்து தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது இந்த நகர வாழ்வில்.


                கிராமங்கள் அப்படி இல்லை. ஊர் முழுக்க நமது சொந்தங்கள் தான். பள்ளி அல்லது கல்லூரி கட் அடித்துவிட்டு சினிமாவிற்க்கோ, ஊர் சுற்றவோ சென்றால் மாலை நாம் வீடு வந்து சேரும் முன், அந்த செய்தி வீடு சேர்ந்து, அம்மா துடைப்பத்துடன் வாசலில் நமக்காக வைட் செய்து கொண்டிருப்பார். என் ஊரில் 400 வீடுகள் தான் இருக்கும். ஆனால் அனைவரும் என் சொந்தக்காரர்கள். ஒரு தெருவில் மாமா வீட்டிற்கு நுழைந்து, பக்கத்துக்கு தெருவில் பெரியப்பா வீட்டின் வழியே வெளியே வந்துவிடலாம். "ஊரு முழுக்க நம்ம ஆளுங்கன்னு இருக்கும் போது செம்ம கெத்து தான சார்". எங்கள் கிராமத்தில் எங்கள் பங்காளி வகையறாக்கள் மட்டுமே 13 குடும்பங்கள். குல தெய்வம் கோயிலுக்கு ஏதாவது விஷேஷம் எடுத்தால் அனைத்து குடும்பங்களில் உள்ளவர்களையும் அழைக்க வேண்டும். இது போக இன்னும் மாமன், மச்சான் குடும்பங்கள் வேற. ஆக அனைவரையும் அழைக்காமல் எதுவம் செய்ய முடியாது. செய்யவும் தோணாது. ஏதாவது வீட்டில் ஒரு விஷேஷம் என்றால் கிராமத்த்தில் உள்ள அணைத்து பெண்களும் அங்கு தான் இருப்பார்கள். விஷேஷ வேளைகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டிருப்பார்கள்.

        நமக்கு வயசாகிவிட்டது.  நம்முடைய அண்ணன் குழந்தைகளுக்கு சித்தப்பாவாகவும், தம்பி குழந்தைகளுக்கு பெரியப்பாவாகவும் ஆகிவிட்டோம். அந்த குழந்தைகள் நம்மை அப்படி அழைக்கும் போதே ஒரு தனி ஆனந்தம் தான். ஆனால் சென்னையில், சித்தப்பா பெரியப்பவை uncle என்று அழைக்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது.சண்டை சச்சரவுகள் உறவுகளுக்கிடையே இருக்க தான் செய்யும். அதை கவுரவம் பார்க்காமல் கிராமத்தது மக்கள் விரைவில் மறந்து ஒன்றாக வாழத் தொடங்கிவிடுவார்கள். புதுடெல்லியைப்  பற்றி சொல்லும் போது கூறுவார்கள் "Everybody is somebody in  Delhi". அதுபோலதான் நமது கிராமத்தில் மட்டும் அல்லாது பக்கத்து ஊர்களிலும் நமக்கான அடையாளம் இருக்கும். மக்கள் நம்மை எளிதில் யார் என்று கண்டு கொள்ளுவார்கள். அதையெல்லாம் தொலைத்து விட்டு பிழைப்பிற்க்காக நகரங்களின் தெருக்களில் அடையாளம் இல்லாமல் சுற்றி வருகிறோம்.
   
       தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவை கிராமங்கள் காலி ஆகி வருவதற்கு காரணமாக சொல்லப்பட்டாலும், மக்கள் இருக்கும் பகுதிகளிலேயே தரமான கல்வியும், வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தர வேண்டியது நமது அரசுகள். இன்றுவரை  அதை செய்யத் தவறிவிட்டன. நகராக மயமாக்கல் கொள்கைகள் மூலம் ஒரு பக்கம் பொருளாதாரம் மற்றும் கட்டமைப்பில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கிராமங்கள் தேய்ந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை. மாற்றங்கள் ஏதும் நிகழாவிட்டால், கிராமங்களை ஆரோக்யா  பால் விளம்பரத்தில் வருவது போல் "நலம். நமது கிராமங்களிலிருந்து", என்று தொலைக்காட்சியில் தான் பார்க்க வேண்டி இருக்கும். 

Saturday, June 3, 2017

ஈழ நண்பன் ஜார்ஜ் பெர்ணான்டஸ்.

