தமிழ் இலக்கியங்களில் வரும் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மிக மிக குறைவு. மேல் 1970 களுக்கு பிறகு அரச காலத்து கதைகளுக்கு முன்பு இருந்து வரவேற்பு பொது மக்களிடம் இல்லாமல் போகவே அரச படங்களின் வரவும் சரியத் தொடங்கின. காதல் கதைகள் மீது மக்களுக்கு ஈர்ப்பு ஏற்ப்பட்டதாலும், வரலாற்று திரைப்படங்களை தயாரிப்பதில் பெரும் செலவு ஏற்படுவதாலும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தங்களின் படம் எடுக்கும் பாணியை மாற்றினார்கள். இருப்பினும் தமிழ் மக்கள் ஆயிரத்தில் ஒருவனில் எம்.ஜி.ஆர் அவர்களை மணிமாறனாகவும், சிவாஜியை கர்ணனாகவும் உருவகப்படுத்தி ரசித்து வந்தார்கள். வரலாற்றுத் திரைப்படங்களின் வரவு குறைந்து வந்தாலும் அவ்வபோது சில தயாரிப்பாளர்களின் துணிச்சலான முயற்சியால் சில படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த படங்கள் வெற்றியடைய காரணம் திரைக்கதையும், அழுத்தமான கதையும் தான். என்னுடைய முந்தைய பதிவில் சொல்லி இருந்தது போல கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர் அவர்களின் காலத்தில் இருந்தே முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. துறைக்கு இன்று வந்த இயக்குநர்களே வரலாற்று படங்களை எடுக்கும் முயற்சியில் எடுபடும் போது, பல்வேறு விருதுகளை பெற்ற மணிரத்னம் அவர்களுக்கும் இந்த ஆசை வந்ததில் எந்த ஆச்சர்யமோ, தவறோ கிடையாது. இருப்பினும் இவருடைய இந்த திரைக்கதை எந்த மாதிரியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சமும் என்னைப் போன்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
ஏனென்றால் இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கும் பொன்னியின் செல்வன் ஒரு வரலாற்று புத்தகம் என்பது மட்டுமே தெரியுமே தவிர அது ஒரு புனையப்பட்ட புதினம் என்பது தெரியாது. கல்கியின் எழுத்தாடலில் இந்த கதையில் எவை நிஜ பாத்திரங்கள்(பழுவேடடரையர்கள், கொடும்பாளூர் அரசர்கள், திருக்கோயிலூர் மழவராயர்கள்) என்பதும், எவை கற்பனை பாத்திரங்கள் என்பதும் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் இந்த புதினம் இராஜராஜ சோழனின் கதை என்பது மட்டுமே தெரியும். உண்மை என்னவெனில் இந்த கதைப்படி அவரின் பெயர் அருள்மொழிவர்மன். பொன்னியின் செல்வன் கதை நடக்கும் காலத்தில், சோழ பேரரசு இரண்டாம் பராந்தகர் எனப்படும் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் கொடையின் கீழ் உள்ளது. இவர்தான் ஆதித்ய கரிகால சோழன் மற்றும் இராஜராஜ சோழனின் தந்தை. மேலும் இக்கதையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிஜ கதாபாத்திரங்களும், அதற்கும் மேற்பட்ட கற்பனை பாத்திரங்கள் உள்ளன. ஐந்து பாகங்கள் கொண்ட இந்த புதினத்தின் எந்த கதைப் பகுதியை இப்போது திரைப்படமாக எடுக்க முனைகிறார்கள் என்று தெரியவில்லை. மேஜிக் லேன்டர்ன் குழு நடத்தும் நாடகத்திலேயே பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நீக்கியே மெடையேற்ற நேரிட்டது. அப்படிப்பட்ட இந்த கதையை எப்படி திரையில் கொண்டுவரப் போகிறீர்கள். பாகுபலியின் வெற்றி தந்த தைரியத்தில் இந்த திரைப்படத்தை எடுக்க நீங்கள் எத்தனித்திருந்தால், ஒரு திரைப்படத்திற்கு மூன்று மணி நேரம் விகிதம், மூன்று படங்களாக எடுத்தால் தான் கதையை ஓரளவிற்காவது நிறைவாய் சொல்ல முடியும். அப்படி மூன்று மணி நேரக் கதையை மூன்று படங்களாக எடுத்து, மூன்று படங்களையும் மக்கள் பார்த்து வெற்றியடைய செய்யும் அளவிற்கு திரைக்கதையை அமைத்திட முடியுமா?
