முதல் சந்திப்பிலேயே அண்ணன் எழுதிய "சாளுக்கியம்" நூலை எனக்கு பரிசளித்தார். நம் பள்ளி வரலாற்று பாடத்தில் எங்கேயும் சோழர்களின் சாளுக்கிய பராக்கிரமங்களைப் பற்றி குறிப்புக்கள் இருந்ததில்லை. பொன்னியின் செல்வனில் கூட அவ்வளவாக படித்த ஞாபகம் இல்லை. சாளுக்க்கியம் பற்றி நான் முதன்முதலில் கேள்விப்பட்டது சிவாஜி கணேசன் நடித்த "இராஜராஜ சோழன்" திரைப்படத்தில் தான். 11- ஆம் வகுப்பு படிக்கும் போது பள்ளி விடுதியில் பார்த்தது. அதில் சாளுக்கிய மன்னன் சத்தியாசியனை வென்று, வேங்கி நாட்டின் அரசனாக விமலாதித்தனை முடிசூட்டி, தன் மகள் குந்தவையை அவனுக்கு திருமணம் செய்து கொடுப்பார் இராஜராஜ சோழன். அந்த படம் பார்த்த பின்பும் பல நாட்கள், பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. அண்ணன் இந்த நூலை என்னிடம் கொடுத்ததிலிருந்து அதனை படித்து முடிக்க வேண்டும் என்று பேராவல் தொற்றிக்கொண்டது.
சோழர்கள் எதையெல்லாம் செய்ய வல்லவர்கள் என்பதை இந்த உலகிற்கு உணர்த்தும் ஒரு உதாரணமாய் விளங்கியது சாளுக்கிய போர். மன்னன் சத்தியாசிரயனின் பேராசைக்கும், அகந்தைக்கும், மக்கள் நலனில் அக்கறை காட்டாத அலட்சிய போக்குக்கும் முற்றுப் புள்ளி வைக்க நிகழ்த்தப்பட்டதே இந்த போர். அபயகுலசேகரன், அரிதூர்க்களங்கன், நிகரலிச்சோழன் ஸ்ரீ ஸ்ரீ இராஜராஜ சோழ பெருந்தகையனாரைப் பற்றி நாம் இதுவரை படித்த அனைத்திற்கும் முத்தாரமாய் அவரின் வரலாறு இந்த நூலில் சொல்லப்பட்டு இருக்கிறது. என்னதான் நாம் அருள்மொழிவர்மரை பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் முலுவலகம் காக்கும் இராஜராஜ பெருவுடையாராய் கம்பீரமாய் சோழ கிரீடத்தின் மணி முத்தாய் நம் முன் நிற்கிறார். உலகின் எந்த அரச குடும்பத்தின் மூன்று தலைமுறைகளும் ஒருசேர போர்க்களத்தில் களமாடியதாக வரலாறு இல்லை. ஆனால் சாளுக்கியப் போரில் அது நடந்தேறியது.ஸ்ரீ ஸ்ரீ இராஜராஜ சோழ சக்கரவர்த்திகள் , அவர் மகன் பட்டத்து இளவரசனான மதுராந்தகன் என்னும் இராஜேந்திர சோழன், அவனின் மகன் இராசதிராச சோழன் என சோழ பேரரசின் மூன்று அதிமுக்கிய பெருந்தலைகள் ஒருசேர களம் கண்டனர். இதுவரை எந்த குறிப்பேட்டிலும் இந்த அரிய நிகழ்வைப் பற்றி நான் படித்ததில்லை. அப்படியாக நம்முடைய வரலாற்று தேடலுக்கான பல்வேறு தெளிவுகளைக் கொண்டது "சாளுக்கியம்".
விக்ரமகர்ன பழுவேட்டரையர் அவர்களின் எழுத்தில் சாளுக்கியம் மூலம் நாம் சோழ வரலாற்றின் 1000 ஆண்டுகளை கடந்து பின்னோக்கி செல்கின்றோம். என்னுடைய "சோழப் பேரினம்" என்னும் பதிவில் சோழப் பேரரசு எப்படி ஒரு மாபெரும் நிலமாளும் அரசாக விளங்கியதற்கான முக்கிய அம்சங்களை குறித்து கூறி இருந்தேன். இந்த நூலின் மூலம் அந்த சிறப்பம்சங்கள் அனைத்தும் உண்மையே என்பதை பக்கத்திற்கு பக்கம் நம்மால் உணர முடியும். பழுவேட்டரையர்களின் இராஜ விசுவாசம், சோழர்களை கண்ணென காக்க அவர்கள் ஏற்ற விரதம், அதனை நித்தமும் கடைபிடிக்க அவர்கள் செய்யும் தியாக வேள்வி ஆகியவை கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. தனது பேரனாகவே இருந்தாலும், அத்துனை உரிமைகளையும் இராஜராஜ சோழனின் மீது கொண்டிருந்தாலும் ஒரு சக்கவர்த்திக்கு அளிக்க வேண்டிய மரியாதையை ஒரு போதும் அய்யன் பெரிய பழுவேட்டரையர் அளிக்க தவறியதில்லை. தனது மகளாகவே இருந்தாலும் மும்முடி சோழனின் பத்தினி சக்கரவர்த்தினி பஞ்சவன்மாதேவிக்கு, சோழ பேரரசின் கோட்டை தளபதியாய் தனது மரியாதையை அவர் செலுத்த தவறியதில்லை. இதைதான் இன்றைய கார்ப்பரேட் தொழில் உலகில் படிநிலை நெறிமுறைகள்(Hierarchical Protocols) என்று சொல்கிறோம். இவற்றைப் பார்த்தே பழுவேட்டரையர்களால் பயிற்றுவிக்கப்பட்ட தளபதிகளும் இந்த மாண்பை பின்பற்றினர்.
சோழர்களின் வீரம், அறம், நீதி வழுவாது போர் செய்யும் முறை, பகைவனுக்கருளும் மனம், இராஜராஜ சோழரின் அப்பழுக்கற்ற அரசாட்சி, மாதர்கள் மீது அவர்கள் கொண்ட மரியாதை, சோழ வேல்களைவிட கூர்மையாக தீட்டபட்ட ஒற்றர்களின் மதி நுட்பம், விற்படை, குதிரைப்படை, யானை படை, அடிவரிசைப் படை, செம்படை, பழுவேட்டரையர்களின் இரணியபடை, ஆதூர்சாலை படை என இன்றைய வல்லரசுகளின் படைகளுக்கே சவால்விடும் படைகள், தானியங்கி துப்பாக்கிகள் போன்று தானியங்கி வில் அம்புகள் என சோழ பெருமைகளை விவரிக்கிறது சாளுக்கியம். சோழர்கள் தங்களின் பண்புகளை, குணங்களை , குலத்தின் மாண்புகளை வெறும் செப்பேட்டில் மட்டும் செதுக்கி வைத்துவிட்டு செல்லவில்லை. அவர்களின் வாழ்க்கை முறையே அடுத்த தலைமுறையினருக்கு பெரும் பாடமாக, சான்றாக விளங்கி, ஓங்கி நின்றது.
வாசகர்களாகிய நமக்கு தான் இது புத்தகம். ஆனால் ஆசிரியர் அவர்களுக்கு குடும்ப வரலாறு. அப்படி இருப்பினும் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை பற்றி குறிப்பிடுகையில் எந்த வகையிலும் அவரை சிறுமைப்படுத்தாமல் ஒரு தேசத்தின் மன்னன் என்ற மரியாதையுடன் எழுதியிருப்பது சிறப்பு. விஜயாலாய சோழன் தொடங்கி ஆதித்த கரிகாலன், இராஜராஜ சோழரின் பொற்கால ஆட்சி, தஞ்சை பெருவுடையார் கோயிலின் கட்டுமான சிறப்பு, இராசேந்திரச்சோழ சக்கரவர்த்திக்கு பட்டாபிஷேகம் வரை பல வரலாற்று சம்பவங்களை நூலில் சொல்லி இருப்பது, நாம் இதற்கு முன் படித்த விஷயங்களை இலகுவாக பொருத்தி பார்க்க முடிகிறது. சாளுக்கியப் போர் நடைபெற்ற இடங்களை நம் கண்முன் கொண்டு வந்து, இன்றைய பூகோள அமைப்பில் நமக்கு புரியும் படி சொல்லப்பட்டிருக்கிறது.
என்ன தான் பொன்னியின் செல்வன், உடையார், கங்கைகொண்டான் போன்ற புதினங்களை நாம் படித்தாலும் அவை ஒரு மூன்றாம் நபரால் புனையப்பட்ட ஒன்றாக தான் கருத முடியும். சோழ வரலாற்றை சோழர்களின் கதைக்களத்தில் அறிந்து கொள்வதென்பது பெரும் பேரு தான். சாளுக்கியம் முற்றுற்றது. அண்ணனின் அடுத்த படைப்பான சோழர்களின் மாபெரும் வரலாற்றை நமக்கு அளிக்கப்போகும் "உய்யக்கொண்டான்" பெரு நூலுக்காக காத்திருக்கிறேன்.