ஜார்ஜ் பெர்ணான்டஸ். இன்று Facebookல் அரசியல் பேசிவரும் பலரும் கேள்விப்பட்டிராத பெயர் இது. இந்திய இராணுவம் வீர சாகசம் புரிந்த கார்கில் போரின் போது பாதுகாப்புதுறை அமைச்சர் யார் கேட்டால் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காசுமீர் பிரச்சினைக்கு தீர்வு காண பல முறை பிரிவிணைவாத குழுக்களுடன் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தை நடத்தியவர், இரயில்வே சங்கத் தலைவர்...பின்னாளில் இரயில்வே அமைச்சர், அரசியல் பிரவேசத்திற்கு முன்பே உலகின் பல்வேறு தொழிலாளர் மற்றும் மனித உரிமை சமூகங்களால் நன்கு அறியப்பட்டவர், இந்திரா காந்தியால் அவசரநிலை பிரகடனத்தின் போது மிகவும் தேடப்பட்ட குற்றவாளி...பின்பு சிறைவாசம்,  தொழிலாளர்களின் தோழன் என பன்முக சாதனையாளர் ஜார்ஜ் ஃர்ணான்டஸ். அவசர நிலைக்கு பிறகு நடைப்பெற்ற 1977 பொதுத்தேர்தலில் சிறையில் இருந்தபடியே, பிராச்சாரத்திற்கு கூட செல்லாமல் பீகார் மாநிலம் முசாபர்நகர் தொகுதியில் 3லட்சம் வாக்குகளில் வெற்றிப்பெற்று மத்திய அமைச்சரானார்.   
              நான் அரசியலை உற்று நோக்க தொடங்கியிருந்த நாட்கள் அவை. 11-12  வயது இருக்கும். தினமும் நாளிதழ்களில் பளிச்சிடும் பெயர் என்ற முறையில் தான் இவரை கவனிக்கத் தொடங்கினேன். பிறகு தான் தெரியவந்தது அக்காலக்கட்டத்தில் தேசிய அரசியலில் அவர் ஒரு தவிர்க்க முடியாத தலைவர் என்று. பல்வேறு தேசங்களால் தம் சொந்த மக்கள் இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்ட போது அம்மக்களுக்காக குரல் எழுப்பியவர். பர்மா, நேபாள், ஈழ போராளிகளுக்காக இவரின் இல்லக் கதவுகள் திறந்தே இருந்தது. பல காலமாகவே ஈழ மக்களின் உரிமைப் போரட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பி வந்தவர். 1997ல் ஈழப்போரின் கோரிக்கைகளை விளக்கும்விதமாக டெல்லியில் மாபெரும் மாநாட்டை நடத்தினார்.  அதில் ஈழத்திலிருந்து மட்டுமல்லாது புலம்பெயர்ந்த பல ஈழ ஆதரவாளர்களை பங்குபெறச் செ்யதார. 

        1998ல் மத்திய பாஜக ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சாராக பதவியேற்றபின்பும் தனது ஈழ ஆதரவு நிலையில் மாறாமல் இருந்தார். 1998ல் ஈழப் போராளிகளுக்கு ஆயுதகங்களை எடுத்துச்சென்ற கப்பலை இந்திய கடற்படை ரோந்து கப்பல் தடுக்க முற்பட்ட போது, அம்முயற்சியை தடுத்து ஆயுதங்கள் தங்குத்தடையின்றி கிடைக்க வழி செய்தார் ஜார்ஜ் பெர்ணான்டஸ். இந்திய உள்துறை அமைச்சகம் தனி குழு அமைத்து இலங்கை வரை அனுப்பி இவரின் நடவடிக்கைகளை கண்காணித்தெல்லாம் பெருங்கதை. அன்றைய இலங்கை அரசு ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்களை இலங்கை மக்களின் எதிரி என்றே விமர்சித்ததது.  தமிழகம் மற்றம் ஈழத்தின் தலைமன்னார் பகுதிகளுக்கிடையே உள்ள பாக்கு ஜலசந்தயில் இந்திய கடற்படை ரோந்தை மிகவும் சிறுமைப்படுத்தி புலிகளின் முயற்சிகளுக்கு மறைமுகமாக உதவினார். இராஜீவ் கொலை வழக்கில் குற்றங்சாட்டப்பட்ட அனைவரின் வழக்குச்செலவு மற்றும் குடும்ப நலனுக்காக நிதி திரட்ட அமைக்கப்பெற்ற குழுவின் முக்கிய காரணியாக விளங்கினார். 
       
          தமிழீழ செய்திதாளான தினமுரசும், வானோலி புலிகளின் குரலும் இவரை பலமுறை இரும்பு மனிதர் என்று பாராட்டியுள்ளன. சுப்பிரமணிய சுவாமி அன்றைய குடியரசுத் தலைவர் நாராயணன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் "பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஒரு "National security risk". அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்", என கோரிக்கை விடுத்தார்.

       இப்படியாக பல்வேறு ஏதிர்ப்புகளுக்கும், விமர்சகர்களுக்கும் செவிசாய்க்காமல் தன் ஈழ ஆதரவு நிலைப்பாடில் உறுதியாக இருந்தார். பழ.நெடுமாறன், வைகோ, டாக்டர்.இராமதாஸ் உள்ளிட்ட தமிழ் ஆதரவு தலைவர்களுடன் மிகுந்த நட்பு பாராட்டியவர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்கள்.
        நம் தமிழ் மண்ணுக்கும், கலாச்சாரத்திற்கும் சிறிதளவு சம்பந்தமுமின்றி ஈழ மக்களுக்காக குரல் கொடுத்தவரை அய்யா ஆண்டன் பாலசிங்கம் அவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க இயலவில்லை. ஜார்ஜ் பெர்ணான்டஸ் பிறந்த தினமான இன்று பிறந்த ஈழ துரோகிக்கு வைர விழா எடுக்கும் நிகழ்வு  வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறது.

Chat Box