கர்நாடக மாநிலம் ஹம்பி நகர் தூண்களில் உள்ள கண்ணப்பர்
படம்: நண்பர் அருண்காளி ராஜா
|
விதியின் படி நாம் விரும்பும் ஒரு சில விஷயங்கள் எதாவது ஒரு குறியீட்டின் மூலம் நம்முடன் இணைக்கப்பட்டு விடுகின்றன. இப்படி இணைக்கப்படும் விஷயங்கள் மீது நமக்கான பிடிப்பு தீராக் காதலாகவே மாறிவிடுகின்றது.
மகாபாரத்தில் அர்ஜுனன் சாபம் பெறுதல் :
மகாபாரதக் கதைகளை கேட்க தொடங்கியது முதல் எனக்கு பிடித்த பாத்திரம் அர்ஜுனன். மாவீரன். கர்ம வீரன். அண்ணன் சொல்லுக்கு கட்டுப்படும் தனயன். எல்லாவற்றிற்கும் மேலாக மாபெரும் சிவ நேசன். பிரமரால் உருவாக்கப்பட்ட காண்டீபம் என்னும் வில்லை, அர்ஜுனன் ஈசன் பால் கொண்ட பக்தியால் அவனுக்கு அதை கிடைக்க செய்தார் ஈசன். மகாபாரதப் போரை வெல்ல பாசுபதாஸ்திரம் மிக அவசியம் என்பதை உணர்த்த அர்ஜுனன், அதை பெற சிதம்பரம் அருகே உள்ள திருவேட்களத்தில் சிவனை பிரதிஸ்ட்டை செய்து தவம் புரிகிறான். அப்போது காட்டுப் பன்றி ஒன்று அவன் தவத்தில் இடையூறு செய்யவே, நானெய்தி அந்த பன்றியை கொள்கிறான். இறந்த பன்றியின் அருகில் சென்று பார்க்கும் போது இன்னொரு வேடனின் அம்பும் அந்த பன்றியை கொன்றிருந்தது. இருவருக்கும் வாகு வாதம், யார் அம்பு முதலில் பன்றி மீதேறியது என்பதில். அப்போது அர்ஜுனன் அந்த வேடுவனின் குலத்தை சொல்லி திட்டிவிடுகிறான். அடுத்த பிறவியில் அர்ஜுனன் வேடுவனாக பிறக்க சபிக்கிறான்.
கண்ணப்பர் சிவன் பால் கொண்ட காதல் :
சென்னை அருகே திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக் கோயில் தூணில் கண்ணப்பர் . |
சிவ தொண்டாற்றிய 63 நாயன்மார்களின் கதைகளை சிறு வயதில் பெரியவர்கள் கூற கேட்டு இருப்போம். ஒவ்வொரும் தங்களால் இயன்ற அளவு ஈசன் பால் கொண்ட பக்தியை செலுத்தியுள்ளனர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர், மெய்கண்டார், இசைஞானியர், திருநாளைப் போவார் என 63 அறுபத்து மூவரின் பக்தியும் அளவிட முடியாத ஒன்று. அவர்களில் சிறு வயது முதலே என்னைக் கவர்ந்தவர் கண்ணப்பர். கண்ணப்பர் கல்வி பயின்றது இல்லை. வேதங்கள் படிக்கவில்லை. சிவ வழிபாட்டு முறைகளை அறிந்தவரில்லை. அவருக்கு தெரிந்தவை எல்லாம், அவர் வசிக்கும் காட்டில் ஈசன் இருக்கிறார். தினமும் வேட்டையாடும் பொருளை ஈசனுக்கு அர்ப்பணித்து உண்ணும் பழக்கம் இருந்தது. அந்த அளவில் தான் ஈசன் மீது பற்று ஏற்பட்டு இருந்தது. ஒரு நாள் லிங்கமாய் நின்ற ஈசனின் கண்ணில் குருதி வடிவதை பார்த்து தாளாமல் தன் கண்ணயே ஈசனைக்கு பரிசாக அளித்த பக்திமான்.
"கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்றூதாய் கோத்தும்பீ "
என்று எட்டாம் திருமுறையில் மாணிக்கவாசகப் பெருமானாலேயே வியந்து பாடப் பெற்று இருக்கிறார் கண்ணப்பர். கண்ணப்பர் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி அருகே பிறந்தவர் என்றாலும் ஆந்திர, கர்நாடக, தமிழ்நாடு மாநில கோயில்களில் அவரின் சிறப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
நம்ம கதை :
அணைத்து சிவ ஆலயங்களிலும் 63 நாயன்மார்களின் சிலைகள் வைக்கப்பட்டு, அவர்களின் பிறப்பு விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும் |
திருவேட்களத்தில் அர்ஜுனன் பெற்ற சாபத்தின் பெயரால், அடுத்த பிறவியில் அவன் பெற்ற பிறப்பே கண்ணப்பர். என்ன தான் சாபம் பெற்றாலும் தன் பிள்ளையை விட்டுக் கொடுத்து விடுவாரா அப்பன்? அடுத்த பிறவியில் தனக்கு கண் கொடுக்கும் பெரும் பேரு அர்ஜுனனுக்கு அளித்தார் ஈசன். மகாபாரதக் கதையில் என் இஷ்ட பாத்திரம் அர்ஜுனன், நாயன்மார்களில் இஸ்டமனாவர் கண்ணப்பர். இருவரும் பெரும் சிவ தொண்டர்கள். இவர்களுக்கு இடையேயான தொடர்பு சமீபத்தில் தான் அறிய முடிந்தது. மேலும் கண்ணப்பர் நான் பிறந்த அதே மிருகசிரீஷ நட்டச்த்திரத்தில் பிறந்தவர். இந்த அளவிலான ஒற்றுமையும் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் நான் அறிந்து கொண்டேன். அப்பனுக்கு தெரியாதா பிள்ளைகளை எங்கே, எப்படி, எவ்வாறு இணைத்துக் கொள்ள வேண்டும் என்று. அவன் அன்றி ஒரு அணுவும் இல்லை. பிறகு எங்கே அசைவது. திருச்சிற்றம்பலம்.