ஒரு படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் ஒருவனே அந்த படத்தின் நாயகன் ஆவான். பொன்னியின் செல்வன் கதையை ஆழ்ந்து படித்தவர்களுக்கு மட்டுமே இந்த கதை ஆழ்வார்க்கடியான் என்ற கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை சுற்றியே நகர்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். அப்படியிருக்க மணிரத்னம் அவர்கள் எடுக்கப் போகும் படமும் இந்த பாத்திரத்தை சுற்றியே நகரப் போகிறதா இல்லை வந்தியத்தேவனையும், அருள்மொழிவர்மரயும் மையப்படுத்தி நகரப் போகிறதா ??
தமிழகத்தில் உள்ள 79 சாதிகளும், அதன் நூற்றுக்கும் மேற்பட்ட உட்பிரிவுகளும் இராஜராஜ சோழனை தங்கள் சாதியை சேர்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். இது அரச கால திரைப்படம் என்பதால் பல்வேறு அரச நிகழ்ச்சிகளை காட்சியாக்க நேரிடும். அப்படி காட்சிப்படுத்தப்படும் போது அந்த நிகழ்வுகளின் சடங்கு முறைகள் எவ்வாறு காட்சிப்படுத்த போகிறார்கள்? ஒவ்வொரு சாதிக்கும் குறிப்பிட்ட முறைகள் இருப்பதால், இந்த காட்சிகள் மூலம் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருக்குமல்லவா ?
ஒரு திரைப்படம் என்றால் கதையின் நாயகன் என்று ஒருவன் இருக்க வேண்டும், வில்லன் ஒருவன் இருக்க வேண்டும். அதுவும் ஒரு வரலாற்றுத் திரைப்படம் என்று வரும்போது இந்த ஹீரோ, வில்லன் பாத்திரங்கள் எந்த குழப்பமின்றி சரியான முறையில் நிலைப்படுத்திருக்க வேண்டும். இந்த பாத்திரங்கள் இல்லையென்றால் அந்த படம் ஒரு வரலாற்று ஆவணப்படமாக மட்டுமே இருக்க முடியுமே தவிர, அதை ஒரு திரைப்படமாக கருத முடியாது. அப்படியாயின் இந்த திரைபடத்தின் நாயகனாகவும், வில்லனாகவும் யாரை சித்தரிக்கப் போகிறார்கள்?
சோழர்களின் உற்ற நண்பர்களாகவும், தளபதிகளாகவும், மெய்க்காப்பாளர்களாகவும், ஆலோசகர்களாகவும், சம்பந்திகளாகவும் 400- க்கும் மேற்பட்ட ஆண்டுகள் சோழ வம்சத்தினரோடு பயணித்து வந்த பழுவேட்டரையர்களை கொடும் பாதகங்கள் புரிபவர்களாகவும், சதி திட்டம் தீட்டி சோழ சிமாசனத்தை கைப்பற்ற சூழ்ச்சி செய்பவர்களாகவும் சித்தரித்துள்ள கல்கியின் பொன்னியின் செல்வனை அப்படியே கதைக்களமாக்கப் போகிறார்களா ? இப்படி கண்ணியமிக்க இந்த மாவீரர்களை தவறாக திரையில் காட்டினால் வரலாற்று ஆர்வலர்களின் பழிபாவதிற்கும், அவர்களின் தெய்வங்களாக விளங்கும் சோழ பேரரசர்களின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும். பழுவேட்டரையர்களின் விசுவாசத்தை பற்றியும், அவர்களின் மீது சோழ மன்னர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைப் பற்றியும் அறிந்து கொள்ள சோழ- சாளுக்கிய போர்களை மையப்படுத்தி எழுதப்பட "சாளுக்கியம்" என்ற வரலாற்று ஆய்வு நூலை படிப்பதே சாலச் சிறந்தது. மணிரத்னம் அவர்களின் திரைக்குழு சாளுக்கியம் நூலை படித்த பின்பு படத்தில் பழுவேட்டரையர்களின் கதாபாத்திரங்களை வடிவமைப்பது எப்படி என்ற முடிவுக்கு வருவது உசிதம்.
சோழர்களின் வாழ்வும், வரலாறும் சபிக்கப்பட்ட ஆசிர்வாதம் என்று ஏற்கனவே பலமுறை எழுதி இருக்கிறேன். தஞ்சை பெருவுடையார் கோயில் பற்றிய என்னுடைய முந்தைய பதவில்கூட இதை குற்பிட்டு இருக்கிறேன்.
பாகுபலி திரைப்படம் ஒரு கற்பனைக் கதை. அதன் கதாபாத்திரங்களை செறிவூட்டப்பட்ட கோழியை போல எப்படி வேண்டுமென்றாலும் உருவகபடுத்திக் கொள்ளலாம். ஆனால், நிஜத்தில் உலகின் மாபெரும் நிலப்பரப்பை கட்டியாண்ட ஒரு பேரரசை பற்றி புத்தகம் எழுதவோ அல்லது திரைப்படமாக எடுக்கவோ முற்படும் போது பல்வேறு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது .