Wednesday, August 4, 2021

என்னத்த கிழித்த்துக் கொண்டிருக்கிறோம்???


 

மணிரத்னம் இயக்கத்தில் எடுக்கப்பட்டுவரும் (படம்  வெளிவருமா  தெரியாது ) பொன்னியின் செல்வன் படத்தில் ,எந்தெந்த நடிகர்கள் என்ன கதாபாத்திரம் ஏற்று   நடிக்கிறார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில்   வைரலாகி வருகிறது. வைரல் என்பதைவிட வைரஸ் ஆகி வருகிறது என்றே சொல்லத்  தோன்றுகிறது.  ஏனென்றால் இந்தப் படம்,  உயிர்கொல்லி வைரஸைவிட பல மடங்கு தாக்கத்தை நம் இளம் சமூகத்தினரிடம் ஏற்படுத்த போகிறது.

நான் பலமுறை கூறியது போல பொன்னியின் செல்வன் புத்தகம் ஒரு புனையப்பட்ட கட்டுக் கதை. அந்த காலக்கட்டத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் ஆதரவைப் பெற, இந்த சமூகத்தைச் சார்ந்த ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தை சுற்றியே பொன்னியின் செல்வன்  கதை நகர்வதாக  பின்னப்பட்டிருக்கும்.அந்த கதாபாத்திரத்தை ஒரு  மாவீரனாக, ஆகச் சிறந்த உளவாளியாக, அந்த கதாபாத்திரம் மட்டும் இல்லை என்றால் சோழ சாம்ராஜ்யம் அழிந்தே போய்விடும் என்ற ரீதியில் அந்த கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தனைக்கும்  அது ஒரு கற்பனை கதாபாத்திரம். இது போன்று மேலும் பல புனைவுகளைக் கொடுத்தது தான் கல்கியின் பொன்னியின் செல்வன். 

பழுவேட்டரையர்கள் பாண்டிய நாட்டு ஆபத்துவிகளுடன் கூட்டு சதி செய்து சோழ சிம்மாசனத்தை கைப்பற்ற முயற்சி எய்வது போலவும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் உண்மை வேறுமாதிரியானது. நிதர்சனத்தில் பழுவேட்டரையர்கள் சோழ பேரரசின் தூண்கள்.சோழ சிம்மாசனத்தின் விசுவாசிகள். விசுவாசம் என்பது இன்று நாம் நடந்து கொள்வது போல எதையாவது எதிர்பார்த்து காட்டுவது கிடையாது. அவர்களின் உயிரே போனாலும் சோழ குடும்பத்தினர் மீதும், அதன் வாரிசுகள் மீதும் எதிரி வீசும் கத்தியின் சிறு துரும்பு கூட பட்டுவிடாமல் பாதுகாக்கும் அளவிற்கு அவர்களின் விசுவாசம் மேலானது.  பழுவேட்டரையர்கள் சோழ பேரரசின் படையை  தலைமை ஏற்று நடத்தியவர்கள். இன்று வரை சோழப்படையின் சிறப்பு வாய்ந்த படைப்பிரிவாக கருதப்படும் செம்படை, வேளக்காரப் படை ஆகியவற்றை உருவாக்கிய பெருமகன்கள் பழுவேட்டரையர்கள். சோழ அரசின் line of command - இல் சோழப் பேரரசருக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள். சோழர்கள் எவ்வளவோ அரசர்களை அடிமைப்படுத்தி அவர்களின் குடைக்கு கீழ் கொண்டு வந்து ஆட்சி புரிய அதிகாரம் வழங்கினாலும், அவர்களுக்கென தனிக் கொடி மற்றும் இலச்சினையை பயன்படுத்த அனுமதித்ததில்லை. ஆனால், பழுவேட்டரைகளுக்கு இதிலிருந்து விதிவிலக்கு வழங்கப்பட்டிருந்தது. சோழர்களுக்கு இணையாக புலி கொடியுடன் சேர்ந்து பனைக் கொடியும் பறந்தது சோழ தேசத்தில். ஒரு கட்டத்தில் சோழ மன்னர்களுடன் மணப் பந்தம் செய்து கொள்ளவும் தொடங்கினர். அப்படியாகப் பார்த்தல் சோழ அரசர்கள், பழுவேட்டரையர்களுக்கு மருமகன் முறையில் வந்து விடுகிறார்கள். உண்மை இப்படி இருக்க எதிரி நாட்டு ஆபத்துவிகளுடன் சேர்ந்து சோழப் பேரரசை கைப்பற்றும் அவசியம் அவர்களுக்கு எப்போதும்  இருந்தது  இல்லை.  பழுவேட்டரையர்கள் கேட்டு இருந்தால் அவர்களின் விசுவாசத்திற்கு  பரிசாக சோழ வாரிசுகளே அந்த அரியணையை இவர்களுக்கு விட்டு கொடுத்து இருப்பார்கள். 

ஆனால், பொன்னியின் செல்வன் புதினத்தில் உண்மை திரிக்கப்பட்டு உண்மையைப் போலவே சொல்லப்பட்டிருக்கும். இந்த புதினத்தை ஒரு பெரும் வரலாற்று பொக்கிஷமாக எடுத்துக்  கொண்டு இளைஞர்கள் பலர் இதை தங்களின் வரலாற்று ஆய்வின்  அடித்தளமாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்த புதினத்தை அடிப்படையாக வைத்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் படம் வேறு எடுக்கிறார்கள். அந்த படத்தின் லட்சணம் எப்படி இருக்கும் என்று வேற தெரியவில்லை. 

