நம்மூரில் ஒரு பழக்கம் இருக்கிறது. வாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களையும், சினிமாக்களில் வரும் தகவல்களையும் உண்மை என்று நம்பிவிடுவது. அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய பெரும்பான்மையினர் முயற்சி செய்வதில்லை. இதனைக் காரணமாகக் கொண்டு ஒரு சிலர் தங்களுக்கு தேவையானவற்றை, அல்லது தாங்கள் சார்ந்த இயக்கத்திற்கு அல்லது கட்சிக்கு தேவையானவற்றை புத்தமாகவோ, திரைப்படமாகவோ தயார் செய்து அதனை ஒரு ஆவணமாக மக்களிடம் பதிவு செய்து கொள்கின்றனர். இது இன்று துவங்கியதல்ல. இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் முதல் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர் ஒரு சரித்திர நாவல் என்று சொல்லப்படும் கதையை ஒரு பிரமாண்ட திரைப்படமாக எடுத்து வருகிறார். ஆனால் இந்த கட்டுக்கதையின் உண்மைத்தன்மையை பற்றி யாரும் இன்று வரை பெரிதாக கேள்வி எழுப்பவில்லை. பொன்னியின் செல்வன் தான் அது. அது ஒரு புனையப்பட்ட புதினம் என்று பெரும்பாலானோர் வாதத்திற்க்கே வருவோம். அதில் வரும் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் கற்பனையே என்றாலும் மற்ற கதை மாந்தர்கள் சோழ பேரரசின் மூச்சில் கலந்தவர்கள். சோழ சாம்ராஜ்யத்தின் மேன்மைக்காக தங்களின் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் தியாகம் செய்தவர்கள். அப்படிப்பட்ட கதை மாந்தர்கள் மீது கல்கி கிருஷ்ணமூர்த்திக்கு ( பொன்னியின் செல்வன் புத்தகத்தை எழுதியவர்) என்ன கோபமோ தெரியவில்லை; அல்லது கல்கி புத்தகம் அதிகம் விற்பனையாக வேண்டும் என்ற நிர்பந்தமோ தெரியவில்லை, அந்த கதை மாந்தர்கள் மீது சேற்றை வாரி வீசி இருக்கிறார். உண்மை வரலாற்றுக்கு புறம்பான பல புனைவுகளை அள்ளித் தெளித்து இருக்கிறார் இந்த புத்தகத்தில். நான் தற்போது பொன்னியின் செல்வன் புத்தகத்தை பல ஆண்டுகளுக்கு பிறக்க மீண்டும் படிக்கத் தொடங்கியுள்ளேன். அதன் நோக்கம் அந்த புத்தகத்தின் பெருமையை உங்களுக்கு எடுத்து சொல்ல அல்ல. அதில் உள்ள வரலாற்று பிசகுகளை உங்களுக்கு எடுத்து சொல்ல. தற்போது பொன்னியின் செல்வன் முதல் பாகம் - புது வெள்ளம் படித்து முடித்தாயிற்று. அதில் உள்ள பிசகுகளை பார்ப்போம்.
ஆதியே சறுக்கல்:
முதல் சில பக்கங்களில், பழுவூர் பெரியவர்கள் என்று சொல்லப்படும் பழுவேட்டரையர்கள் சோழ சக்கரவர்த்தி சுந்தர சோழனின் முடிவுக்கு எதிராக திட்டம் தீட்டுவது போல சித்தரிக்கப்படும். இதுவே பெரிய தவறு. சோழ சிம்மாசனத்திற்கு பழுவேட்டரையர்களின் உடலில் உள்ள ரோமம் கூட தீங்கு நினைக்காது. மறைந்த சோழ மன்னர் கண்டராத்திரின் மகன் மதுராந்தகருக்கு பழுவேட்டரையர்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொடுத்ததால் மதுராந்தகச் சோழனை, சுந்தர சோழருக்கு அடுத்து அரியணை ஏற்ற வேண்டும் என்று பழுவேட்டரையர்கள் சதி செய்வது போல கதை நகர்கிறது. அப்படி ஒரு திருமணம் நடைபெறவேயில்லை.
