Tuesday, March 17, 2015

காலம் போற்ற வேண்டிய கலை - தெருக்கூத்து


         தமிழகத்தின் வடமாவட்டங்களான கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் ஒரு காலத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஒரு கலை தெருக்கூத்து. சங்க காலத்திலும்  வடதமிழகத்தில் இருந்து தெற்க்கே சென்று கூத்து கட்டி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த கலையின் சிறப்பம்சம் என்னவெனில் கூத்து கட்டுபவர்கள் தாங்களே பாடல்களைப் பாடி, ஆடி, வசங்களை பேசி நடிக்க வேண்டும். வெறும் கதாகலாட்சேபமாக  மக்களுக்கு விஷயங்களை சொல்வதைவிட இடையிடையே  பாடல்களையும், நகைச்சுவையையும்  வைத்தால் இன்னும் சிறப்பாக அமையும் என்பதே கூத்தின் பெருமை.  மேடை அமைப்புகளோ , கண்ணை பறிக்கும் விளக்குகளோ கூத்துக்கு தேவையில்லாத ஒன்று. நான்கு தெருக்கள் கூடும் இடத்தில்கூட இவர்களால் அற்புதமாக அரங்கேற முடியும். 
                              

அரங்க அமைப்பு என்று பெரிதாக எதுவும் தேவையில்லாத நிலையிலும், இதற்கான ஒப்பனை தான் சிறிது கடினம். ஏனென்றால் ஒப்பனையையும் அந்த நடிகர்களே செய்துகொள்ள வேண்டும். கூத்துகளில் என்னை மிகவும் கவர்ந்தது அவர்களின் ஒப்பனைதான். ராஜா  வேடத்திற்கு அவர்கள் செய்யும் அந்த ஒப்பனையில் அப்படி ஒரு கம்பீரம் தெரியும். பொதுவாக ராஜா  கதைகளே கூத்தின் கருவாக இருக்கும். ஒன்று அல்லது இரண்டு கட்டயக்காரர்கள் கதையில் இருப்பார்கள். நகைச்சுவையில் இவர்களின் பங்கு மிகுதியாக இருக்கும். ஒரு நேரங்களில் கோமாளிகளையும்(joker) பயன்படுத்துவது உண்டு. பாடிகொண்டே ஆடுவதென்பது எத்தகைய கடினம் என்று நாம் அனைவருக்கும் தெரியும். அந்த கலைஞர்கள் பாடி ஆடிவிட்டு நின்றவுடன், அடுத்த வசனத்தைப் பேசி நடிக்க வேண்டும். வண்டி வண்டியாக இவர்களுக்கு இசை வாத்தியங்கள் தேவை இல்லை. ஹார்மனியம், மிருதங்கம், ஜால்ரா, பீப்பி அல்லது நாதஸ்வரம் இவையே கூத்தின் சிறப்பைக் கூட்டும். அந்த அளவிற்கு அதனை வாசிப்பார்கள். "வந்தேனே... " என்று வாத்தியார் தொடகும்போது இசையில் இருக்கும் ஸ்ருதி கூத்து முடியும்வரை தொடரும். அனைத்து நடிகர்களுக்கும் அனைத்து கதாபாத்திரங்களின் பாடல்களும் தெரிந்து இருக்கும். தங்களின் பகுதி நிறைவுபெற்றவுடன் வாத்தியாருடன் சேர்ந்து chorus பாட வேண்டும். ஆடல் பாடலுகிடையே வசனமும், வசனதிற்கிடையே ஆடல் பாடல் என கூத்து களைகாட்டும். மேடை நாடகங்களைப்போல் ஒன்றரை அல்ல இரண்டு மணி நேரத்தில் முடிவதல்ல கூத்து. இரவு ஒன்பது மணிக்கு தொடங்கினால் காலை ஐந்து மணிவரை என எட்டு மணி நேரம் தொடர்ச்சியாக நடக்கும். 