ஏனென்றால் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற ஒரு படம் வந்தது. அந்த படத்தில் சிவாஜி அவர்கள் நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் பின்னி பெடல் எடுத்து இருப்பார். கட்டபொம்மனை ஒரு மாபெரும் வீரனாக அந்த படம் சித்தரித்தது. அன்று வரை கட்டபொம்மன் பற்றி பெரிதாக கேள்விப்பட்டிராத நம் மக்கள், படத்தில் வரும் கட்டபொம்மன் தான் நிதர்சனம் என்று  நம்பிவிட்டனர்.  அந்த படத்தில் வருவது போல கட்டபொம்மனுக்கு ஒரு பத்தி கூட சரளமாக தமிழில் பேச வராது. சிவாஜியை போல கட்டபொம்மன் ஆஜானுபாகுவான ஆளும் கிடையாது.   இந்திய சுதந்திர வரலாற்றை கற்பிக்கின்ற பேர்வழியில் , பல பள்ளிகளில் இன்ற திரைப்படத்தை மாணவர்களுக்கு போட்டுக் காட்டியுள்ளனர். அப்படி பார்த்த ஒரு தலைமுறைக்கு நாம் தவறான வரலாற்றையே புகுத்தி இருக்கிறோம். உண்மையை சொல்லப் போனால்  கட்டபொம்முலு பற்றி நமக்கு PR . பந்துலு சொன்ன கதை. 

வீரபாண்டிய கட்டபொம்மன் என்று கூகிளில் தேடினால் சிவாஜியின் முகம் தான் வருகிறது. இதே தான் இப்போது நிகழ்ப் போகிறது. நாளை நம் பிள்ளைகள் கூகிளில் அருண்மொழிவர்மன் என்று தேடினால் ஜெயம் ரவியின் படமும், குந்தவை பிராட்டியார் என்று  தேடினால் திரிஷாவின் படமும் தான் முன் வந்து அவர்களுக்கு வரலாற்றைக் கற்றுக் கொடுக்கப் போகிறது பாருங்கள். என்னைப்போன்ற வரலாற்று ஆர்வலர்கள் உண்மையான வரலாற்றைதேடி படித்து, அறிந்து , அடுத்த தலைமுறையினருக்கு கடத்த நாயாய் அலைகின்றோம்.  ஆனால் இவர்களுக்கு பணம் இருக்கும் கொழுப்பு, பார் போற்றும் சோழ வரலாற்றை திரித்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சோழ வரலாறு பல Youtube சேனல் ஆர்வக் கோளாறுகளிடம்  சிக்கி , பல்வேறு கற்பனைக் கதைகளாக சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. இதுவே எதிர்கால தலைமுறையினருக்கு கிடைக்கும் வரலாற்று பொக்கிஷங்களாகி விடுமோ என்ற அச்சத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். 

இப்போது  இந்த படம் P.S -I(Ponniyin selvan-1)  வேறு வெளிவந்தால் இதில் உள்ள தவறுகளை நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தது அவர்களுக்கு உண்மை வரலாற்றை புகுத்துவதற்கு பல யுகங்கள் தேவைப்படும் போலும். ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எங்கள் சோழ மக்களை அசிங்கப்படுத்தியது இன்னும் ரணமாய் அரித்துக் கொண்டிருக்கிறது எங்களை. அதுமட்டுமில்லாமல் சோழர்கள் எங்கே போனார்கள் என்று தவறான தேடுதலையும் முன்னெடுத்து கொண்டிருந்தார்கள் இளைஞர்கள் . பாகுபலி என்ற ஒரு கற்பனை கதையை குழந்தைகளின் மனதில் பதிய வைத்து அப்படி ஒரு மன்னன் இருந்ததாக நம்ப வைத்தது போல தான் இப்போதும் நிகழ்ப் போகிறது. பொன்னியின் செல்வன் படத்தையும் ஒரு திரைப்படமாக மட்டும் பார்க்காமல், இதை  வரலாற்று ஆய்வின்  
அடித்தளமாக நாளைய தலைமுறையினர் எண்ணிவிட கூடாது என்பதே தற்போது பெரும் அச்சமாக இருக்கிறது. வரலாற்று ஆய்வாளர், பழுவேட்டரையர் குல வாரிசு அன்பிற்குரிய அண்ணன்  விக்ரமகர்ண பழுவேட்டரையர் அவர்கள் பல தளங்களில் கூறியது போல வரலாறு நமக்கு மட்டும் சொந்தமில்லை, அது அனைவருக்கும் பொதுவான ஒன்று. இனிவரும் காலம் மென்பொறி காலம் . இன்றைய மற்றும் நாளைய தலைமுறையினர் வரலாற்றை புத்தகங்ளில், கல்வெட்டுகளில், ஆன்றோர்களின் கூற்றுகளில் இருந்து அறிந்து கொள்வதைவிட, வலைப்பொறி தேடலிலிருந்து தெரிந்து கொள்ளவே முனைவர். அப்படி தேடும் அவர்களுக்கு இந்த நடிகர்களின் முகங்களும், இந்த படமும்  வரலாற்று ஆவணங்களாக அமைந்து விட கூடாது. இதை எல்லாம் பார்த்தும்  கொண்டு நாம் என்னத்த கிழித்த்துக் கொண்டிருக்கிறோம். 

பெரும் ஆதங்கத்துடனும் 
கண்டனங்களுடனும்,
சத்தியராஜ் சத்தியமூர்த்தி. 

Chat Box