அதற்கான சாத்தியக் கூறுகள் இருந்ததாகக் கூட எங்கேயும் பதிவில்லை.
பெரிய பழுவேட்டரையர் - நந்தினி:
நந்தினி என்றொரு கற்பனை கதாபாத்திரம். ஏதோ உலகில் உள்ள அனைத்து பெண்களைவிட இவள்தான் அழகி என்பதை போல கல்கி இவளை வர்ணித்து இருப்பார். அந்த அழகியிடம் மோகம் கொண்ட பெரிய பழுவேட்டரையர், அவருடைய அறுபதாவது வயதில் அவளை திருமண செய்து கொண்டு பழுவூரின் இளைய ராணியாக்கி கொள்கிறார் என்று கதை வருகிறது. இது எவ்வளவு பெரிய அபாண்டம். மேலும் இந்த நந்தியின் ஆலோசனையின்படியே மதுராந்தகரை மன்னனாக்க பழுவேட்டரையர்கள் முயற்சி செய்வதாக கதை செல்கிறது. இத்தகைய விஷயங்கள் பழுவேட்டரையரின் புகழுக்கு இழுக்கு விளைவிப்பது போன்றதாகும்.
ஆதித்த கரிகாலன் - நந்தினி:
இந்த நந்தினி மீது ஆதித்த கரிகாலன் சிறு வயது முதல் மோகம்கொண்டு இருந்ததாகவும், அவள் மீது தீரா ஆசை கொண்டு இருந்ததாகவும் கதை அளந்து இருக்கிறார் கல்கி. நந்தினி பழுவேட்டரையரை திருமணம் செய்து கொண்டது தெரிந்தும், அவளிடம்
பழுவேட்டரையரை விட்டுட்டுவிட்டு தம்முடன் வந்துவிடும் படி ஆதித்த கரிகாலன் கூறுவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இன்னும் ஒருபடி மேலே போய், போரில் ஆதித்த கரிகாலனிடம் தோற்று ஓடிய மதுரையை ஆண்ட வீரபாண்டியன் நந்தினியின் காதலென்றும், அவளின் அரவணைப்பில் வீரபாண்டியன் இருந்த போது, அதை பார்த்த ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனின் தலையை கொய்தான் என்றும் பொன்னியின் செல்வன் புத்தகத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் வைகை ஆற்றின் நடுவில் இருந்த ஒரு தீவில் நடைபெற்றதாக சொல்லப்பட்டிருக்கும். இது முற்றிலும் பொய். ஆதித்த கரிகாலனிடம் தோற்று ஓடிய வீரபாண்டியன் பொதிகை மலையில் பதுங்கி கொள்கிறான். போதை மலையில் அவனை தேடி அவன் தலையைக் கொய்து தனது குதிரையில் கட்டி தஞ்சை கோட்டை வரை எடுத்து வந்தார் அடித்த கரிகாலன் என்பதே வரலாறு. இவை முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ள பிழைகள் மட்டுமே. இரண்டாம் பாகத்தில் உள்ள பிழைகள் பற்றி அறிய இணைப்பில் இருங்கள். இவை முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ள பிழைகள் மட்டுமே. இரண்டாம் பாகத்தில் உள்ள பிழைகள் பற்றி அறிய இணைப்பில் இருங்கள்.
இதையெல்லாம் திரையில் ஒருவேளை மணிரத்னம் காண்பித்தால் நாம் மேலே கூறிய அந்த மாவீரர்கள் பற்றி மக்கள் மனதில் என்ன மாதிரியான எண்ணங்கள் எழும். இது அவர்களின் புகழை பாதிக்காதா ? அவர்கள் பற்றி மக்கள் கொண்டுள்ள எண்ணத்தின் மீது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நாம் சிந்திக்க வேண்டும்.