             நமது ஊரில் நடக்கும் கோயில் திருவிழாக்களில் காப்பு கட்டிய தினத்திலிருந்து திருவிழா முடியும்வரை ஒன்பது அல்லது பத்து நாட்களும் கூத்து நடத்துவது வழக்கம். கர்ண மோட்சம், ஹரிச்சந்திரா புராணம், கம்ச வதம், சூரபத்மன் வதம், வள்ளி - முருகன் திருமணம் ஆகியவை மிகவும் பிரபலம். எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் உள்ளதால் பரசுராமர் காலத்தில் மாரியம்மன் எப்படி தோன்றினார் என்பதைப் பற்றி திருவிழாவின் கடைசி நாளில் நடைபெறும். கூத்து நடைபெறும் ஊரின் சிறப்புக்கேற்ப நாடகம் அமைத்துக் கொடுப்பது கூத்து கலைஞர்களின் சிறப்பம்சம். அந்த கால தமிழ் சினிமாவின் பல்வேறு திரைப்படங்கள் கூத்துக் கதைகளைத் தழுவியே எடுக்கப்பட்டு இருக்கின்றன. 1944-ல் வெளிவந்த ஹரிச்சந்திரா, 1958-ல் காத்தவராயன் ஆகிய படங்களில் கூத்துகளில் வருவது போன்று பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கும். மூன்று மணி நேரத்திற்கு மேலாக படம் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் சென்னையில் பிறந்து வளர்ந்த இந்த காலத்து இளைஞர்கள் கூத்துகளை பார்த்திருக்கும் வாய்ப்பே இருந்திருக்காது. சென்னையில் சில காலம் நடைப்பெற்ற சங்கமம் நிகழ்ச்சியில் பார்த்திருந்தாலொழிய வேறு வழி இல்லை. பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் திருவிழாவின்போது ஊருக்கு செல்லுகையில் ஒரு நாள்கூட கூத்து பார்க்காமல் இருந்து விடக்கூடாதென்ற எண்ணம் இருக்கும். முதல் வரிசையில் பாயை விரித்து இடம் பிடித்து கூத்து பார்க்கும் சுகமே தனி. அங்கே பார்பதை முடிந்தவரை பள்ளி விடுதியில் நண்பர்களுக்கு நடித்துக்காட்டும் முயற்சியும் நடந்திருக்கிறது. 
         
        இத்தகைய சிறப்புமிக்க கூத்து கலைக்கு சிலகாலமாக வரவேற்ப்பு இல்லாமல் இருந்து வருகிறது. திருவிழாக்களை  பாட்டு கச்சேரிகளும், டிவி புகழ் நடிகர்களும் சிறப்பு நிகழ்சிகளும் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டன. ஏதோ சம்பிரதாயதுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூத்தை வைத்து முடித்துவிடுகிறார்கள். சமீபத்தில் சென்னையில்  காஞ்சிபுரம் மாவட்டம் புரஞ்சரசந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கட்டை கூத்து குருகுலத்தின் திரௌபதி குறவஞ்சி கூத்தைக் காண வாய்ப்புக் கிடைத்தது.  அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் பல ஆண்டுகளுக்கு முன் கூத்து பார்த்த அதே அனுபவம். அதே சந்தோஷம். அதில் நடித்தவர்கள் அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள். என்ன ஒரு நேர்த்தி, என்ன ஒரு வேகம், என்ன ஓர் சக்தி அந்த சிறார்களிடம்.  கட்டயக்காரர்களாக வந்த அந்த இரண்டு சிறுவர்களின் நடிப்பு அற்புதம். துரியோதன மகாராஜாவாக வந்தவர் நான் சிறு வயதில் நாடகங்களில் பார்த்த பல்வேறு ராஜபாட்டைகளை நினைவுபடுத்தினார். அவரின் சமயோச்சித்த நடிப்பு அட்டகாசம். கூத்து முடிந்த பிறகும் அவர் அந்த பாத்திரத்திற்கு உரிய நடத்தையுடனே  காணப்பட்டார். 


குறத்தியாக வந்த பெண்ணின் நடிப்பை சொல்லல வார்த்தைகளே இல்லை. பரம்பரை பரம்பரையாக கூத்து கட்டும் கலைஞர்களின் பக்குவமும், வேகமும் அவரின் நடிப்பில்  வெளிப்பட்டது. குரலில் என்ன ஒரு கம்பீரம். வழக்கமாக கூத்துகளில் ஆண்களே பெண் வேடம் ஏற்று நடிப்பது வழக்கம். ஆனால் இந்த குழுவினரின் முயற்சி புதியது. நல்ல பலனும் கிடைத்து இருக்கிறது. எட்டு மணி நேரம் நடக்கக்கூடிய திரௌபதி குறவஞ்சியை இரண்டு மணி நேரத்தில் முடியும்படி அற்புதமாக இயக்கி இருந்தனர்.
                                      

அனைத்து பெருமைகளும் இந்த குருகுலத்தின் நிறுவனர்களான திரு. ராஜகோபால் மற்றும் அவரின் மனைவி திருமதி.ஹன்னா ஆகியோரையேச் சேரும். மறக்கப்பட்டு வரும் ஒரு கலையில் வருங்காலத் தலைமுறையை ஈடுபடுத்தி அவர்களின் கலை ஆர்வத்தை வளர்க்கும் இவர்களின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்.  ஒவ்வொரு ஆண்டும் கட்டைகூத்து  குருகுலத்தில் தெருக்கூத்து  விழா நடத்தி வருகிறார்கள். கலை ஆர்வம் உள்ள அனைவரும் தெருக்கூத்து போன்ற கலைகளை ஊக்குவிக்க வேண்டும். இவர்களைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள www.kattaikkuttu.org என்ற இணைய முகவரியை கிளிக்குங்கள்.

Chat Box